மனிதம் மட்டும் இங்கே மலிவு!

வாழ்வின் மாயங்களை உணர்த்தும் 'பருத்தி'
மனிதம் மட்டும் இங்கே மலிவு!

எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களை கடந்த சினிமா எங்கேயும் இல்லை. அனுதினங்களின் எதார்த்தங்களில் இருந்து கதையைப் பிரிக்கவே முடியாது. ஒரு வாழ்வின் மணமும் குணமும் நிரம்பியிருந்தால், அதுதான் உலகத் தரம்.'' சினிமாக்களின் அடிப்படையை அளந்து பேசுகிறார் இயக்குநர் குரு. இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர். ஏற்கெனவே "வளையல்' படத்தின் மூலம் நல்ல அறிமுகம் உள்ளவர். இப்போது "பருத்தி' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.

தலைப்பின் வழியா எதுவும் சொல்ல வர்றீங்களா...

கதையின் மனசாட்சியை ஒரு தலைப்பு பிரதிபலிக்க வேண்டும். அதற்காகத்தான் இப்படியொரு தலைப்பு. பருத்தி கரிசல் பூமியின் அடையாளம். வெயில் படுகிறபோது வெடிக்கிற சுபாவம் கொண்டது. அதை கோபத்தின் வெளிப்பாடாகவும் பார்க்கலாம். அதற்காகவே இந்தத் தலைப்பு. காந்தியும் ஹிட்லரும் ஒரே வீட்டில் இருந்தால் எப்படியிருக்கும். அப்படி எழுகிற ஒரு சூழலை கடக்கிற சில மனிதர்களின் கதைதான் இது. முக்கியமாக கணவனை இழந்த பெண்ணுக்கு இந்த சமூகம் தருகிற வலியும், வேதனையும்தான் களம். சந்தோஷத்தை எதிர் கொள்கிற அதே நேரத்தில், உண்மையைப் பார்த்தால் மனுஷக்கு அவ்வளவு பயம். இதுதான் வாழ்வின் பெரும் சவால். சந்தோஷத்தை அடைவதற்காக ஒரு பொய் சொல்கிறோம். அது அந்த நேரத்தில் அழகா இருக்கும். கீரிடமாக ஜொலிக்கும். ஆனால், உண்மை அம்மணமாக நிற்கும். ஒரு கட்டத்தில் ஏசுநாதர் தலையில் இருந்த முள் கீரிடம் மாதிரி குத்தும். அதனால்தான் உண்மையை கண்டு ஓடி ஒளிகிறோம். சந்தோஷம் மட்டுமே கண்ணுக்கு தெரிய, பொய் துரத்த... உண்மை நெருக்க... பலர் சாமியாராக திரிகிறாரகள். சிலர் பைத்தியமாகிறார்கள். என்னை கேட்டால் உண்மையை நேருக்கு நேர் சந்திக்கிற தைரியம்தான் வாழ்க்கை. அது வலிக்கும். உசுரை எடுக்கும். ஆனால், அதுதான் சரி. இப்படி ஒரு அனுபவம் இங்கே சிலருக்கு கைக் கூடி வருகிறது. அதை ஒரு வாழ்வின் வழியே கடத்தியிருக்கிறேன். இது முழுக்க முழுக்க நான் உணர்ந்த அனுபவம். அதில் கொஞ்சம் கற்பனை கட்டியிருக்கிறேன்.

உள்ளடக்கம் பற்றி பேசினால் இன்னும் கொஞ்சம் தெளிவு பிறக்கும்...

