இலங்கைத் தமிழர்களில் மூவகை...

இலங்கைத் தமிழர்களில் மூவகை...

பிரான்ஸ் நாட்டுக்குள் வந்து சேர்ந்த இலங்கைத் தமிழர்களை மூன்று வகையாகக் கொள்ளலாம்.

லண்டனுக்குள் நுழைவதற்கென்றே பயணத்தைத் தொடங்கி பிரான்ஸூக்குள் முடங்கிப் போனோர் ஒருவகை. "ஏதேனும் ஒருவெளிநாட்டுக்குப் போவோம் திரவியம் தேடுவோம்' என்று பிரான்ஸூக்குள் வந்து சேர்ந்தோர் இன்னொரு வகை. இந்த இரு வகையினரையும் மையமிட்டு ஊராகவும் உறவாகவும் வந்து சேர்ந்தோர் மூன்றாம் வகை.

இந்த மூன்று வகையினரே பிரான்ஸில் இலங்கைத் தமிழர்களின் வாழ்வியல் போக்கை வடிவமைத்தவர்கள். இந்த பிரான்ஸ்வாழ் இலங்கைத் தமிழரின் தற்போதைய வாழ்வியலை, சமூகவியலை எழுதுவதானால் அது நீண்டதாகிவிடும்.

பிரான்ஸூக்குள் வந்து சேர்ந்தோரில் பெரும்பான்மையினர் பாரிஸ் நகருக்குள்ளேயே முதலில் முடங்கினர். ஆனால் பின்னர் புறநகர் பகுதிகளிலும் பாரிஸ் நகருக்குத் தொலைவில் உள்ள நகரங்களிலும் வாழத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், அவர்களும் ஏனைய ஐரோப்பியாவாழ் இலங்கைத் தமிழர் அனைவரும் பாரிஸூன் மையத்துக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர்.

ஏனெனில், ஐரோப்பியாவிலேயே தமிழ்க் கலாசாரம் விற்கும் மையமாக பாரிஸ் நகரத்தின் "லா சப்பேல்' பகுதிநிலை பெற்றுவிட்டது என்பதாலேயே இந்த பாரீஸ் நகரில் இருந்துதான் வாரச் செய்தி பத்திரிகைகள் தொடங்கப்பட்டு வெற்றிக்கரமாக நடத்தப்படுகிறது.

24 மணி நேர வானொலிகளும், தொலைக்காட்சிகளும் நிறுவப்பட்டு ஒலி, ஒளி பரப்புகின்றன என்பது நிதர்சனம். தவிரவும், நான்கு புத்தக விற்பனை நிலையங்களும் உள்ளன என்பதே இந்தத் தமிழ்க் கலாசாரம் விற்கும் மையத்தின் சிறப்பம்சத்தைக் குறிக்கும்.

இலங்கைத் தமிழர்களிடையே 1981-ஆம் ஆண்டுகளில் உருவாகிய சில காலங்களிலேயே அஸ்தமித்துப் போன பாரிஸ் தமிழர் இயக்கத்தினால் முதன்முதலில் "தமிழ் முரசு' அதே ஆண்டு நவம்பரில் வெளியானது.

தமிழ் முரசைத் தொடர்ந்து, "எரிமலை', "எழில்', "பகடைக்காய்களின் அவலக் குரல்', "தாயகம்', "கண்', "தமிழ்த் தென்றல்', "புதுவெள்ளம்', "குமுறல்', "தேடல்', "பள்ளம்', "இந்து', "ஆதங்கம்', "ஓசை', "சமர்', "வான்மதி', "சிரித்திடு', "மௌனம்' உள்ளிட்ட 17 இதழ்கள் சமூக, அரசியல், இலக்கிய இதழ்கள் பாரீஸில்

உருவாகின. அதே நேரத்தில் 1993-க்குப் பின்னால் "பாலம்', "எக்ஸில்', "உயிர்நிழல்', "அம்மா', "தமிழ் நெஞ்சம்' ஆகிய சஞ்சிகைகள் வெளிவந்தன. அத்துடன் இனியும் சூல் கொள், தோற்றுந்தான் போவோமா?, சனதர்மபோதினி, கறுப்பு போன்ற தொகுப்பிதழ்களின் ஊடாக சஞ்சிகைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இந்தப் பின்னணியிலேயே பிரான்ஸூக்குப் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழரின் கலை, இலக்கிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த முயற்சிகளின் முன்னோடியாக ஐரோப்பிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் விளங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com