இந்தியாவின் பெருமைகள் அறிவேன்...

நாசாவில் இந்திய பெண் விஞ்ஞானி சுவாதி மோகன் பெருமையின் பாதை
இந்தியாவின் பெருமைகள் அறிவேன்...

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானியான சுவாதி மோகன், சென்னைக்கு அண்மையில் வந்திருந்தார். செவ்வாய்க் கிரகத்துக்கு நாசா அனுப்பி வைத்த விண்கலமான "ரோவர் பெர்சிவெரன்ஸ்' செயல் திட்டத்தில் முக்கிய பங்காற்றிய அவருடன் ஓர் சந்திப்பு:

உங்கள் குடும்பப் பின்னணி..?

என் பெற்றோர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள். எனக்கு ஒரு வயதானபோது, அவர்கள் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர். நான் வளர்ந்தது, கல்வி கற்றது எல்லாம் அமெரிக்காவில்தான். தற்போது நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகிறேன்.

விண்வெளித்துறையில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

குழந்தைகள் மருத்துவராக ஆசைப்பட்டேன். என்னுடைய 16-ஆம் வயதில் அறிவியலில் பல்வேறு விஷயங்களையும் ஆசிரியர்கள் விளக்கிச் சொன்ன விதம், பொறியியல் துறையின் பக்கம் ஈர்ப்பை ஏற்படுத்தியது. அதுவே, பின்னாளில் விண்வெளித் துறையில் நுழைவதற்கு வழிவகுத்தது.

ஒன்பதாம் வயது முதலே தொலைக்காட்சியில் டார் டிரெக் அறிவியல் புனைக்கதை தொடர்களை ஆர்வத்துடன் பார்ப்பேன். விண்வெளி எப்பேர்பட்ட பிரம்மாண்டமான இடம் என வியந்தேன். பின்னாளில் நானே விண்வெளி விஞ்ஞானியாக நாசாவில் பணியாற்றுவேன் என்பதை கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.

நாசாவில் பணியாற்றும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

பள்ளிப் படிப்பை முடித்தவுடன், அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல், ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங்கில் பட்டப் படிப்பை முடித்தேன். தொடர்ந்து மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் வானூர்தி பொறியியலில் (ஏரோநாடிக்ஸ் எஞ்ஜினீயரிங்) முதுகலைப் பட்டமும் பெற்றேன். அங்கேயே விண்வெளி அறிவியலில் (அஸ்டிரானாடிக்ஸ்) முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியை முடித்தேன். அதன்பின்னர், நாசாவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

உங்கள் பணி எத்தகையது?

நாசாவின் செவ்வாய்க் கிரகத் திட்டத்தில் விண்கலத்தை வழி செலுத்துதல், கட்டுப்பாடுகள், செயல்பாடுகள் பிரிவின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தப் பிரிவு, செவ்வாய்க் கிரக விண்கலத்தில் கண்களும், காதுகளும் போல என்று சொல்லலாம். செவ்வாய்க் கிரகத்தை நோக்கி விண்கலம் பயணிக்கும்போது, அதனை நாங்கள் நுணுக்கமாகப் பின்தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

விண்வெளியில் விண்கலம் சரியாகப் பாதையில் பயணிப்பதை உறுதி செய்தல், விரும்பும் இடத்துக்கு விண்கலத்தை கொண்டு செல்லுதலைக் கண்காணித்து, தேவைக்கேற்ப கட்டளைகள் வழங்குதல் என மிக முக்கியமான பணிகளைக் கவனிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தில் விண்கலத்துக்கும் மற்ற திட்டப் பணிகளுக்கும் இடையே தகவல் தொடர்புக்கான முதன்மை புள்ளியாக நான் இருக்கிறேன். விண்கலத்தை வழி செலுத்துதல், கட்டுப்பாடுகள், செயல்பாடுகள் குழுவினருக்கான பயிற்சி, பணி கட்டுப்பாட்டு அறையில் கடைபிடிக்கப்படும் கொள்கைகள், செயல்முறைகளுக்கும் நான்தான் பொறுப்பு.

2013-ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத் திட்டம் துவங்கியது. அதன் ஆரம்பக் கட்டத்தில் இருந்தே நான் பணி செய்து வருகிறேன். நாசாவின் இன்னும் சில முக்கிய திட்டங்களிலும் பணியாற்றிய அனுபவம் உண்டு.

செவ்வாய்க் கிரகத்தில் "ரோவர்' விண்கலம் தரையிறங்கிய தருணத்தில் எப்படி இருந்தது உங்கள் மனநிலை?

விண்கலம் தரை இறங்கத் தொடங்கியது முதலே திட்டம் வெற்றி பெற வேண்டும் என பதற்றம் நிலவியது. விண்கலம் பத்திரமாக, தரை இறங்கியதை உணர்ச்சி பொங்கச் சொன்னதும் குழுவினருக்கு மகிழ்ச்சி பொங்கியதையும் வாழ்நாளில் மறக்க முடியாது.

எங்கள் குழுவில் இருந்த அனைவருக்குமே அந்தச் சாதனையில் பங்கு உண்டு. எல்லோரும் முழுமையான ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வோடும் பணியாற்றினோம். நாங்கள் செய்த சிறிய தவறுகளில் இருந்தும் நாங்கள் பாடம் கற்றுக் கொண்டோம். எங்களுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் எல்லோரும் ஒரு குடும்பம் போல ஒருங்கிணைந்து பணியாற்றியதுதான் வெற்றியின் அடித்தளம்.

சந்திரயான் திட்டமும், பெண் விஞ்ஞானிகள் குறித்து..?

சந்திரயான் என்பது விண்வெளியில் இந்தியா படைத்துள்ள மிகப் பெரும் சாதனைதான். அதில் ஏராளமான இந்திய பெண் விஞ்ஞானிகள் பங்களித்திருக்கிறார்கள் என்பதில், அனைவருமே பெருமைப்பட வேண்டிய விஷயம்.

உங்கள் குடும்பம் குறித்து..?

என் கணவர் சந்தோஷ், குழந்தைகள் மருத்துவர். இரு பெண் குழந்தைகள்.

எனது பெற்றோர் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் மாறி, மாறி வசிக்கிறார்கள். நானும் அவ்வப்போது இந்தியாவுக்கு வருவேன். நான் அமெரிக்காவில் வளர்ந்தாலும், என் பெற்றோர்கள் இந்தியாவின் பெருமைகளை சொல்லி வளர்ந்தனர். நான் எந்த அளவுக்கு அமெரிக்கரோ அதே அளவுக்கு இந்தியரும் கூட!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com