தன்னிலை உயர்த்து! - 18

ஓர் ஆசிரியர் தனது மாணவர்களை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஆற்றங்கரைக்குச் சென்றார். மாணவர்களிடம் ஒரு கண்ணாடி ஜாடியைக் கொடுத்து, ""கற்களால் இந்த கண்ணாடி ஜாடியை நிரப்புங்கள்'' என்றார்.
தன்னிலை உயர்த்து! - 18

ஓர் ஆசிரியர் தனது மாணவர்களை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஆற்றங்கரைக்குச் சென்றார். மாணவர்களிடம் ஒரு கண்ணாடி ஜாடியைக் கொடுத்து, ""கற்களால் இந்த கண்ணாடி ஜாடியை நிரப்புங்கள்'' என்றார். மாணவர்களும் நிரப்பி எடுத்து வந்து, ஜாடியை ஆசிரியரிடம் கொடுத்து, ""ஐயா! முழுவதுமாக நிரப்பி விட்டோம்'' என்றனர்.  ""இதற்கு மேல் நிரப்ப முடியுமா?'' என்ற ஆசிரியரின் கேள்விக்கு, ""வாய்ப்பே இல்லை ஐயா'' என்றனர் மாணவர்கள். ஆசிரியர் கீழே கிடந்த சிறிய கூழாங்கற்களை எடுத்தார். அதே ஜாடியில் போட்டுக் குலுக்கினார். அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே சென்று நிரம்பின. மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை. ""இப்போது நிரம்பிவிட்டதா?'' என்று கேட்டார், ஆசிரியர். ""நிரம்பி விட்டது ஐயா'' என்றனர், மாணவர்கள் . 

அப்போது, ஆசிரியர் அங்கிருந்த மணலைக் கையில் அள்ளி ஜாடியில் போட்டார். ஜாடியை மேலும் குலுக்கினார். பெரிய கற்கள் மற்றும் சிறு கூழாங்கற்களுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது. மாணவர்கள் ஆச்சரியப்பட்டனர். இப்பொழுது மாணவர்களிடம், ""இதே ஜாடியை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா?'' என்றார் .  ""இருந்திருக்காது,  ஐயா!'' என்றனர் மாணவர்கள்.

""கேளிக்கை, களியாட்டம், வீண் அரட்டை, பொழுதுபோக்கு போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை. வீடு, வாகனம், ஆடம்பர பொருட்கள் போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை. வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அன்பு, கருணை, உடல்நலம், மனநலம், விருந்தோம்பல், அறச் செயல்கள் போன்ற உன்னதமான செயல்கள் பெரிய கற்கள் போன்றவை'' என்றார் 

ஆசிரியர்.  அற்பமான காரியங்களுக்கு வாழ்க்கையை முதலில் அர்ப்பணித்துவிட்டால், அடிப்படை செயலுக்கு வாய்ப்பில்லாமல் வாழ்க்கை தடம் மாறிவிடும். முதலில் அடிப்படை செயல்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுத்தால் மட்டுமே சின்ன சின்ன காரியங்களுக்கும்  இடம் இருக்கும். முக்கியத்துவமான செயல்பாடுகள் மட்டுமே வாழ்வின் அர்த்தங்களை நிர்ணயிக்கின்றன. 

