உற்சாகப்படுத்துபவரே தலைவர்!

பல தரப்பட்ட மக்களை ஒன்றாக இணைத்து, பொதுவான இலக்கை நோக்கி பணியாற்ற வைப்பவரை "தலைவர்' என்று அழைப்பார்கள்.
உற்சாகப்படுத்துபவரே தலைவர்!

பல தரப்பட்ட மக்களை ஒன்றாக இணைத்து, பொதுவான இலக்கை நோக்கி பணியாற்ற வைப்பவரை "தலைவர்' என்று அழைப்பார்கள். உத்தரவு பிறப்பிக்கும் பணியை யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம் ஆனால், தலைவர் என்று அழைக்கப்படுபவருக்கு குழுவில் மற்றவர்களை விட அதிகமாகத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

தலைவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஏராளமான விளக்கங்கள் வரலாற்றில் காணப்படுகின்றன. சீன ராணுவத்தில் பணியாற்றியவரும், எழுத்தாளருமான சன் ஸý, ""அறநெறியை வகுத்து, அதை முறையாகக் கடைபிடிப்பவர்தான் தலைவர்'' என்கிறார். 19ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்று அறிஞர் தாமஸ் கார்லைல், ""தலைவர்கள் பிறக்கிறார்கள் உருவாக்கப்படுவதில்லை'' என்று கூறுகிறார். ஆங்கில அறிஞர் ஹெர்பெட் ஸ்பென்ஸரோ, தாங்கள் வாழும் சமூகத்தின் வாயிலாகவே தலைவர்கள் உருவாகுகிறார்கள் என்கிறார்.

தலைமைப் பண்பு தொடர்புடைய பல்வேறு திறமைகள், பாணிகள், குணங்கள் ஆகியவை பற்றி ஏராளமான ஆய்வுகள் பல ஆண்டுகளாக வெளிவந்திருக்கின்றன. கடந்த 1940களில் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், தலைவர்களை, இலக்கை நோக்கிப் பணியாற்றுபவர்கள், குழுவினருடன் இணைந்து பணியாற்றுபவர்கள், உறவுநிலை சார்ந்தவர்கள் என்று மூன்று வகைகளில் பிரிக்கின்றனர். 1970களில் ரால்ஃப் ஸ்டோக்டில் என்ற அறிஞர், தலைமைப் பண்பை திறமை, சாதனை, பொறுப்பு, பங்கேற்பு, அந்தஸ்து, சூழ்நிலை என்று ஆறு வகைகளில் பிரிக்கிறார். 2000ஆம் ஆண்டில் எழுத்தாளரும் மனோதத்துவ நிபுணருமான டேனியல் கோல்மன் மேற்கொண்ட ஆராய்ச்சியில், தலைமைப் பண்பு பாணியை கட்டளை பிறப்பித்தல், தொலைநோக்கு, ஜனநாயகம், இணைத்தல், பணிகளைத் துரிதப்படுத்துதல், பயிற்சி ஆகிய 6 பகுதிகளாக பிரித்தனர்.

தலைவர் என்பவர் அடுத்தவர்களுக்காகப் பணியாற்றுபவராகவோ, சூழ்நிலைகளைச் சார்ந்திருப்பவராகவோ ஆளுமைத் திறன் கொண்டவராகவோ இருக்க வேண்டியதில்லை. ஆனால், தலைவர் என்பவர் அனைவரையும் கவர்ந்திழுப்பவராக இருக்க வேண்டும் என்று அனைத்து அறிஞர்களும் வலியுறுத்துகின்றனர்.

""தலைவர் என்று அழைக்கப்படுபவர்கள், அவரது உணர்ச்சிகள், கவர்ச்சி, ஊக்கம், தொலைநோக்கு போன்ற குணங்கள் மூலமாகவே வர்ணிக்கப்படுகிறார். ஆனால், தலைமைப்பண்பு லட்சியம் சார்ந்தது என்பதே எனது அபிப்ராயம். கடின உழைப்பு, மன உறுதி, இலக்கை நோக்கிய நிபந்தனையற்ற ஆர்வம் ஆகியவற்றை லட்சியமே உருவாக்குகிறது. லட்சியமானது மற்றவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி, ஏராளமான மக்கள் தலைவரைப் பின்பற்றுவார்கள்'' என்கிறார் கோரே பாக்கெட் என்ற தொழிலதிபர்.

சிறந்த தலைவரின் நடத்தைகள் சிறப்பானதாக இருக்க வேண்டும். ""சிறந்த தலைவர் என்பவர் கடுமையான நேரங்கள் உள்பட அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவராக இருக்க வேண்டும். இல்லையென்றால், பணியில், ஏதேனும் சூழலில், சிறந்த வாடிக்கையாளரையோ அல்லது வர்த்தகத்தையோ இழக்க நேரிடலாம்.

அத்தகைய சவால் மிகுந்த நேரங்களில், குழு உறுப்பினர்களை உற்சாகப்படுத்தி, நேர்மறைப் பாதையை நோக்கி திருப்புபவராக தலைவர் இருக்க வேண்டும். குழு மனப்பான்மை என்பது தலைவரின் அணுகுமுறை சார்ந்தே இருக்கிறது என்கிறார் ஆடிஸன் குழுமத்தின் தலைவர் டேவிட் மூரே. குழு உறுப்பினர்களுடன் உள்ள தொடர்பே, தலைமைப் பண்பு எனப்படும். ""தலைவர் தன்னைச் சுற்றியுள்ள நபர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கிறார்.

ஒவ்வொரு தனிநபரின் திறன்களையும், வேலை சார்ந்த இலக்குகளையும் புரிந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் அவர்களை ஊக்கப்படுத்துவது, கடினமான செயலாகும்'' என்கிறார் அண்டோர் கோவாக்ஸ் என்ற அறிஞர்.

தலைவர் சிறந்த உதாரணமாக விளங்குபவர். ""உங்கள் தினசரி செயல்பாடுகள் மூலம் உங்கள் தலைமைப் பண்பு பிரதிபலிக்கும்.

தலைவர் என்ற முறையில், இலக்குகள், புதுமை, ஊக்கம், நம்பிக்கை ஆகியவற்றைத் தோற்றுவிக்க வேண்டும்'' என்கிறார் தொழிலதிபரான ரிச்சர்ட் கிச்சன்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com