நாளை நான் ஐஏஎஸ்!: பள்ளியிலிருந்தே பயிற்சி!

குடிமைப்பணித் தேர்வின் தேர்வுமுறையை, தேர்வர்கள் எச்சிரமும் இன்றி புரிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கோடு இத்தொடரை எழுதி வருகிறோம்.
நாளை நான் ஐஏஎஸ்!: பள்ளியிலிருந்தே பயிற்சி!

குடிமைப்பணித் தேர்வின் தேர்வுமுறையை, தேர்வர்கள் எச்சிரமும் இன்றி புரிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கோடு இத்தொடரை எழுதி வருகிறோம். தனிப்பட்ட வழிகாட்டுதல் கிடைத்திட வாய்ப்பில்லாத தேர்வர்களாக இருப்பினும் கூட, அவர்களாலும் வெற்றி பெற இயலும் என்ற நம்பிக்கை தரும் விதமாக தேர்வு முறைகள் குறித்தும் விவரித்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக மாணாக்கர்களின் வெற்றியில் தவிர்க்கவியலாத அங்கமாக விளங்கிடும் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் அவர் தம் மாணாக்கர்களுக்கு இத்தேர்வு தொடர்பாக சிறிய சிறிய வழிகாட்டுதல்களை வழங்கிடுதல் பற்றிக் குறிப்பிட விரும்புகின்றோம்.

மாணவப் பருவத்தினரின் எதிர்கால வாழ்க்கையைக் கட்டமைப்பதில் ஈடற்ற பங்களிப்பை வழங்குகின்ற பேறு பெற்றவர்கள் என்ற அடிப்படையில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற காலத்திலேயே போட்டித் தேர்வுகளை எழுதிடத் தயாராக விரும்புகின்றவர்களுக்கு ஆசிரியர்கள் எவ்வெவ்வாறு உதவலாம் என்பதையும் முன் வைக்க விரும்புகிறோம்.

தற்போது பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணாக்கர் கூட ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆவதே தனது எதிர்கால இலட்சியம் என்று கூறுவதை நாம் கேட்க முடிகிறது. இதனைக் கேட்டு பெற்றோர்கள் மகிழ்ச்சி கொள்வதையும் பார்த்திட முடிகிறது. இத்தகைய பெற்றோர்களுக்கும், மாணாக்கர்களுக்கும் பல்வேறு அடிப்படைச் சந்தேகங்களும் உருவாகின்றன. ஐ.ஏ.எஸ் ஆவதற்கு எந்தெந்தப் புத்தகங்களைப் படிக்க வேண்டும்? அவை எங்கே கிடைக்கின்றன? அவற்றை எப்படிப் படிக்க வேண்டும்? எப்போது தேர்வை எழுதிட முடியும்? வெற்றி பெறுவது கடினமானதா? இவ்வாறான பல கேள்விகள் எழுகின்றன.

இச்சூழலில்தான் பள்ளிகளில் பணிபுரிகின்ற ஆசிரியப் பெருமக்களின் வழிகாட்டுதல் மிக முக்கியமானதாக மாறிவிடுகின்றது. அவர்களால் இத்தேர்வு பற்றிய விவரங்களை எளியமுறையில் மாணாக்கர்களிடம் கூறிட வாய்ப்புகள் உள்ளன. குடிமைப்பணித்தேர்வில் முதல்நிலை மற்றும் முதன்மைத்தேர்வில் கேட்கப்படும் வினாக்களில் ஏறத்தாழ 50 சதவீத வினாக்கள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை உள்ள பாடப்புத்தகங்களில் இருந்தே கேட்கப்படுகின்றன. தேர்வுக்கான அடிப்படையே இங்குதான் இருக்கின்றது என தகுந்த முறையில் ஆசிரியர்கள் எடுத்துரைத்தால் அது மாணவர்களை ஊக்குவிப்பதாகவும், உற்சாகப்படுத்துவதாகவும், உண்மையை உணர்த்துவதாகவும் அமையும்.

மேலும், ஆசிரியர்கள், பள்ளியில் உள்ள நூலகத்தினை முறையான பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம். அதனை மாணாக்கர்கள் பயன்படுத்திட தக்க ஆலோசனைகள் வழங்கலாம். நபஅபஉ ஆஞஅதஈ பாடத்திட்டத்தினை பின்பற்றுகின்ற பள்ளியாக இருந்தால் சஇஉதப புத்தகங்களை நூலகங்களில் வாங்கி வைத்து மாணவ,மணிகளைப் படித்திடச் செய்யலாம். தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை தினந்தோறும் வாசிக்கும் வழக்கத்தினை உருவாக்கிட துணை நிற்கலாம்.

ஐ.ஏ.எஸ் ஆவதற்கு ஒவ்வொரு மாணாக்கரும் அவரவர் வகுப்புப் பாடங்களை ஆழ்ந்து முறையாகப் படிப்பதும், தம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளைக் கவனித்து வருவதும், அவற்றை மனதில் நிறுத்துவதும் தேர்வுக்கு ஆதாரமாக விளங்குபவை என எடுத்துக் கூறலாம். அவ்வாறு கவனமாகப் பார்த்தும், படித்தும் வந்தாலே வெற்றி இலக்கினை அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையை ஆசிரியர்கள் அவர்களிடம் விதைக்கலாம்.

ஏனெனில், குடிமைப்பணித்தேர்வின்மீது ஏற்பட்டுள்ள ஆர்வத்தில் இப்போதெல்லாம் 8ஆம் வகுப்பு 9ஆம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தைகளையெல்லாம் பயிற்சி மையங்களில் சேர்க்கத் துடிக்கும் பெற்றோர்களைக் காண முடிகிறது. பயிற்சி மையங்களின் நோக்கமும், இலக்கும், அணுகுமுறையும் வேறானவை என்பதை இப்பெற்றோர்கள் அறிந்திட வாய்ப்புகள் குறைவே.

