கல்வி... கல்வி... கல்வி! - த. ஸ்டாலின் குணசேகரன்

திரு.வி.க. என்ற பெயரை உச்சரித்தாலே நெற்றி நிறைய திருநீறும் ஒரு துறைவியைப் போன்ற தெய்வீகத் தோற்றமும் ஆன்றவிந்தடங்கிய ஆன்மீகச் செம்மல் என்ற கருத்தோட்டமும்தான் நம் நெஞ்சில் நிழலாடும்...
 கல்வி... கல்வி... கல்வி! - த. ஸ்டாலின் குணசேகரன்

இளைய பாரதமே... எழுக!-10
திரு.வி.க. என்ற பெயரை உச்சரித்தாலே நெற்றி நிறைய திருநீறும் ஒரு துறைவியைப் போன்ற தெய்வீகத் தோற்றமும் ஆன்றவிந்தடங்கிய ஆன்மீகச் செம்மல் என்ற கருத்தோட்டமும்தான் நம் நெஞ்சில் நிழலாடும்...
 அத்தகைய சமய நெறிகளில் தோய்ந்த பெருந்தகை ஒருமுறை பேசுகிற போது, "வீடு பேற்றை நான் விரும்பவில்லை. முக்தி பெறுவதை யான் கருதவில்லை. பரம்பொருளின் திருவடிகளில் சென்று சேர வேண்டுமெனும் விருப்பமும் எனக்கில்லை'' என்று அழுத்தமாகக் கூறுகிறார்.
 திரு.வி.க.வின் இவ்வுரையைக் கேட்டுக் கொண்டிருந்த அன்பர்கள் அனைவரும் அதிர்ந்துபோய் விட்டார்கள். அத்தனை பேரும் வியப்பில் ஆழ்ந்திருந்ததை உணர்ந்து கொண்ட திருவி.க. அவ்வாறு சொன்னதற்கான விளக்கம்
 அளித்தார்.
 "தமிழ் நிலம் ஒரு நாடாகவே இல்லை. அது பலவாறு சிதறுண்டு கிடக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டிற்கான பணி அதிகம் தேவைப்படுகிறது. என்னைத் தமிழ்நாட்டில் பிறப்பித்த இறையை வாழ்த்துகிறேன். வணங்குகிறேன். தமிழ்நாட்டுத் தொண்டுக்கு, இந்தப்பிறவி ஒன்று போதுமா? போதாது. இதற்காகவே இறைவனது திருவடிப் பேற்றைக்கூட விரும்பாது, மீண்டும் மீண்டும் தொண்டாற்றப் பிறவியை அளிக்குமாறு இறைவனை வேண்டுகிறேன். அதுவும் தமிழ்நாட்டில் பிறக்குமாறு ஆண்டவனின் பெருங்
 கருணையை நாளும் தொழுகின்றேன். அப்போதாவது தமிழர்களை ஒருமுகப்படுத்த முடியுமாவென என் உள்ளம் ஏங்குகிறது'' என்று கூறி முடித்தார், திருவிக.வின் இவ்வுரையைக் கேட்ட அவரது அன்பர்கள் மிகுந்த நெகிழ்ச்சியுடன் கண்கலங்கினர். இந்த வரலாற்றுச் செய்தி நமக்கு உணர்த்தும் செய்தி என்ன? அழுத்தம் திருத்தமான, அப்பழுக்கற்ற ஆன்மிகத்தில் மூழ்கி முத்தெடுத்த திரு.வி.க., ஆன்மிகக் கூற்றுக்கு நேர் எதிரான ஒரு கருத்தை வேறு எந்த ஆன்மிகவாதியும் சொல்லாத ஒரு கோணத்தில் வெளிப்படுத்தியுள்ள விதம் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
 ஒருவனுக்குக் கிடைக்கும் மோட்சத்தை விட ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் விடிவு கிடைக்க வேண்டும் என்ற சிந்தனையே உண்மை ஆன்மிகத்தின் உச்சம் என்று எண்ணி அவ்வாறான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் திரு.வி.க.
