மீன் வளர்ப்போர் கவனத்துக்கு...

மீன் தொட்டிகள் அலங்காரம்: அழகும் ஆனந்தமும்
மீன் வளர்ப்போர் கவனத்துக்கு...

பலர் தங்களது வீடுகளில் மீன்கள் வளர்ப்பதற்கு காரணம் அது அழகாகவும், பார்ப்பதற்கு மன அமைதியைத் தருவதாகவும் இருப்பதே! ஒருசிலர் வீட்டில் மீன்கள் வளர்ப்பதால் ஐஸ்வரியம் பெருக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. மீன் தொட்டிகளை அலங்கரிப்பது, வீட்டை அழகாகவே காட்ட உதவுகிறது.

மீன் தொட்டிகளை அலங்கரிக்க சில ஆலோசனைகள்:

கோரல் டேங்க்:

வீட்டின் அறை பெரிதாக இருந்தால், கோரல் டேங்க் எனப்படும் பவளப்பாறை அலங்காரம் செய்த மீன் தொட்டியை பெரிதாக வைப்பது, வீட்டின் தோற்றத்தை எரிச்சலாகக் காட்டும். கடைகளில் செட்டாகவே இந்தத் தொட்டிகள் கிடைக்கின்றன. இந்த வகை தொட்டியில் குறைவான மீன்கள் இருந்தால் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். வண்ணங்கள் நிறைந்த அறையில் இதை வைப்பது மிகப் பொருத்தமாக இருக்கும். கடலின் நீல நிறத்தில் லைட்டிங் அமைக்கலாம்.

ரூட் டேங்க்:

இந்த வகையான அமைப்பு கொண்ட மீன் தொட்டிகள், மரத்தின் வேர்கள் நீருக்கடியில் ஊடுருவி வளர்வது போன்ற டிசைன்களில் இருக்கும். இது அடர்ந்த வனப் பகுதிகளில் ஓடும் ஆற்றின் கீழ், சிறிய கற்களில் வேர்கள் பரவி தெளிவான நீராக இருப்பதைப் போன்று அமைக்கப்படுவதால், காடு / இயற்கை பிரியர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதில் மீன்கள் அங்கும் இங்கும் செல்வதைப் பார்க்கையில் உண்மையான காட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும்.

பிளாண்ட் டேங்க்:

வீட்டுக்குள் அழகான, பசுமையான உணர்வை அதிகரிக்க விரும்பினால், இந்த டிசைன் மீன் தொட்டிகள் வைக்கலாம். புற்கள், கொடிகள், சிறிய மரங்கள், செடிகள் போன்றவற்றை இதில் வைத்து அலங்கரிக்கலாம். ஆனால், இதுபோன்ற தொட்டிகள் மற்றவற்றை விட, அதிகம் கவனம் தேவைப்படுபவை ஆகும். செடிகளை அவ்வப்போது மாற்றாமல் விட்டுவிட்டால், அதிகமாக வளர்ந்து விட வாய்ப்பிருக்கிறது.

ஐலேண்ட் டேங்க்:

தனிமையை விரும்புவோருக்கு ஐலேண்ட் (தீவு) டிசைன் பிடித்தமான தேர்வாக இருக்கும். இது பார்ப்பதற்கு அமைதியாகவும், தனிமை உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்கும். வசதிக்கேற்ப தீவுகளின் அளவை வைக்கலாம். குட்டி மலைகளுடன், மரம், செடி இருப்பது போன்று அமைக்கலாம். கடைகள் அல்லது அலுவலகங்களில் வைப்பதாக இருந்தால், தீவுகளில் நிறைய வண்ணங்கள் இருப்பதாக அமைத்தால் பொருத்தமாக இருக்கும். வண்ணங்கள் நிறைய இருந்தால் பெரிய மீன் ஒன்று அல்லது இரண்டு போதுமானது.

வீட்டு மீன் தொட்டியில் உள்ள மீன்களைப் பார்த்து ரசிப்பதும் மனதுக்கு ஆனந்தத்தை தரும். அவை அமைதியான சூழல் உருவாகி, கவலையும் மன அழுத்தமும் குறையும். ஏனெனில், மீன்களை நாம் கவனிப்பதும் ஒரு வகையான சிகிச்சை முறையாக உள்ளது. மீன் தொட்டிகளைப் பார்ப்பதில் நேரத்தைச் செலவிடுபவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வும் மேம்படும். தொட்டியில் நீந்தும் மீன் நேர்மறை உணர்வலைகளை வெளியிடுவதாக நம்பப்படுகிறது.

-சௌமியா சுப்ரமணியன், பல்லாவரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com