நாளை நான் ஐஏஎஸ்! புதிய கோணத்தில் பதில் எழுதுங்கள்!

முதன்மைத்தேர்வில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை என்ற ஒரு நிகழ்வை மையப்படுத்திக் கேட்கப்பட்ட பல வினாக்களைப் பார்த்தோம். ஆனாலும் ஒவ்வொரு வினாவும் வெவ்வேறு கோணங்களில் கேட்கப்பட்டவை என்பதையும் புரிந்து கொண்டோம்.
நாளை நான் ஐஏஎஸ்! புதிய கோணத்தில் பதில் எழுதுங்கள்!

முதன்மைத்தேர்வில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை என்ற ஒரு நிகழ்வை மையப்படுத்திக் கேட்கப்பட்ட பல வினாக்களைப் பார்த்தோம். ஆனாலும் ஒவ்வொரு வினாவும் வெவ்வேறு கோணங்களில் கேட்கப்பட்டவை என்பதையும் புரிந்து கொண்டோம்.

வினாக்கள் ஒரே நிகழ்வை மையப்படுத்தி இருப்பதால் பதில் எழுதும்போது நாம் தொகுத்துக் கூறிய சில குறிப்புகளையே மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டியுள்ளது. இருப்பினும் வினாவுக்கு வினா பதிலின் கட்டமைப்பு மாறுபடுகிறது. ஆகவே, குறிப்புகளைத் தொகுப்பது முக்கியம். அதைவிட முக்கியம், அக்குறிப்புகளைத் தகுந்த இடங்களில் பயன்படுத்துவதுதான்.

இதேபோல இந்தியப் பொருளாதாரம், புவியியல், சுற்றுச்சூழல், ETHICS, இந்திய அரசியலமைப்பு போன்ற பொதுஅறிவுப் பாடங்களிலும் முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களை நீங்கள் TOPIC வாரியாக பகுத்துப் பார்க்க வேண்டும்.

அதில், எந்தெந்த தலைப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன- கடந்த 10 ஆண்டுகளில் பொதுஅறிவுப்பாடங்களில் எப்பாடத்தில் பிற பாடங்களைவிட கூடுதலான வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. அப்பாடத்தில், எத்தலைப்பின் கீழ் தொடர்ந்து வினாக்கள் கேட்கப்பட்டு வருகின்றன என்றெல்லாம் நீங்கள் கூர்ந்து நோக்க வேண்டும்.

ARIHANT PUBLICATIONS, NEW VISHAL PUBLICATIONS, COMPETITION WIZARD போன்ற நிறுவனங்கள் ஆண்டுதோறும் பாட மற்றும் தலைப்பு வாரியாக முதன்மைத்தேர்வில் கேட்கப்பட்ட மூல (ORIGINAL) வினாக்களை முறையாகத் தொகுத்து, பகுத்து வெளியிட்டு வருகின்றன. இவற்றில் ஏதேனும் ஒரு நிறுவனத்தின் வெளியீட்டை தேர்வர்கள் தமது புரிதலுக்காக வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் முதன்மைத்தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு பதில்களைக் கட்டமைத்தும் புத்தகங்கள் (MAINS SOLVED PAPERS) வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறான நூல்களை ஒரு கண்ணோட்டத்திற்காகப் (GLANCE) பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், அக்கேள்விக்காக அதில் கொடுக்கப்பட்டுள்ள பதிலை அப்படியே பின்பற்றுவதைத் தேர்வர்கள் தவிர்க்கவேண்டும்.

ஏன் தவிர்க்க வேண்டுமென்றால், குடிமைப்பணித்தேர்வின் வினாக்களைப் பொறுத்த வரையில் எழுத்துத் தேர்வின் விடை என்பது நிர்ணயிக்கப்பட்டதோ, முடிவானதோ அல்ல. வினாக்களைப் புரிந்து கொண்டு, பொருத்தமான நிகழ்வுகளை இணைத்து, சரியான பதிலை எழுதி, மதிப்பிடுபவரை ஈர்க்கும் கூர்மதி பெற்ற தேர்வரே குறிப்பிடத்தக்க மதிப்பெண்களை எப்போதும் பெறுவதை நாம் பார்க்கிறோம்.