இன்றைய சினிமா மிகவும் துணிச்சலாக பேச வேண்டிய விஷயம் இது. இமேஜூக்குள் நின்று பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதனால்தான் ஒரு கை பார்ப்போம் என இறங்கி வந்து விட்டேன். ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்துக்கு பொறுப்பாகி விடுகிறோம். பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறி விட்டன. இன்னும் சில காலங்களில் பண்பாடு, கலாசாரங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கப் போகிறோம். பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதைத் தெரிந்துக் கொண்டு எத்தனை பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது சமூகம். இதனால் சொல்ல முடியாத தவிப்பில் இருக்கிறார்கள் பெண்கள். சிக்னலில் கார் துடைத்து விடும் சிறுமிக்குப் பின்னால் எத்தனை ஒரு ரணம் இருக்கும். நள்ளிரவில் பைக் மறிக்கும் விலை மாதுவுக்குப் பின் ஒரு ரம்மியமான காதல் இருந்திருக்குமோ. வறுமை, ஆதிக்க சக்திகளின் பண பலம் என நிறைய விஷயங்கள் இதன் பின்னணியில் உண்டு. இந்தியாவின் வல்லரசு கனவு... சந்திரனுக்கு விண்கலம் என பெருமைகளை பேசிக் கொண்டிருக்கிற நாம், இன்னொரு பக்கம் ரணங்களை உள்நோக்கி பார்ப்பதில்லை. அப்படி ஒரு பார்வை இது முன் வைக்கும். பெண் கொடுமைகளுக்கு எதிரான தீர்க்கமான ஒரு அரசியல் பார்வையும் இருக்கிறது.

கதையின் வழியாக சொல்ல வருவது....

வறுமையால் தடம் மாறி செல்லும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவை பொருத்தவரை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பெண்களைப் போகப் பொருளாக்கி அவர்களை தங்களின் முன்னேற்றுத்துக்கு பயன்படுத்தும் முதலாளிகளின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. பாலியல் தொந்தரவு இல்லாத நாடு என்பது மகாத்மா காந்தியின் கனவுகளில் ஒன்று. ஆனால், இன்றைய இந்தியாவில் பாலியல் தொந்தரவு செய்திகள் என்பது வழக்கத்துக்குரிய ஒன்றாகி விட்டது. இப்படி ஒரு பெண் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தின் தழுவலாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இப்படிப்பட்ட சமூக அவலத்தைச் சொல்லி பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் படத்தின் நோக்கம். ஒசூர் பக்கம் தேன்கனிகோட்டைதான் களம். வயிற்றுப் பசிக்குத்தான் பணம். நாக்கு ருசிதான் முக்கியம் என்கிற போது, பணத்தின் மீது நமக்கு வெறியாகிறது. எல்லாவற்றுக்கும் விலை வைக்க ஆரம்பித்ததால்தான் மனிதம் மட்டும் மலிவாகி விட்டது.

சோனியா அகர்வால்... என்ன சிறப்பு...

முழுப் படத்தையும் தன் தோள்களில் தாங்கி பிடித்து வந்திருக்கிறார் சோனியா அகர்வால். முழுப் படத்தையும் பார்த்து விட்டு தேம்பி தேம்பி அழுதார். " நல்ல விதமாக கொண்டு சேர்த்து விடுங்க...' என மனதார வாழ்த்தினார். இதுவே எனக்கு முதல் வெற்றி. ரிஷி, குட்டிப் புலி சரவண சக்தி இவர்களுடன் பல புதுமுகங்கள். எல்லோருக்கும் நல்ல மனசு உண்டு. கதையையும், அதன் தன்மையையும் புரிந்துக் கொண்டு துணைக்கு வந்தார்கள். அனைவரும் கதைக்கும் எனக்கும் அவ்வளவு பொருந்தி வந்தார்கள். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தாங்கிப் பிடிக்கிறவர்கள் அவ்வளவு அருமை. இவர்களின் பெரும் பயணத்தின் அத்தாட்சியாக இது இருக்கும். லட்சக்கணக்கான மக்களைச் சென்று சேரக் கூடிய சினிமாவுக்கான பொறுப்பை உணர்ந்து உழைத்திருக்கிறேன். எல்லாம் ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com