 திரு.வி.க. பன்முக ஆளுமை மிக்கவர். தமிழ் அறிஞர், சொற்பொழிவாளர், நூலாசிரியர், இதழாசிரியர், ஆசிரியர், ஆன்மிகச்செம்மல், தொழிற்சங்கத் தலைவர், தேசபக்தர், விடுதலைப் போராட்ட வீரர் என்ற பலமுகங்கள் அவருக்கு உண்டு. இவரின் துறைகளில் ஒன்றுதான் ஆன்மிகம்.
 இப்படி ஒரு கூற்றை திருவிக. உரைத்ததால் ஒட்டு மொத்தத் தமிழர்களின் ஒருமைப்பாட்டிற்கு உழைக்க வேண்டும் என்ற மையக்கருத்திற்கு வேறு எவர் சொல்வதைக் காட்டிலும் அதிகமான வலு கிடைக்கிறது. ஆன்மிகவாதியென்றாலே முக்தியடைய பிரார்த்தித்துக் கொண்டிருப்பவன் என்ற பொதுக்கருத்து நிலவுகிற போது அதைக் கூட வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு தமிழர்களுக்காக உழைப்பேன் என்று சொன்னதால் தமிழும் உயர்ந்து நிற்கிறது. திரு.வி.க.வும் மிக உயர்ந்து நிற்கிறார்.
 திரு.வி.க.வுக்குப் பத்துக் களங்களில் ஒன்று ஆன்மிகம். அவ்வாறான நிலையில் அவரின் சமூகம் சார்ந்த கருத்திற்கு அவ்வளவு அழுத்தம் கிடைக்கிறதென்றால் வீரத் துறவி விவேகானந்தரின் களம் ஆன்மிகம்... ஆன்மிகம் மட்டும்தான். அப்படியானால் அவரின் சமூகம் சார்ந்த கருத்திற்கு எத்தனை மடங்கு வலுவும் செல்வாக்கும் கிடைத்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது.
 கல்வி, உழைப்பின் மேன்மை, உழைப்பாளர் நிலை, இந்தியப் பெண்களின் இன்றைய நிலை, ஆங்கிலேயர் ஆட்சியின் கொடுமை, நாட்டுப்பற்று, வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது என்பது போன்ற ஐதீக மூடநம்பிக்கைகளை எதிர்த்து உறுதியாகக் களம் இறங்கிய செயல், இன்னும் இதுபோன்ற பல அம்சங்களில் விவேகானந்தரின் பார்வை என்னவாக இருந்திருக்கிறது என்பதைத் தனித்தனியாக ஆய்வு செய்து பார்த்தால் இவர் வழிவழியாக வந்த ஆன்மீகத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்ட துறவிகள் போல் அல்லாமல் தன்னைச் சுற்றி நடைபெறுகிற சமூகத்தின் அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாகக் கவனித்து உள்வாங்கியிருந்ததோடு, அவற்றைப் பற்றிய தனது கருத்தை அப்போதைக்கப்போதே வலுவாக வெளிப்படுத்தியுள்ளார் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.
 கல்வி கற்றவராக விளங்கியதும், ஆங்கிலத்தில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்ததும், சொற்பொழிவுக் கலை கைவசப்பட்டிருந்ததும், வாசிப்பதற்கு வசப்பட்டிருந்ததும், தொடர்ந்த பயணங்கள் மூலமாக சமூகத்தைப் புரிந்து கொள்ள முயற்சித்ததும் தலைமைத்தகுதி இயல்பாக அமையப் பெற்றிருந்ததும் விவேகானந்தரின் தனித்தன்மைகள் என்று கூறலாம்.
