மகிழ்ச்சியான தருணங்கள்!

அம்பானி திருமண விழா: சர்வதேச பிரமுகர்களுக்கு தென்னிந்திய விருந்து!
மகிழ்ச்சியான தருணங்கள்!

உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மர்சென்ட் திருமணம் ஜூலை மாதத்தில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக மார்ச் தொடக்கத்தில் குஜராத்தின் ஜாம் நகரில் அம்பானி குழுமம் 400 ஏக்கரில் உருவாக்கியிருக்கும் நவீன நகரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள், பில்கேட்ஸ், மார்க் சூக்ர்பெர்க் உள்ளிட்ட மேற்கத்திய பிரபலங்கள் பங்கேற்ற கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. விருந்தினர்களுக்கு தென்னிந்திய உணவுகளான இட்லி, தோசை, வடை என்று சுடச்சுட அறுசுவை அரசு

நடராஜனின் மகன் ஸ்ரீதர் தலைமையிலான அறுசுவை கேட்டரிங் குழுவினர் வழங்கிப் பாராட்டுகளைப் பெற்றனர். அவருடன் ஒர் சந்திப்பு:

அம்பானி குடும்ப நிகழ்ச்சியில் நீங்கள் உணவு தயாரிப்பது இதுதான் முதல் முறையா?

பன்னிரெண்டு ஆண்டுகளாக அவர்களது குடும்ப நிகழ்ச்சிகளுக்கு உணவுகளைத் தயாரித்து வழங்கி இருக்கிறோம். சென்னையில் வசிக்கும் முகேஷ் அம்பானியின் சகோதரி நீனா கோத்தாரியின் இல்லத்தில் ஒருமுறை இந்திய கிரிக்கெட் அணியினர் 25 பேருக்கு தென்னிந்திய விருந்து தயாரித்துக் கொடுத்ததுதான் தொடக்கம். அதன் பிறகு, அவரது மகள் திருமணம் ஐ. டி. சி. கிராண்ட் சோழாவில் நடைபெற, அவர்களுடைய சமையல் கூடத்தையே பயன்படுத்தி, தலை வாழை இலையைப் போட்டு நம் ஊர் விருந்தை வழங்கினோம். அதன்பின்னர், அம்பானி குடும்பத்தில் சென்னையிலோ, மும்பையிலோ எந்த விசேஷம் என்றாலும் நாங்கள்தான் உணவுகளைத் தயாரித்துக் கொடுத்து வருகிறோம்.

ஆனந்த் அம்பானி திருமண நிச்சயதார்த்தத்துக்கு எப்படி உங்களைத் தயார்படுத்தினீர்கள்?

ஜாம் நகரில் மூன்று நாள் கொண்டாட்டத்தில், சைனீஸ், பிரெஞ்ச், இத்தாலிய, ஜப்பானிய, கொரிய, தாய்லாந்து என பல சர்வதேச உணவுகளும், காஷ்மீரி, குஜராத்தி, ராஜஸ்தானி, தென்னிந்திய உணவு வகைகளும் இடம்பெற்றன.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்த விருந்தினர்களுக்கு இரவு- பகல் பார்க்காமல் எந்த நேரத்தில், எது கேட்டாலும் உடனே தயாரித்து கொடுக்கப்பட்டன. இதில், தென்னிந்திய உனவு வகைகளைத் தயாரித்துக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஜனவரி மாதத்திலேயே ஒப்படைத்து விட்டனர். மிகப் பெரிய சவாலான பணி. எனவே, நிதானமாகத் திட்டமிட்டு, திறமையாகச் செயல்பட்டு, கேட்டவர்களுக்கு கேட்டதையெல்லாம் கொடுத்து திருப்திப்படுத்த முடிந்தது.

எதிர்பார்த்தபடியே, இரவு ஒரு மணி, இரண்டு மணிக்கெல்லாம் கூட இட்லி, மசால் தோசை வேண்டும் என்று கேட்டனர். நாங்களும் சுடச்சுட செய்து கொடுத்தோம்.

