இணைய வெளியினிலே!

தனக்குத்தான் உலகத்திலேயே அதிக வேலையிருப்பதாக காட்டிக் கொள்பவர்கள் உண்மையில் வருத்தத்திற்குரியவர்கள்.
இணைய வெளியினிலே!

முக நூலிலிருந்து....
* ஜன்னல் கம்பிகளை விட்டு
வெளியேறத் தெரிந்த
சிட்டுக்குருவி,
ஒருநாளும் புலம்புவதில்லை -
தனது வானம்
கட்டங்களில்
துண்டாகிக் கிடப்பதாய்.
-வைகறை

* திறமைசாலிகள் வேறு, சாமர்த்தியசாலிகள் வேறு...
பெரும்பாலும் சாமர்த்தியசாலிகள் தங்களை நிருபிக்க கீழ்கண்ட இரண்டு 
வழிகளையே தேர்ந்தெடுக்கிறார்கள்.
வாய் வார்த்தைகளால் அடுத்தவரை அடக்குவது, அடுத்தவர்களை முட்டாள் என முத்திரை பதிப்பது.
- மதுரை சத்யா

* இருட்டில் தொலைத்தவை... 
வெளிச்சத்தில் கிடைத்து விடுகிறது.
வெளிச்சத்தில் தொலைத்தவற்றை...
எந்த இருட்டில் தேடுவது? என்று
தெரியவில்லை.
- திருமலை சோமு

* ஆசையைத் துறக்கச் சொன்ன 
புத்தரின் சிலையை
ஆசைப்பட்டு வாங்குகிறேன்...
அழுதுகொண்டே சிலையிலிருந்து 
வெளியேறுகிறார் புத்தர்
*********************
* கடவுள் காலையில்
சாப்பிட என்னையழைத்தார்...
சாப்பிட்டேன்.
கடவுள் மதியம்
சாப்பிட என்னை அழைத்தார்...
சாப்பிட்டேன்.
கடவுள் இப்போதும்
சாப்பிட எனை அழைக்கிறார்...
இதோ புறப்பட்டுவிட்டேன்.
கடவுள் எப்போதும் கூடவேயிருக்கிறார்,
பசியாக.
-செளவி

* சிலை பேசுமானால்...
தன்னைச் செதுக்கிய சிற்பியை
வன்முறையாளன் என்று
குற்றம் சுமத்தாது.
- அறச் செல்வி

• நாம் நேராக நடக்காத வரை... உலகம் தலை கீழாகத் தான் தெரியும். 
- இன்பா வினோத்

• நடந்து போறவனுக்கு 
வேண்டுமானால் 
குறுக்கு வழி சரிதான்...
நடக்கப் போறவனுக்குமா
குறுக்கு வழி, நெடுக்கு வழி?
- கவி வளநாடன்

வலைத்தளத்திலிருந்து...
தனக்குத்தான் உலகத்திலேயே அதிக வேலையிருப்பதாக காட்டிக் கொள்பவர்கள் உண்மையில் வருத்தத்திற்குரியவர்கள். அவர்களால் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கு  சிறிய அளவிலான சந்தோசத்தைக்  கூட கொடுக்க இயலாது. "பிசி...பிசி'  என்று தானும் தொலைந்து, அவர்களை நேசிப்பவர்களின் நேசத்தையும் அலட்சியம் செய்கிறார்கள். பரபரப்பான வேலைக்கு நடுவிலும் சிறு புன்னகையைக் கூட காட்டாமல் வாழும் வாழ்க்கை உண்மையில் நரகம். "பிசி' என்ற முகமூடியைப் போட்டுக் கொண்டு அன்பானவர்களிடம் தோற்றுப் போகிறோம். பகிரப் படாத அன்பும் கவனிக்கப்படாத நேசமும் யாருக்கும் பிரயோசனம் இன்றி விழலுக்கு இரைத்த நீராகி விடுகிறது.
 இயந்திர உலகில் எல்லாருக்கும் தான் வேலை, பிரச்னை இருக்கிறது அத்தனைக்கும் நடுவிலும் உறவுகள் நட்புகளுடன் தொடர்பில் இருப்பதுதான் உயிர்ப்பான வாழ்க்கை. பிறரை நேசிப்பதை விட பிறரால் நாம் நேசிக்கப்படுவது பேரின்பம், இதனை அலட்சியப்படுத்தி வாழ்ந்து எதைச் சாதிக்கப் போகிறோம்?
http:www.kousalyaraj.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com