 செல்வமும் செல்வாக்கும் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவர், வாழ வேண்டிய வாலிப வயதில் துவராடை அணிந்து துறவியாக உருவெடுத்து கையில் திருவோடு ஏந்திச் சென்றதும், அவருக்கு இயற்கையாகவே அமையப் பெற்ற தோற்றப் பொலிவும், கம்பீரமான நடை, உடை, பாவனையும், தேவையான இடங்களில் சிங்கம் போல் சிலிர்த்தெழும் அவரின் அறச் சீற்றமும், மக்கள் சார்ந்த சிந்தனைகளை உள்ளார்த்தமாக வெளிப்படுத்திய அவரது பாணியும் மக்களிடம் அவர் மீது அனுதாபத்தையும் ஆதரவையும் ஏற்படுத்தியிருந்தன என்று சொல்லலாம்.
 கல்வி பற்றி கல்வியாளர்கள்தான் கருத்துச் சொல்ல வேண்டியவர்கள் அல்லவெனில் அமைச்சர்கள் அதிலும் கல்வி அமைச்சர்கள்தான் கருத்துச் சொல்ல வேண்டியவர்கள்; கல்வி பற்றிச் சிந்திக்கிற சில சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள்தான் கல்வி பற்றியான கருத்துச் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்ற கருத்து இப்போதும் கூட நிலவுகிறது. கல்வி பற்றியான இத்தனை விழிப்புணர்வு வந்துவிட்ட காலத்திலும் இப்படியான ஒரு கருத்து நிலவுகிற போது, நூற்று பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு விவேகானந்தர் வாழ்ந்த காலத்தில் கல்வித் துறையில் இந்தியா இருண்டு கிடந்த சூழலில், பேச வேண்டியவர்களே கல்வி பற்றி தேவையான அளவுக்குப் பேசாமல் இருந்தபோது விவேகானந்தர் தெரிவித்த கல்வி பற்றிய கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
 அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்று அங்கு கிடைத்த அனுபவங்களையும் உள்ளடக்கிய நிலையில் இந்தியாவிற்குத் திரும்பிய பிறகு, இங்கு நிலவிய சூழலையும் கணக்கிலெடுத்து விவேகானந்தர் கல்வி பற்றிய தனது கருத்தை அவருடைய மரணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு 1899 இல் தெரிவித்துள்ளார்.
 "நீங்கள் இந்தியா முழுவதும் ஏழைகளுக்காகப் பள்ளிக்கூடங்களை ஆரம்பிப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தப் பள்ளிக்கூடங்கள் இலவசமாக இருந்தாலும் கூட நீங்கள் அவர்களுக்குக் கல்வி அளிக்க முடியாது. உங்களால் எப்படி அவர்களுக்குக் கல்வி அளிக்க முடியும்? நாலு வயதுப் பையன் உங்களது பள்ளிக்கூடத்திற்குப் போவதற்குப் பதிலாக, வறுமை காரணமாக ஏதாவது ஒரு வேலைக்குத்தான் போவான். இப்போது மலை முகமதுவிடம் செல்லாவிட்டால் முகம்மதுதான் மலையிடம் செல்ல வேண்டும். அதாவது, ஏழைப் பையன் கல்வியை நாடி வர முடியாவிட்டால், கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும் என்று நான் சொல்கிறேன். உழவனது மகன் பள்ளிக்கூடம் இருக்கின்ற இடத்திற்கு வர முடியாதென்றால் அவன் இருக்கும் இடத்திலேயே, அவன் உழவு செய்யும் இடத்திலேயே, அவன் வேலை செய்யும் தொழிற்சாலையிலேயே நீங்கள் ஏன் அவனைச் சந்தித்துக் கல்வி புகட்டக்கூடாது? அவனது நிழலைப் போல அவனைத் தொடர்ந்து சென்று அவனுக்குக் கல்வி புகட்டுங்கள்'' என்று கூறியுள்ளார்.