ஆக, கேள்வியின் உள்ளடக்கத்திற்கு மிகவும் ஏற்ற வகையில், பதிலை புதிய கோணத்தில் திறம்பட எழுதி, புத்திக்கூர்மையை வெளிப்படுத்தும் தேர்வரையே மதிப்பிடுபவர் விரும்புகிறார். எனவே, கேள்விக்கான பதில் உங்களின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் வண்ணம் அமைந்து மதிப்பிடுபவருக்கு உங்கள் நுண்ணறிவின் மீதும், கருத்தின் மீதும் நல்ல அபிப்ராயம் ஏற்பட்டால் பிற தேர்வர்களைவிட கூடுதல் மதிப்பெண்களை அவர் உங்களுக்கு வழங்கிட வாய்ப்புகள் நிறைய உண்டு.

ஆதலால், பிறர் அவரது புரிதலுக்கேற்ற வகையில் உருவாக்கிய பதிலை நீங்கள் பின்பற்றுதல் பெரிதும் நன்மையளிக்காது. அதிலும், பரந்துபட்ட அறிவாழத்தினைச் சோதிக்கும் வகையில் வினாக்கள் புதிய மாற்றங்களைப் பெற்றிருக்கும். தற்போதைய சூழலில், நிறைய மதிப்பெண்களை நீங்கள் பெறுவதற்கு அது வழிவகுக்காது. சில நேரங்களில் அவற்றைப்போன்ற ஆயத்தப் பதில்கள் (READYMADE ANSWERS) வினாவை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல்கூட உருவாக்கப்பட்டிருக்கலாம். இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டியது தேர்வரின் கடமை.

இவ்வாறான ஆயத்தப் பதில்களில் நம்பிக்கை இல்லாமல் நிகழ்வுகளை மையமாக வைத்து சுயமாகப் பதில்களை எழுதுவதில் ஆர்வம் கொண்ட தேர்வர் ஒருவரைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.

தனது மூன்றாவது முயற்சியிலேயே வெற்றி பெற்று பணிவாய்ப்பினைப் பெற்ற இவரைப் பற்றி இங்கே கூறுதல் உங்களுக்கு நன்மை பயக்கும் என்றும் கருதுகிறேன்.

பெயர் சி. அரியசக்தி. பல் மருத்துவம் படித்தவர். குடிமைப்பணிகளில் ஒன்றான இந்திய படைக்கலத் தொழிற்சாலைப்பணி (Indian Ordinance Factory Service) வாய்ப்புப் பெற்று தற்போது திருச்சிராப்பள்ளியில் பணிபுரிந்து வருகின்றார்.

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பல்மருத்துவராக தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தவருக்கு குடிமைப்பணித் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது. ஆனால் வயது வரம்பு அடிப்படையில் இவருக்கு மூன்று முறை தேர்வு எழுதுகின்ற வாய்ப்பு மட்டுமே கைவசம் இருந்தது. இருப்பினும் நம்பிக்கையோடு முயற்சியைத் தொடங்குகிறார். பயிற்சி பெறுகிறார்.

பெரும்பாலும் எழுத்துத்தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடை எழுதிக்கொண்டு வருவார். அவரது பதில் கட்டமைப்புமுறை சற்றுவேறுபட்டதாகவே இருக்கும். நாமும் அவரை உற்சாகப்படுத்தினோம்.

2009 ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வினை எழுதுகிறார். வெற்றி பெற முடியவில்லை. பொருளாதாரச் சூழல் காரணமாக பணியிலும் தொடர்கிறார். 2010ஆம் ஆண்டில் இரண்டாவது வாய்ப்பை வெற்றியாக்கிட ஊக்கத்துடன் போராடுகின்றார்.

