வியக்க வைக்கும் வைக்கோல் ஓவியங்கள்!

ஆவடியில் மாலாவின் வைக்கோல் கலை பயணம்
வியக்க வைக்கும் வைக்கோல் ஓவியங்கள்!

சென்னை அருகே ஆவடியில் வசிக்கும் மாலா, சிறு வயதிலேயே போலியோ பாதிப்புக்குள்ளானவர். ஆறாம் வகுப்போடு நின்றுவிட்டார். ஆனாலும், வைக்கோலைப் பயன்படுத்தி அற்புதமாக ஓவியங்களை உருவாக்குகிறார். அவருடன் பேசியபோது:

''நான் பிறந்து வளர்ந்தது சென்னை அயனாவரத்தில்தான். எனக்கு எட்டு வயது இருக்கும்போது, என் தந்தை இறந்துவிட்டார். என்னை வளர்த்தது என் பாட்டி முனியம்மாதான்.

ஆறாம் வகுப்பு படித்தபோது, நான் போலியோ பாதிப்புக்கு உள்ளானேன். சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல இருந்ததால் படிப்பு நின்றது.

என்னை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்ட பாட்டி, எனது பதினோராவது வயதில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த இல்லத்தில் என்னைச் சேர்த்தார். என் இரு கால்களும் பாதிப்புக்கு உள்ளானதால், சக்கர நாற்காலியை பயன்படுத்துகிறேன்.

நான் வசித்த இல்லத்தில் பத்தி தயாரிப்பு, பிரிண்டிங், எம்பிராய்டரி, ஒயர் கூடை பின்னுதல், காகிதத்தில் பூக்கள் செய்தல், வைக்கோலைப் பயன்படுத்தி ஓவியங்களை உருவாக்குதல் உள்பட கைத்தொழில்களில் பயிற்சி அளித்தனர். மற்றவற்றைவிட, வைக்கோல் ஓவியங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது.

வைக்கோலைக் கொண்டு ஒரு கலைப் பொருளை உருவாக்குவது என்பதில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

மாடுகளுக்குப் போடுகிற வைக்கோலைப் பயன்படுத்தாமல், பொருள்களை பேக்கிங் செய்யும்போது பயன்படுத்துகிற வைக்கோலைத்தான் ஓவியங்களை உருவாக்கப் பயன்படுத்துகிறேன். வைக்கோலை வாங்கி மூட்டையில் கட்டி அப்படியே போட்டுவிடுவேன். ஒரு சில ஆண்டுகள் கழித்துதான் அவற்றைப் பயன்படுத்துவேன். அப்போதுதான் அவற்றின் நிறத்தில் லேசான மாற்றம் இருக்கும்.

இயற்கையாகவே வெண் பழுப்பு, வெளிர் மஞ்சள், மஞ்சள்.. என ஒரு சில நிறங்களில் வைக்கோல், கிடைக்கிறது.

எல்லா வண்ண வைக்கோலையும் நான் சேகரித்து வைத்துகொள்வேன். ஓவியங்களுக்கு எது தேவைப்படுகிறதோ அதைப் பயன்படுத்திக் கொள்வேன்.

எனக்கு வைக்கோல் ஓவியப் பயிற்சி கொடுத்த ஆசிரியர் ரகு, கேரளத்தைச் சேர்ந்தவர். பயிற்சிக் காலத்தில் கேரள பாணி வீடு, மரம், இயற்கைக் காட்சிகள் போன்றவற்றை உருவாக்குவதற்குக் கற்றுக் கொடுத்தார். நாளடைவில் நானாக பறவைகள், விலங்குகள் என பல்வேறு வகையான இயற்கைக் காட்சிகள், இறைவன் திரு உருவங்களையும் வைக்கோல் ஓவியங்களாக உருவாக்குவதற்குக் கற்றேன்.

வைக்கோலைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் கைகளில் கீறி, ரத்தம் கூட வந்துவிடும். போர்டில், துணியை ஒட்டி, அதன் மீது நான் வைக்கோல் ஓவியங்களை உருவாக்குகிறேன். பின்னர் அவற்றை சட்டம் போட்டு விற்பனைக்குத் தயார் செய்கிறேன்.

தொடக்கத்தில் எனது ஓவியங்களைப் பார்த்துப் பாராட்டிய ஒருவர், பூம்புகார் விற்பனையகத்தின் மூலமாக ஓவியங்களை விற்பனை செய்யலாம் என ஆலோசனை கூறினார்.

அங்கு அரசு அலுவலர்கள், 'அரசு அங்கீகார அடையாள அட்டை பெற்ற கைவினைக் கலைஞர்கள் உருவாக்கும் பொருள்களைத்தான் விற்பனை செய்ய முடியும்' என்று சொன்னதோடு மத்திய அரசுக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும் உதவினர். உடனடியாக எனக்கு அடையாள அட்டை வந்து சேர்ந்தது. அதன் பிறகு எனது வைக்கோல் ஓவியங்களை பூம்புகாருக்கு கொடுத்தேன்.

ஒருமுறை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற எட்டு நாள் விற்பனைக் கண்காட்சியில், 40 ஆயிரம் ரூபாய்க்கு நான் ஓவியங்களை விற்றேன். அன்னை தெரசா வளாகத்தில் நடந்த ஒரு விற்பனைக் கண்காட்சியில், என்னை ஐ.ஏ.எஸ். அலுவலர் அமுதா பாராட்டி ஊக்கப்படுத்தினார்.

சிலர் புதுமையாக புகைப்படங்களையும் இணைத்து பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்துகளைத் தயாரித்துச் சொல்கிறார்கள். 6-க்கு 4 அங்குல அளவுள்ள வைக்கோல் ஓவியங்களை ரூ.250-க்கு விற்பனை செய்கிறேன். சிலர் தங்கள் உருவத்தையே வைக்கோல் ஓவியமாக உருவாக்கிக் கொடுக்கும்படிக் கேட்கிறார்கள். ஆனால் அதற்கு ஒரு மாதம் கூட ஆகும்.

ஒரு முறை ஒருவர் ஐந்தடி நீளமும் மூன்றரை அடி உயரமும் கொண்ட ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உருவத்தை வைக்கோல் ஓவியமாகக் கேட்டபோது, அதை செய்து முடிக்க எனக்கு சுமார் எட்டு மாதங்கள் ஆனது. அதனை 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டார்.

இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த்துக்கு சாயிபாபா ஓவியம் வரைந்து கொடுத்தபோது, வெகுவாகப் பாராட்டினார்.

என்னிடமிருந்து விநாயகர் ஓவியம் வாங்கிச் சென்ற ஒருவர், 'இந்த விநாயகர் வந்த வேளை நாங்கள் சொந்த வீடு வாங்கினோம்' என்று சொல்லி இன்னொரு ஓவியத்தை வாங்கிச் சென்றார்.

என் கணவர் பெயர் பழனி வெல்டிங் தொழிலாளர். அவர் என்னைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

எங்களுக்கு வினோதினி என்று நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. அவர் இப்போதே நன்றாகப் படங்களை வரைகிறாள்.

எனது உடல்நிலை காரணமாக வெகுநேரம் தரையில் உட்கார்ந்து ஓவியங்களை உருவாக்க சிரமமாக உள்ளது. எனவே ஒரு நாளைக்கு சில மணி நேரமே செலவிடுகிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com