மின்சாரம் தயாரிக்கும் இளைஞர்கள்

இயற்கை சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி: கேரள இளைஞர்களின் புதுமையான முயற்சி
மின்சாரம் தயாரிக்கும் இளைஞர்கள்

சுற்றுச்சூழல் சீர்கெடும் என்பதால் கேரளத்தில் அணு மின்நிலையம், நிலக்கரியை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலைகள் அமைக்கப்படவில்லை. இயற்கையாக ஓடும் தண்ணீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இயற்கை மின்சாரத்தையேச் சார்ந்துள்ளதால், மின்சாரப் பற்றாக்குறை மாநிலமாக இருக்கும் கேரளத்தில், ஏழு நண்பர்கள் ஒன்றுசேர்ந்து வித்தியாசமாக சிறு அணையைக் கட்டி மின்சாரம் தயாரித்து, கேரள அரசின் மின் வாரியத்துக்கும் வழங்குகின்றனர்.

'முக்குடம் மின் நிலையத்தின்' பொறுப்பை ஏற்றிருக்கும் ராகேஷ் ராயிடம் பேசியபோது:

'நாங்கள் ஏழு பேர் ஒன்றாகப் படித்தோம். பல இடங்களில் வேலை கிடைத்ததால் பிரிந்தோம். ஆனாலும் நட்பு தொடர்ந்தது.2014-ஆம் ஆண்டில் சிறு அணை கட்டி மின்சாரம் உற்பத்தி செய்யும் 16 திட்டங்களை கேரள அரசு அறிவித்தது. எனக்குச் சொந்தமான 'பாரத்தோடு' என்ற இடத்தில் சிறு குன்றிலிருந்து கீழே பாயும் சின்ன அருவி நினைவுக்கு வந்தது. 1,070 அடி உயரத்திலிருந்து கீழே விழும் அந்த அருவியில், மின்நிலையத்தை இயக்கத் தேவையான நீரோட்டம் உண்டு. ஆண்டில் சுமார் ஏழு மாதம் அருவியில் தண்ணீர் பாய்கிறது.

மின்நிலையம் அமைப்பதற்காகத் திட்டமிடலுக்கு சில ஆண்டுகள் தேவைப்பட்டன. எனது லட்சியத்தை நண்பர்களுடன் பகிர்ந்தபோது, ஆதரவு நல்கின்றனர். மின்நிலையம் அமைக்க ஆலோசித்தோம். நண்பர்களை இணைத்து ஒரு நிறுவனத்தை உருவாக்கினேன். மூன்று முதல் நான்கு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்தோம். அரசு அனுமதி கிடைக்க இரண்டு ஆண்டுகள் ஆனது.

அருவி பல கிளைகளாக வழிவதை ஒன்று சேர்த்து ஒருவழியில் பாயச் செய்தால் நீர் விழும் சக்தி கூடும். அதற்காகத் தேவையான மாற்றங்களை அருவி விழும் குன்றில் செய்ய வேண்டியிருந்தது. மின்நிலையம் அமைக்க சுமார் ரூ.30 கோடி முதலீடு தேவைப்பட்டது. எங்களிடம் பத்து கோடி ரூபாய் மட்டுமே திரட்ட முடிந்தது.

எங்களுக்கு முன் அனுபவம் இல்லாதிருந்தததால் கடன் கொடுக்க வங்கிகள் தயங்கின. அதனால் மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்தை அணுகி, கடன் பெற்று மின்நிலையத்தை அமைத்தோம்.

முல்லைப் பெரியாறு அணை தண்ணீரை குழாய் வழியாக கீழே கொண்டுவந்து டர்பைன்கள் உதவியால் எப்படி மின்சாரம் தயாரிக்கிறார்களோ அதே போன்று நாங்கள் சிறிய அளவில் மின்சாரம் தயாரிக்க 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் எங்களால் முடிந்தது. டர்பைன்களை போபாலில் உள்ள நிறுவனத்திடம் வாங்கினோம்.

ஒரு யூனிட் மின்சாரத்தை 4 ரூபாய் கொடுத்து கேரளா மின்வாரியம் வாங்கிக் கொள்கிறது. 1.10 கோடி யூனிட் மின்சாரத்தை நாங்கள் ஆண்டு ஒன்றுக்கு தயாரிக்கிறோம். சுமார் ஐந்து கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. முதலீட்டை திரும்ப எடுக்க, கடனை அடைக்க ஏழு ஆண்டுகள் தேவைப்படலாம்.

நான் எனது வேலையை உதறிவிட்டு, மின்நிலையத்தின் செயல்பாட்டைக் கவனித்துக் கொள்கிறேன்' என்கிறார் ராகேஷ் ராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com