 "ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்த நாட்டு மக்கள் பெற்றிருக்கும் கல்வி, அறிவாற்றல் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. நாம் மீண்டும் உயர்வடைய வேண்டுமானால், பொதுமக்கள் எல்லோருக்கும் கல்வியைப் பரப்பியாக வேண்டும். பொதுமக்களுக்குக் கல்வியைத் தந்து அவர்களை உயர்த்தி விடுங்கள். இது ஒன்றே ஒன்றுதான் நமது சிறப்பைப் பெறுவதற்கு உரிய ஒரே ஒரு வழியாகும்'' என்று அழுத்தமாகக் குறிப்பிடும் விவேகானந்தர் , அதே உரையில் "கல்வி, கல்வி, கல்வி - இது ஒன்றே இப்போது நமக்குத் தேவை. ஐரோப்பாவின் பல நகரங்களுக்கு நான் பயணம் செய்திருக்கிறேன். அங்கே சாதாரண ஏழை எளிய மக்களுக்குக்கூடக் கிடைத்திருக்கும் வாழ்க்கை வசதிகளையும் கல்வியையும் நான் கவனித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நமது நாட்டு ஏழை எளிய மக்களின் பரிதாப நிலையை நினைத்து நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். இந்த வேறுபாட்டிற்கு என்ன காரணம்? கல்வி என்பதே எனக்குக் கிடைத்த விடை'' என்றும் கூறியுள்ளார்.
 விவேகானந்தரின் உரைகள் பலவற்றில் கல்வி வேண்டும் என்று குறிப்பிடுகிற அதே முக்கியத்துவத்துடன் எத்தகைய கல்வி தேவை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
 "கல்வி என்பது, உன் மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணமாகாமல் உனக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டேயிருக்கும். வாழ்க்கையை உருவாக்கக்கூடிய, மனிதனை மனிதனாக்கக் கூடிய, நல்ல ஒழுக்கத்தை வளர்க்கக் கூடிய கருத்துருக்களைக் கிரகித்து, அவற்றை நாம் நம்முடையவையாக்கிக் கொள்ள வேண்டும். நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துருக்களைக் கிரகித்துக் கொண்டு, அவற்றை உன் வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால், ஒரு பெரிய நூல்நிலையம் முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவனை விட நீயே அதிகம் கற்றவனாவாய்'' என்று கல்விக்கு இலக்கணம் வகுக்கிறார் விவேகானந்தர். அத்தோடு இத்தகைய மேம்பட்ட கல்வியை ஒரு சிலருக்கு மட்டுமல்லாமல் ஜனநாயகப்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.
 ""தாழ்ந்த நிலையிலுள்ள நம்முடைய மக்களுக்குக் கல்வியைத் தந்து , இழந்துவிட்ட தங்களின் உயர்ந்த நிலையை அவர்கள் வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும். இதுதான் நாம் இப்போது செய்ய வேண்டிய ஒரே சேவையாகும்'' என்றும் , "உயர்ந்த கருத்துக்களை நமது பாமர மக்களுக்குக் கொடுங்கள். அந்த ஒரே ஒரு உதவிதான் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பிறகு அதன் விளைவாக மற்ற நன்மைகள் எல்லாம் வந்து சேரும். உன்னதக் கருத்துக்களையும் பொதுமக்களின் மனதில் புகும்படி செய்வது தான் நமது கடமை. அதன் பிறகு மற்றவற்றை அவர்கள் தங்களுக்குத் தாங்களே முடிவு செய்து கொள்வார்கள். இதுதான் இந்தியாவில் செய்யப்பட வேண்டிய பணியாகும்'' என்று கல்வி பற்றிய தனது அடுக்கடுக்கான கருத்துக்களை பல்வேறு சொற்பொழிவுகள், கடிதங்கள் மூலமாகத் தொடர்ந்து தெரிவித்து வந்திருக்கிறார், விவேகானந்தர்.
 விவேகானந்தரைப் போன்று ஆன்மிகத் துறையில் ஆழத் தடம் பதித்த துறவிகளில் எத்தனை பெருமக்கள், கல்விக்கும் சுயசிந்தனைக்கும் இத்தனை முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பது சிந்தனைக்குரியதாகும்.
 (தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com