ஒரு மாணாக்கர் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கின்ற ஒரு பாடத்தினை, மிகவும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ஏழு வருடங்கள் படிக்கின்ற ஒரு வரலாற்றுப் பாடத்தினை 40 மணி நேரத்திற்குள் பயிற்சி மையத்தில் எடுத்து முடித்துவிடுவார்கள். இது அந்த ஆண்டு தேர்வை எதிர்கொள்ளும் தேர்வருக்கான அவசரத்தின் வெளிப்பாடே அன்றி வேறில்லை. இதுபோல்தான் பிற பாடங்களும் அமையும். இதனை ஏற்று, உள்வாங்கிக் கொள்ளும் பக்குவத்தினை பள்ளியில் படிக்கும் மாணவமணிகள் பெற்றிருத்தல் அரிது.

அனைத்து மாணாக்கர்களும் இத்தேர்வுக்கு ஆர்வம் செலுத்துவார்கள் என்று சொல்ல இயலாது. இருப்பினும், விருப்பம் உள்ளவர்களுக்கு வழிகாட்டினால், அது ஆசிரியர்களின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும். இத்தேர்வுகள் பற்றிய போதிய விழிப்புணர்வுகள் இல்லாத பெற்றோர்களுக்கு இது பேருதவியாகவும் விளங்கும்.

மாணாக்கர்கள் வகுப்புப் பாடங்களை ஆழ்ந்து படிப்பதற்கும், அவர்களது கவனம் சிதறாமல் இருப்பதற்கும், சக மாணவமணிகளுக்கு ஆவலை ஏற்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் எளிதாக அவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக இவ்வழிகாட்டுதல் அமையும்.

காரணம், பட்டப்படிப்பினை முடித்துவிட்டு குடிமைப்பணித் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் கூட இத்தேர்வின் அடிப்படையான தகவல்களையும், அதற்கான சரியான நூல்களையும் திரட்டிட சிரமங்களை எதிர்கொள்வதை நாம் காண்கிறோம்.

ஆகவே, பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்லாது, கல்லூரி ஆசிரியர்களும் இவை தொடர்பாக தகுந்த வகையில் வழிகாட்டினால் நன்மை விளையும். மாணாக்கர்களுக்கு இத்தகைய நற்செயல்களைச் செய்திட ஆசிரியர்களால் நிச்சயம் இயலும்.

சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவியும், அவரது பெற்றோரும் குடிமைப்பணித்தேர்வு சம்பந்தமாக விளக்கங்கள் பெறும் பொருட்டு என்னைச் சந்திப்பதற்காக சென்னை வந்திருந்தனர்.

9ஆம் வகுப்பு படித்து வருகின்ற அம்மாணவிக்கு குடிமைப்பணித்தேர்வின் மீது அதீத ஆர்வம் இருக்கிறது. இளைஞர்மணியில் வரும் இத்தொடரை தொடக்கத்தில் இருந்து படித்து வருவதோடு பத்திரப்படுத்தியும் வருகிறார். மேலும், கூறப்பட்டுள்ள ஆதார நூல்களையும் அவரது பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி தருவித்துக் கொண்டுள்ளார்.

இதில் மிகவும் முக்கியமானது, இந்தத் தொடரில் நாம் கூறிவந்தபடி ஆதார நூல்களில் இருந்தும், நாளிதழ்களில் இருந்தும் இம்மாணவி மிகத்தெளிவாக குறிப்புகளை எடுத்தெழுதியிருந்தது மிகப்பெரிய ஆச்சரியத்தைத் தந்தது. இதற்கு மாணவியின் பெற்றோர்களும், வகுப்பாசிரியரும் பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளனர்.

இவர் குடிமைப்பணித்தேர்வுகளை எழுதிட ஏறத்தாழ இன்னும் ஏழு வருடங்கள் இருக்கின்றன. இருப்பினும் போட்டித்தேர்வுகளை எழுதுவதற்கான அவரது ஆர்வமும், முயற்சியும் முறைப்படுத்தப்பட்டுள்ளது. அவரிடம் வகுப்புப் பாடங்களை ஆழமாகப் படிக்க வேண்டிய அவசியமும் உணர்த்தப்பட்டுள்ளது.

பள்ளியில் படிக்கும் மாணாக்கர்கள் குடிமைப்பணித் தேர்வினை எழுதுவதற்குள் தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படலாம்.

மாற்றங்கள் எத்தனை வந்தாலும் அடிப்படை எப்போதும் மாறிடுவதில்லை. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை உள்ள பாடநூல்களே எல்லாப் போட்டித்தேர்வுகளுக்கும் அடிப்படையாக விளங்குகின்றன என்பதை என்றும் மறந்துவிடலாகாது. இதனை அழுத்தம் திருத்தமாக பதிய வைத்திட ஆசிரியர்களால் முடியும்.

ஆகவே, இத்தேர்வினை எழுதிட ஆர்வமுள்ள மாணவ,மணிகளை இஞஅஇஏஐசஎ என்ற அவசர நிலைக்குள் தள்ளிவிடாமல், வெற்றிக்கு அடித்தளமாக விளங்கும் அவர்களது வகுப்புப் பாடங்களையே ஊன்றிப் படிக்க வைப்பது ஆசிரியர்களின் இன்றியமையாக் கடமைகளுள் ஒன்றாகும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com