மனதில் உறுதி இருந்தால் சாதிக்கலாம்...

மனதில் உறுதி இருந்தால் சாதிக்கலாம்...

மனதில் உறுதி இருந்தால் எதையும், எங்கேயும் சாதிக்கலாம்'' என்கிறார் இருபத்து எட்டு வயதான இளைஞர் பி.சக்தி. பொறியியல் பட்டதாரியான இவர், தனது கைகளைக் கயிறாகவே திரித்த தனது கின்னஸ் சாதனையை தானே மூன்று முறை முறியடித்தவர். அவரிடம் பேசியபோது:

''சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட இளம்பிள்ளையை அடுத்த ராமாபுரம் கிராமத்தில் பிறந்த நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். 2015-ஆம் ஆண்டில் கோவையில் தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பு முடித்து, தற்போது சென்னையில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறேன்.

சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி மீது அதிக நாட்டம்தான். குறிப்பாக, ஜிம்னாஸ்டிக்ஸில் அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். வித்தியாசமான சாதனையைப் படைத்து, நானும் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற உத்வேகம் உருவானது.

அப்போதுதான் 'ஸ்கிப்பிங் விளையாட்டில் மோஸ்ட் பேக்வேர்டு பாடி ஸ்கிப்பிங்' எனப்படும், கயிறே இல்லாமல் கைகளையே கயிறாகத் திரித்து உடலை வளைத்து மேற்கொள்ளப்பட்ட சாதனை குறித்து கின்னஸில் வெளியிடப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுதொடர்பாக கூடுதல் விவரங்களைத் திரட்டியபோது, கைகளைப் பின்னோக்கி வளைத்து அதற்குள் உடலை நுழைத்து ஒரு நிமிடத்தில் 40 முறை வெளியே வந்ததே, கின்னஸ் சாதனை என்பதும், இது ஆஸ்திரேலியா நாட்டில் சாதனையாக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

அதையடுத்து அந்தச் சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கில், 2015-இல் கோவையில் 'லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸ்' அமைப்புக்காக முதன் முறையாக முயற்சித்து ஒரு நிமிடத்தில் 32 முறை செய்து முடித்தேன். அது அப்போது இந்திய சாதனையாக இருந்தது.

அடுத்த சில மாதங்களில் கின்னஸ் சாதனைக்காக கோவையில் ஒரு நிமிடத்தில் 46 முறை செய்து காட்டினேன். இந்தச் சாதனையை முறியடிக்க வேண்டுமென்ற நோக்கில், 2018-இல் ரோம் நகரில் ஒரு நிமிடத்தில் 48 முறை பேக்வேர்டு பாடி ஸ்கிப்பிங் செய்து புதிய சாதனை படைத்தேன். அதற்குப் பிறகு எனக்கு திருமணமாகி விட்டாலும், எனது முயற்சிகளையும், பயிற்சிகளையும் விட்டு விடவில்லை.

2024 ஏப்ரல் மாதத்தில் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில், ஒரு நிமிடத்தில் 49 முறை பாடி ஸ்கிப்பிங் செய்து மீண்டும் எனது சாதனையை நானே முறியடித்தேன். மனதில் உறுதி இருந்தால் வயதும், வாழும் சூழலும் ஒரு பொருட்டல்ல. விரைவில் பேக்வேர்டு பாடி ஸ்கிப்பிங்கில் தனது அடுத்த சாதனைக்கு தயாராகி வருகிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com