எல்லோரும் காமெடியன்கள் அல்ல!

சமூக நெறிகளை விமர்சிக்கும் 'சூது கவ்வும் 2'
எல்லோரும் காமெடியன்கள் அல்ல!

மனிதன் தோன்றிய காலத்திலிருந்து மென்மை, துரோகம், வன்மம், குற்றம் எல்லாம் இருந்து கொண்டே இருக்கிறது.

கொஞ்சம் சதவீதம் கூடிக் குறைந்து இருந்தால் நாமே நல்லவன், கெட்டவன் என்று பிரித்து சொல்லி விடுகிறோம். கெட்டவனாக இருந்தவனை நல்லவனாக ஆக்குவதற்கான முயற்சியும், அவனை வேறு திசைக்கு கொண்டு போகிற முயற்சிகளும் நடந்து கொண்டே இருக்கின்றன. அப்படி சிலரைப் பற்றிய கதை...' தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் எஸ்.ஜே. அர்ஜூன். 'சூது கவ்வும் 2' படத்தின் மூலம் கோடம்பாக்கம் வருகிறார்.

'சூது கவ்வும்' ஏற்கெனவே ஹிட் அடித்த கதை... இதிலும் அதே ஃபார்முலாதானா...

எல்லாவற்றையும் கடந்ததுதான் இந்த வாழ்க்கை. இவ்வளவு நீளமான ஐ.பி.எல். நடத்தி கல்லா கட்டுபவர்களை, பெட்ரோல், கேஸ் விலையை ஏற்றி விட்டு பி.எம்.டபிள்யூ காருக்கு வரி குறைப்பவர்களை, தேங்காய் பத்தைகளோடு இலவச மிக்ஸிக்கு காத்திருப்பவர்களை, இன்னும் ஐ.சி.யூ. காட்சிகளை வைக்கும் சீரியல்காரர்களை, தமிழ்நாட்டில் வறுமைக் கோடே இல்லை என்று அறிவிக்கும் அதிகாரத்தை, அத்தனை நாயர்களும் டீக்கடை போட்டு திரியும்போது, 1 லட்சம் கோடி நகைகளைக் கோயிலுக்குள் பதுக்கி வைத்த மன்னர்களை, சேனல் 4 காட்சிகளைத் தாண்டி வந்த தமிழர்களை, பேரறிவாளனின் வாழ்வுரிமையை பற்றி பேசவே பயப்படும் அரசியல்வாதிகளை... கடந்துதான் இந்த வாழ்க்கை.

கொலம்பிய காட்டில் மரணத்துக்குப் பிறகும் அணையாத விண்மீனாகத் திறந்து கிடந்த சே-வின் விழிகளில், சிறுநீருக்கு பை வைத்துக் கொண்டு இறுதிக் கணங்களிலும் பேசிய பெரியார் ஈ.வே.ரா.வின் சொற்களில், பன்னிரண்டாம் நாளிலும் திலீபனின் இதழில் உறைந்திருந்த புன்னகையில் இருப்பதற்கெல்லாம் பெயர் என்ன.. அற்பத்துக்கும் சொற்பதுத்துக்கும் அரசியல் என்ற பெயரை எதற்குப் பயன்படுத்துகிறோம். அவரவரது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் பெயர்தான் பாலிடிக்ஸ் என்றாகி விட்டது இந்த தேசத்தில். கொஞ்சம் உள் நோக்கி பார்த்தால், எல்லாவற்றுக்கும் நாமே காரணமாகி இருப்போம். அப்படித்தான் இந்தக் கதையின் ஓட்டம் இருக்கும். எல்லோருக்கும் வாழ்க்கையில் இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் வரும். இப்படியும் போகலாம், அப்படியும் போகலாம். இதில் வருகிற கதை நாயகன் தேர்ந்தெடுக்கிற வழிதான் முக்கியமானது.

ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையையும் விமர்சிக்கிற கதை என்று சொல்லலாமா...?

