மதிப்பெண் குறைவா? கவலைப்பட வேண்டாம்!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.வி.எஸ்.சி. போன்ற பட்டங்களை தவிர்த்து அந்த மருத்துவம் சார்ந்த பிரிவுகளில் பி.பார்ம், பிபிடி,  நர்சிங், பிஎஸ்சி ஆப்தோமெட்ரி, பிஎஸ்சி இமேஜிங் டெக்னாலஜி என
மதிப்பெண் குறைவா? கவலைப்பட வேண்டாம்!

பிளஸ்-2 தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லையா? அதனால் விருப்பமான படிப்புக்காக கல்லூரியில் இடம் கிடைக்கவில்லையா? கவலைப்படாதீர்கள். விருப்பமான படிப்பின் துறைசார்ந்த பிற படிப்புகளைப் படிக்கலாமே? எம்பிபிஎஸ் படிக்க முடியவில்லை என்று கவலைப்படுவதைவிட மருத்துவத்துறை சார்ந்த ஏராளமான படிப்புகளைப் படிக்கலாமே? பிளஸ் 2 படிக்கும்போது அறிவியலைப் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் என்ன படிக்கலாம்? 

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.வி.எஸ்.சி. போன்ற பட்டங்களை தவிர்த்து அந்த மருத்துவம் சார்ந்த பிரிவுகளில் பி.பார்ம், பிபிடி,  நர்சிங், பிஎஸ்சி ஆப்தோமெட்ரி, பிஎஸ்சி இமேஜிங் டெக்னாலஜி என துணைநிலை மருத்துவ அறிவியல் படிப்புகள் உள்ளன. இவை தவிர  இயற்பியல், வேதியியல், பயோகெமிஸ்ட்ரி, பயோமெடிக்கல், தாவரவியல், உணவுத் தொழில் நுட்பம், மண்ணியல், ஹோம்சயின்ஸ், மைக்ரோபயாலஜி, கணிதம், பாலிமர் சயின்ஸ், புள்ளியியல், நியூட்ரிஷன், சுற்றுச்சூழல் கல்வி, வேளாண் படிப்பு, கால்நடை அறிவியல், பால்பண்ணைத்தொழில் மற்றும் கோழி வளர்ப்பு, மீன் துறை, விலங்கியல் ஆகியவற்றில் பி.எஸ்.சி படிப்பு மேற்கொள்ளலாம்.

மருந்தாளுநர்கள் பணி வேலைவாய்ப்புகளை வழங்கும் டி. பார்ம், பி.பார்ம் படிப்புகளைப் படிக்கலாம். மதுரை, தஞ்சாவூர், கோவை மருத்துவக் கல்லூரிகளில் டி.பார்ம், படிப்பு உள்ளது. பி. பார்ம்., படிக்க தமிழகத்தில் பல தனியார் பார்மஸி கல்லூரிகள் இருக்கின்றன. பி.பார்ம். படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த கல்வியைப் படித்தால் மட்டுமே மருந்து கடைகள் தொடங்க முடியும். மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் பார்மஸி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதியாக கிடைக்கும். பார்மஸியில் பட்டம் பெற்றோர் டிரக் இன்ஸ்பெக்டர் என்ற அரசுப்பணிக்குச் செல்ல முடியும். 

பிசியோதெரபி (பி.பி.டி.) படிப்பு நான்கரை ஆண்டு கால படிப்பாகும். வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவின் மூலம் அரசு மருத்துவ மனைகளுக்கு பிசியோதெரபிஸ்ட்டுகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆக்குபேஷனல் தெரபி படித்தவர்களுக்கு பாலி கிளினிக், மருத்துவமனைகள், மாற்றுத் திறனாளிப் பள்ளிகள், மனநல சிகிச்சை மையங்கள், போன்றவற்றில் வேலை வாய்ப்பு உள்ளது. 

பி.ஏ.(எஸ்.எல்.பி.) என்பது ஆடியாலஜி மற்றும் ஸ்பீச் அண்ட் லாங்க்வேஜ் பேத்தாலஜி எனப்படும் 3 ஆண்டு பட்டப் படிப்பாகும். பேச்சு மற்றும் செவித்திறன் கோளாறுகளைக் கண்டறிவது தொடர்பான படிப்பு இது. காது கேட்கும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இந்தப் படிப்பு படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். 

கண்களின் அமைப்பு, செயல்பாடுகளைப் பற்றிய படிப்பு ஆப்ட்தோமெட்ரி படிப்பாகும். கண் மருத்துவமனைகளில் கண் மருத்துவர்களுக்கு உதவியாளர்களாக பணி செய்ய இவர்களால் முடியும். பிளஸ்-டூ தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அறிவியலைப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். 

எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், எம். ஆர்.ஐ. போன்ற பரிசோதனைகள் செய்வது தொடர்பான படிப்பு ரேடியோகிராபி எனப்படும். இந்த படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

இவை தவிர, மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் பட்டய, சான்றிதழ் ஓராண்டு படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அவற்றில் சில:
கார்டியோ சோதனோகிராபி தொழில்நுட்பம், ஈ.சி.ஜி. டிரட்மில் தொழில்நுட்பம், பம்ப் தொழில் நுட்பம்,கார்டியோ கேத் தொழில்நுட்பம், அவசரகால தொழில்நுட்பம், சுவாசத் தொழில்நுட்பம், டயாலிசஸ் தொழில்நுட்பம், மயக்க மருந்தியல் தொழில்நுட்பம், தியேட்டர் தொழில்நுட்பம்,ஆர்த்தோபீடிக் தொழில்நுட்பம், கதிரியக்க உதவியாளர், ஆடியோமெட்ரி, செவித்திறன் மற்றும் பேச்சு தெரபி, உணவு மேலாண்மை, ஈ.ஈ.ஜி., ஈ.எம்.ஜி., செவிலியர் உதவியாளர், மெடிக்கல் ரெக்கார்டு சயின்ஸ். மேலும் ஈராண்டு படிப்புகளான டென்டல் மெக்கானிக், பல் சுகாதாரம், மெடிக்கல் லேபாரட்டரி,  கதிரியக்க தொழில்நுட்பம் போன்றவையும், 6 மாத படிப்புகளான மெடிக்கல் ரெக்கார்டு, ஆப்டோமெட்ரி போன்ற படிப்புகளைப் படித்தால் வேலை வாய்ப்புகளைப் பெற முடியும்.
- வி.குமாரமுருகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com