இம்முறை முதல்நிலைத் தேர்வில் வெல்கிறார். முதன்மைத் தேர்விலும் வெற்றி பெற்று நேர்முகத்தேர்வும் செல்கிறார். 2011 ஆல் முடிவுகள் வெளியிடப்படுகின்றன. ஆவலோடு தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலைப் பார்க்கிறார். இவரது பெயர் இடம்பெறவில்லை.

முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்களை குடிமைப்பணிகள் தேர்வாணையம் வெளியிடுகிறது. தனது மதிப்பெண்களைப் பார்க்கிறார். கட்டுரைத்தாளிலும், நேர்முகத்தேர்விலும் மதிப்பெண்கள் இவருக்கு குறைவாகவே கிடைத்திருந்தன. தனது வெற்றி வாய்ப்பினைப் பாதித்த காரணிகளை அடையாளம் கண்டு கொண்டார்.

தனது பலம் எது? பலவீனம் எது? எனப்புரிந்து கொள்வதே வெற்றியின் முதல்படி. இம்முதல்படி என்பது தன்னைத்தானே பாரபட்சமற்ற முறையில் சுயபரிசோதனை செய்து கொள்ளும் துணிச்சலை அடிப்படையாகக் கொண்டது ஆகும். இதில் தெளிவான மனநிலை கொண்டவரான அரியசக்தி எப்பாடப்பகுதியில் தனக்கு வழிகாட்டுதல் வேண்டுமோ, அதனைத் தயக்கமின்றி வெளிப்படையாகக்கூறி ஆலோசனை பெறுகிறார்.

இறுதி வாய்ப்பினை வெற்றியாக்கிட மனம் தளராமல் மீண்டும் போராட வேண்டிய அவசியத்தினை உணர்கிறார். கொண்ட இலட்சியத்தினை அடைவதற்கு மறுபடியும் கடுமையாக முயற்சிக்கிறார். அதற்காக முதலில் எழுத்துத் தேர்வில் குறிப்பாகக் கட்டுரைத்தாளில் கூடுதல் கவனத்தினைச் செலுத்த வேண்டும் என்று முடிவெடுக்கின்றார்.

அதனால், முதல்நிலைத்தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போதே கட்டுரைப் பயிற்சியையும் மேற்கொண்டார். கட்டுரை தொடர்ச்சியாகவும், சரியாகவும் அமைந்திட சிறிய சிறிய மாற்றங்களை அவருக்குக் கூறினோம். உள்வாங்கிக் கொண்டார். சுமார் 30-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை அவர் ஆர்வமுடன் எழுதித் தந்தார். திருத்தி வாங்கிக் கொண்டார். கூறிய திருத்தங்களையும் ஏற்றுக்கொண்டார்.

மூன்றாவது முயற்சி. முதல்நிலைத் தேர்வில் வென்று முதன்மைத் தேர்விலும் வெற்றி பெற்றார். 2012 ஆல் நேர்முகத் தேர்வுக்கு அவர் தயாராகிறார். அவரது ஆளுமைத்திறன் மேம்பட குடிமைப்பணிகளில் உயர் பொறுப்பில் இருக்கின்ற சில அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றோம். அவர்களும் நேரம் ஒதுக்கி நேர்முகத் தேர்வில் பின்பற்ற வேண்டிய நுட்பமான சில வழிமுறைகளை அவருக்குக் கூறினர். இம்முறை வெற்றி அவர் வசமானது.

தேர்வர்களே வயது காரணமாக சில வாய்ப்புகள் மட்டுமே உள்ளன என்று மனம் தளர்ந்துவிடாமல் அதிலும் விடாமுயற்சிசெய்து,

வெற்றிபெற விரும்புபவர்களுக்கு அரியசக்தி ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

விருப்பப்பாடத்தினைத் தேர்வு செய்வது குடிமைப்பணித்தேர்வின் வெற்றிக்கு எத்தனை முக்கியம் என்பதனை அடுத்த பகுதியில் காண்போம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com