எல்லா இடங்களிலும் லஞ்சம், பொய், ஊழல் என மிடில் கிளாஸ் மாதவன் ஒருவர் தவறாமல் நம் தெரு முனை டீக்கடையில் கருத்துச் சொல்லுவார். ஆனால், பெரும்பான்மையான நடுத்தர வர்க்கம் நாம் நினைப்பது போல் இல்லை. பிளாக்கில் வாங்கி கேஸ் கனெக்ஷன் வைத்திருப்பது. ஆண்டு வருமானம் 40

ஆயிரம் ரூபாய் என்று சொல்லி பொய் சான்றிதழ், சலுகைகளை அனுபவிக்கிறோம். இப்படி சூழ்ச்சியும் மாய மந்திரங்களும் நிரம்பி கிடக்கிற வாழ்க்கை இந்த சமூகத்துக்கு மட்டுமே உரித்தானது. இப்படி பல சலுகைகள் தன்னகத்தே இருந்தாலும், இன்னும் பணம் வேண்டும் என்ற ஆசையில் கையில் இருக்கும் சுக, துக்கங்களை மறந்து விட்டு ஓடுவதுதான் இங்கே காமெடி. ஆனால், பயங்கர காமெடியன்களாக சமூகத்தால் பார்க்கப்படுகிற எல்லோரும் காமெடியன்கள் அல்ல. அவர்கள் எல்லாம் காரியவாதிகள். சமூகம்தான் அவர்களை தவறாகப் புரிந்து வைத்திருக்கிறது. சாண் வயிற்றுக்காக திருடுகிறவர்களை விட, மக்களின் சேவகராக தன்னை நிலை நிறுத்தி திருடுகிறவர்கள் இங்கே நிறைய. அப்படிப்பட்ட திருடுகிறவர்களின் உலகத்தை எட்டிப் பார்ப்பதுதான் இந்தப் படம்.

ஏதாவது ஒரு சம்பவம்தான் கதை நோக்கி திருப்பியிருக்கும்.... அது என்ன....?

மனதில் ஊறிப்போய் இருந்ததுதானே. எல்லாவற்றுக்கும் முன் மாதிரி உண்டு. எதுவும் தானாக உருவாக முடியாது என்பதுதான் இந்த உலகத்தின் சட்டம். படித்தது, பார்த்தது, கேட்டது, உணர்ந்ததுதான் படைப்பாக வருகிறது. நலன் குமாராசாமி இந்தக் கதைக்கும் ஒரு வடிவம் கொடுத்தார். அதை நான் பூர்த்தி செய்து வந்திருக்கிறேன். இந்த கதை, உறவுகள் கூட பழையதுதான். ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாக காட்சிப்

படுத்தியதுதான் புதிது. வசதி மட்டுமே சந்தோஷம் இல்லை. அதுக்குப்பிறகு கூட சித்தார்த்தன் துறவுக்குப் போனது நடந்திருக்கிறது. கழுத்தில இருக்கிற வரைக்கும்தான் தங்கம். திருடன் கழுத்தில் கத்தி வைத்து விட்டால் இரும்பு குண்டு மாதிரி அதுவே கனக்கும். எங்கே நிம்மதி, எப்போது சந்தோஷம் என்று எதையும் எளிதாக அர்த்தப்படுத்திட முடியாது.

நினைத்திருந்தால் விஜய் சேதுபதி உள்பட அந்த டீமை அப்படியே கொண்டு வந்திருக்கலாமே...

நிறைய திட்டங்கள் இருந்தன. எல்லாவற்றையும் பட்ஜெட்டுக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம். அதே நேரத்தில் கதையின் தன்மையை புரிந்தவர்கள் துணைக்கு வந்தார்கள். விஜய் சேதுபதி இடத்தில் மிர்ச்சி சிவா அருமையாக பொருந்தி வந்தார். ஹரிஷ்தா ஹீரோயின். முதல் பாகத்தில் வந்த கருணாகரன் கேரக்டர் தவிர்க்க முடியாது என்பதால் அவரை அப்படியே கொண்டு வந்திருக்கிறோம். காராத்தே கார்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், கவி, கல்கி, வாகை சந்திரசேகர்... இப்படி ஏக பேர். அனைவருக்கும் பொருத்தமான இடங்கள் கதையில் வருகிறது. இந்தக் கதையின் ஓட்டத்துக்கு பிரதான கதாபாத்திரங்கள் ரொம்பவே முக்கியமானவை. அதில் மட்டும் எனக்கு சமரசம் இல்லை. அது போல நல்ல சினிமாவுக்காக காத்திருந்த புதுமுகங்களும் பலர் இருக்கிறார்கள். அவர்களும் இங்கே ஆச்சரியப்படுத்துவார்கள். நான் உள்பட எல்லோருக்கும் வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் சி.வி. குமார் சாருக்கு நன்றிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com