அவரவர்கள் தாங்கள் தங்கி இருக்கும் அறையில் உள்ள உணவுப் பட்டியலைப் பார்த்து தங்களுக்குத் தேவையானதை சொல்வார்கள். யாருக்கு என்ன தேவை என்று கேட்டறிந்து எங்களிடம் சொல்லவும், அவற்றை நாங்கள் சமையல் கூடத்தில் செய்து கொடுத்தால், அதை எடுத்துக் கொண்டு போய் அவரவர்களுக்குக் கொடுக்கவும் ஏராளமான பணியாளர்கள் இருந்தனர். பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தனர்.

உங்கள் குழுவில் எத்தனை பேர் இடம்பெற்றிருந்தார்கள்?

பிப்ரவரி மாதத் தொடக்கத்திலேயே பத்து பேர் ஜாம் நகருக்குச் சென்றனர். திருமண வேலைகளைக் கவனிக்க அம்பானி குழுமத்தைச் சேர்ந்த பலர் அங்கே இருந்தனர். சுமார் ஒரு மாதம் அவர்களுக்கு இந்த உணவுகளைத் தயாரித்துக் கொடுத்தோம்.

கொண்டாட்டத்துக்கு சில நாள்கள் முன்பாக, நாற்பது பேர் சென்று தென்னிந்திய உணவுத் தயாரிப்புக்குப் பொறுப்பேற்றுக் கொண்டோம்.

'நிறைய ஐட்டங்கள் வேண்டாம். தென்னிந்திய ஐட்டங்களில் இட்லி, வடை, தோசை ஆகிய மூன்று மட்டுமே போதுமானது' என்று முன்னதாகவே சொல்லிவிட்டனர். எனவே, அவை ஒவ்வொன்றிலும் பல வெரைட்டிக்கள் கொடுத்தோம். இட்லி, மினி இட்லி, ரவா இட்லி, தட்டு இட்லி, கடுபு இட்லி, காஞ்சிபுரம் இட்லி, பொடி இட்லி என்று பல வகையான இட்லிகளைச் செய்து கொடுத்தோம். தோசையில் பன்னிரெண்டு வகை தோசைகள். மூன்று மணி நேரத்துக்கொரு தடவை புதுசாக மாவு அரைத்து, இட்லி, வடை, தோசை செய்து கொடுத்தோம். சட்னி, சாம்பாரிலும் பல வகைகள். விருந்து உண்டவர்களுக்கும் மிகுந்த திருப்தி; மகிழ்ச்சி.

எதிர்பாராத இனிய ஆச்சரியம் இருந்ததா?

திடீரென்று ரஜினிகாந்த் மனைவி லதா தோசை கேட்டபோது, அவரை நான் தொலைபேசியில் அழைத்து, தகவல் சொன்னபோது ஆச்சரியம் அடைந்தார்.

அவருடைய மகள் ஐஸ்வர்யாவுக்கும் விரும்பிய உணவுகளை அனுப்பி வைத்தேன்.

முக்கிய பிரமுகர் ஒருவருக்கு வடை அனுப்பியபோது, வழியில் அதைப் பார்த்துவிட்டு முகேஷ் அம்பானியுடன் இருந்த பில்கேட்ஸ் 'இது என்ன?' என்று விசாரித்திருக்கிறார். கூட இருந்த ஓபராய் ஓட்டல் செஃப், 'செளத் இன்டியன் ஸ்பைசி டோவ்நட்' என்று கூறியிருக்கிறார். வடையை வாங்கி ருசித்துப் பார்த்த பில்கேட்ஸ் , 'ரொம்ப ருசியாக இருக்கிறது! என்று கூறி தனக்கு வடை ஒரு செட் கேட்டார்.

'அம்பானி வீட்டில் நடந்த விருந்தில் தோசை தயாரித்துக் கொடுத்த தென்னிந்திய சமையல் கலைஞர்கள்தான் இங்கேயும் வந்திருக்கிறார்களா?' என்று நடிகர் ஷாருக்கான் கேட்டுவிட்டு, மசால் தோசை கேட்டார்.

அமிதாப் பச்சன் இட்லி கேட்கிறார்; ஐஸ்வர்யா ராய்க்கு ரவா தோசை! சல்மான்கானுக்கு மைசூரு மசால் தோசை ! என்று தகவல் வந்ததெல்லாம் சந்தோஷங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com