உள்ளத்தில் நல்ல உள்ளம்..

உள்ளத்தில் நல்ல உள்ளம்..

எங்கள் வீட்டுக்கு யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்; பசியாறும் இல்லமாகவும், உள்ளத்தில் நட்புறவுக் குடிலாகவும் நாங்கள் காத்திருக்கிறோம்'' என்கிறார் சமூகச் சேவகியும் வழக்குரைஞருமான செ.சென்னம்மாள்.

திருவண்ணாமலையைப் பூர்விகமாகக் கொண்ட இவரது பெற்றோர் அ.கு.சேட்டு- சே.ராணி. தற்போது சென்னை புரசைவாக்கத்தில் கணவர் கோ.தமிழேந்தியோடு சென்னம்மாள் இணைந்து, சமூகநீதி, மாற்று அறக்கட்டளைகள் வாயிலாக, மக்கள் நலப் பணிகளை ஆற்றிவருகிறார். அவரிடம் பேசியபோது:

''எனது சிறுவயதிலேயே செவிலியர் மலர், மேரி குட்டி சிஸ்டர் ஆகியோர் சமூகச் சேவைப் பணிக்கு அடித்தளமிட்டனர். எனது தாய் ராணி வைத்தியம் செய்பவர்.

அத்தை பார்வதி மஞ்சள் காமாலைக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் கண்ணில் பச்சிலை மருந்துவிடுவார். இவர்களும் உந்துதல். நூல்களை வாசித்தல், சுற்றுலாத் தலங்களுக்குப் பயணித்தல், மற்றவர்களுக்கு தேவை உணர்ந்து உதவி செய்தல், இசை கேட்டல் போன்றவை எனது விருப்பங்கள். இருந்தாலும், சமூகச் சேவையே எனது உயிர்மூச்சு.

எனதுகணவர் புரசை கோ.தமிழேந்தியும் சிறுவயது முதல் மற்றவர்களுக்கு உதவும் உள்ளம் கொண்டவராக அமைந்தார். இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு 2005-ஆம் ஆண்டு முதல் வாழ்க்கையைத் தொடங்கினோம். எங்களுக்கு மகன் சமூகநீதி, மகள் சமநீதி ஆதரவாய் இருக்கின்றனர். நாங்கள் இருவரும் சமூகப் பணி செய்வதால், ஆயிரம் இல்லாமை இருந்தாலும் இந்நாள் வரைநி றைவாக வாழ்கிறோம்.

குழந்தைகள் கல்வித் திறன் மேம்பாடு, வளர்இளம்குழந்தைகளுக்கு ஆளுமைத் திறன் பயிற்சி, பெண்களுக்குத் தொழில் முனைவோர் பயிற்சி, பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம், சட்ட விழிப்புணர்வு, அரசு நலத் திட்டங்கள் பெறுதல் குறித்த விழிப்புணர்வு, தமிழ் மொழித் திறன் மேம்பாட்டு பயிற்சி, கலைப்

பயிற்சி, கலைத் திறன் போட்டி, தோட்டக் கலை வடிவமைப்பு- பாதுகாப்பு, பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி முகாம்களை நடத்துகிறோம்.

பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு கல்வி உதவிகளை அளித்தல், பூங்காக்கள்- தெருவோரங்களில் இருப்பவர்களுக்கு உணவு அளித்தல் பணிகளையும் மேற்கொள்கிறோம்.

நாங்கள் பயணிக்கும் திசையில் ஆதரவற்றோரை நேரில் சந்தித்தால், மனம்விட்டு பேசுவோம். அழுக்கான ஆடைகளோடு மன நலம் பாதிக்கப்பட்ட மனிதர்கள் இருந்தால், அவர்களை அழைத்து வந்து நல்ல முறையில் பேசி நல்ல வாழ்க்கையை அமைத்து தருகிறோம்.

எங்கள் வீட்டுக்கு யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். பசியாறும் இல்லமாகவும், உள்ளத்தில் நட்புறவு குடிலாகவும், இறைவனும் இயற்கையும் கொடுத்த ஒரு வாழ்க்கையில் அதை நிறைவாக வாழ வேண்டும்.

மாடித் தோட்டம் அமைத்து கொடுத்தல், மூலிகை எண்ணெய் தயாரித்தல், புத்தக விற்பனை போன்ற சொற்ப வருவாயில் எங்கள் குடும்பத்தை நடத்தி, பிறருக்கு உதவுகிறோம்.

கரோனா காலத்தில், எங்களால் முயன்ற அளவு உதவிகளைப் புரிந்தோம். எங்கள் சேவைப் பணிகளுக்காக, பல்வேறு அமைப்பினர் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளனர். பிறரை ஊக்கப்படுத்தவே விருதுகளைப் பெறுகிறோம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com