தில்லியில் பிறந்த தமிழருக்கு உலக அளவில் ஒரு விருது!

அக்ஷய் வெங்கடேஷ் - அமெரிக்காவிலுள்ள ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக பணிபுரிபவர்.
தில்லியில் பிறந்த தமிழருக்கு உலக அளவில் ஒரு விருது!

அக்ஷய் வெங்கடேஷ் - அமெரிக்காவிலுள்ள ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக பணிபுரிபவர். இந்த ஆண்டு நோபல் பரிசுக்கு இணையான விருது, 36 வயதேயான அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இவரைத் தவிர இன்னும் மூவருக்கு இந்த விருது தரப்பட்டுள்ளது. இந்த விருது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. கணிதத்துறையில் பெரிய அளவுக்கு பங்களிப்புச் செய்ததற்காக அவருக்கு இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெறும் ஒவ்வொருவரும் 15 ஆயிரம் கனடிய டாலரைப் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.80 லட்சம்) பெறுவார்கள்.
அக்ஷய் வெங்கடேஷ் விருது பெறுவது ஒன்றும் புதிதல்ல.
அக்ஷய் வெங்கடேஷ் தில்லியில் பிறந்தவர். அவர் பெற்றோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை கும்பகோணத்தைச் சேர்ந்தவர். தாய் தஞ்சாவூர்காரர். வெங்கடேஷுக்கு 2 வயது இருக்கும்போது அவருடைய குடும்பம் ஆஸ்திரேலியாவில் பெர்த் நகருக்குக் குடிபெயர்ந்தது. 
13 வயதிலேயே அவர் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டார். அந்த வயதிலேயே வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். மூன்றே வருடங்களில் பட்டமும் பெற்றுவிட்டார். அதற்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து, அதாவது வெங்கடேஷின் 20 வயதில் முனைவர் பட்டமும் பெற்றுவிட்டார். உலகிலேயே மிகவும் இளைய வயதில் முனைவர் பட்டம் பெற்றவர்களில் வெங்கடேஷும் ஒருவர். முனைவர் பட்டம் பெற்றது, கேம்ப்ரிட்ஜில் உள்ள உலகப் புகழ்பெற்ற எம்ஐடி பல்கலைக்கழகத்தில்.
அவர் பள்ளியில் படிக்கும்போதே - அவருக்கு அப்போது 12 வயது - உலக அளவில் கணிதம் மற்றும் இயற்பியலில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சர்வதேச ஒலிம்பியாட் பதக்கம் பெற்றிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் கணிதம், இயற்பியலில் முதல் மாணவராக அவர் விளங்கியதால் முதலில் ஆஸ்திரேலியா அளவில் முதல் மாணவராகத் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களில் முதன்மையானவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு கிடைத்த பதக்கம்தான் இந்த சர்வதேச ஒலிம்பியாட் பதக்கம். 
இப்போது பெற்றுள்ள விருதைப் போலவே ஏற்கெனவே கணிதத்துறையில் அவரின் கடும் உழைப்புக்காக ஆஸ்ட்ரோவ்ஸ்கி விருது, இன்ஃபோசிஸ் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். 

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் 2008 இல் கும்பகோணத்தில் நடந்த ஒரு சர்வதேச கணித கருத்தரங்கில் வெங்கடேஷுக்கு "சாஸ்த்ரா ராமானுஜன்' விருதை வழங்கியது.
அவர் கணிதத்தில் உயர்ந்த மட்டத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டதால் இந்த விருது அவருக்குக் கிடைத்திருக்கிறது. 
"மிக நீண்ட நேரம் நீங்கள் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தால் ஓர் இடத்தில் எதுவும் செய்ய இயலாமல் அப்படியே நின்றுவிடுவீர்கள். ஆனால் அதே சமயம் கணிதத்தோடு நீங்கள் பிணைந்து கிடந்த உணர்வைப் பெறுவீர்கள். மிகவும் அர்த்தமுள்ள ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும் உணர்வையும் நீங்கள் பெறுவீர்கள்'' என்கிறார் இடைவிடாமல் கணித ஆராய்ச்சிகளில் மூழ்கிக் கிடக்கும் அக்ஷ்ய் வெங்கடேஷ்.
- ந.ஜீவா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com