உலக கோடீஸ்வரர்களில் ஒருவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வாரன் பப்பெட். அவர் தனது வெற்றிக்கு அடையாளமாக தனது வாழ்க்கையின் உயரிய லட்சியங்கள், தனது தொழிலின் லட்சியங்கள், கல்வியில் சாதிக்க வேண்டியவை என  இருபத்தைந்து லட்சியங்களைப் பட்டியலிட்டார். பின்னர், அவற்றில் மிக முக்கியமான ஐந்தினை, கற்களைப் போன்றவற்றைப் பட்டியலிட்டார். அதனை முதன்மைப்படுத்தினார். ஒவ்வொரு நாளும், இந்த ஐந்து லட்சியங்களைச் சார்ந்த பணிகளை முதலில் செய்து முடித்தார். இரண்டாவதாக, முக்கியமான ஐந்து லட்சியங்களைத் தேர்ந்தெடுத்தார். அவை கூழாங்கற்களைப் போன்றவை. அவற்றை நேரம் கிடைக்கும்போது செயல்படுத்தலானார். எஞ்சியதில் ஐந்து லட்சியங்களை வட்டமிட்டார். அவை மணல் போன்றவை. அவற்றை வாரத்தின் இறுதியில் நண்பர்களின் நட்பினைப் புதுப்பித்துக் கொள்ளவும், மனதினை அவ்வப்போது  உற்சாகப்படுத்தி கொள்வதற்கு மட்டுமே அதற்காக நேரத்தை ஒதுக்கினார். இறுதியில் வட்டமிடாத பத்து செயல்களை ஓரங்கட்டினார். வாழ்வின் உயரத்தில் நின்றார்.
வாழ்வின் முக்கியத்துவம் வாய்ந்தவை  அறத்தின் அடிப்படையில் அமைந்தால் அவை வெற்றியைத் தரும்.  குடிக்க தண்ணீர் எடுக்கச் சென்ற தருமர் தனது நான்கு தம்பிகளும், குளக்கரையில் இறந்து கிடப்பதைக் கண்டார். தருமரும் நீர் அருந்த குளத்தில் கை வைக்க, ""எனது கேள்விகளுக்குப் பதில் கூறினால், இத்தண்ணீரை பருகலாம், இல்லையெனில் உமது தம்பிகளுக்கு நேர்ந்த கதியே உனக்கும் நேரும்''   என்றான் யட்சன்.  நடந்ததைப் புரிந்து கொண்ட தருமர், ""கேள்விகளைக் கேள்'' என்றார். கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தருமரின் பதில்களில் திருப்தியடைந்த யட்சன், ""தருமரே! உமது தம்பியரில் யாராவது ஒருவருக்கு உயிர் தருகிறேன். யார் வேண்டும்?'' எனக் கேட்க, தருமரோ ""நகுலன் உயிர்பெற வேண்டும்'' என்றார். ""வீரம் மிகுந்த சகோதரர்களான அர்ஜுனனையும்,  பீமனையும் விடுத்து நகுலனது உயிரை ஏன் கேட்கிறாய்?'' என்றார் யட்சன். அதற்கு தருமர், ""என் தந்தைக்கு குந்தி, மாத்ரி என்று இருமனைவியர். எனது தாயார் குந்தியின் குழந்தைகளில் நான் ஒருவன் உள்ளேன். அதுபோல் மாத்ரி தாயின் ஒரு குழந்தையேனும் உயிரோடு இருப்பது தானே தர்மம்'' என்றார். தருமர் வெற்றியை விட அறத்தை முன்னிறுத்தினார். ஆதலால், யட்சன் மற்ற தம்பிகளையும் உயிர்ப்பித்தார். அறத்தை முன்னிறுத்தும் போது அனைத்தும் சாத்தியமாகிறது. 

மனிதப் பண்புகளை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றவை முதன்மையானவை. 

"இதம்தரும் மனையின் நீங்கி 
இடர்மிகு சிறைபட்டாலும்
பதந்திரு இரண்டும் மாறி
பழிமிகுந்திழிவுற்றாலும்
விதந்தரு கோடி இன்னல் 
விளைந்தென்னை அழித்திட்டாலும்
சுதந்திர  தேவி நின்னை
தொழுதிடல் மறக்கிலேனே...'  

எனக் கசிந்துருகி கவிதை பாடிய பாரதியின் முதன்மை சுதந்திரம் தவிர வேறொன்றும் இல்லை என்பது வெளிப்பாடு.

""அறத்தை முன்னிறுத்தாமல், நேர்மையற்ற வழியில் வெற்றியை நோக்கி முன்னேறினால் பாவங்களே வந்து சேரும்'' என்கிறார் மகாத்மா காந்தி. ""உழைக்காமல் கிடைக்கும் செல்வமும்,  ஒழுக்கம் இல்லாத அறிவும்,  நியாயம் இல்லாத வணிகமும், மனிதம் இல்லாத அறிவியலும்,  மனசாட்சியின்றி பெறும் இன்பமும், கொள்கை இல்லாத அரசியலும்,  தியாகம் இல்லாத வழிபாடும் அதர்மத்தின் வடிவங்கள். அவை பாவச் செயல்கள்'' என அழுத்தமாய்க் கூறுகிறார் மகாத்மா.  முக்கியத்துவம் அறியாதவர்கள் வாழ்வின் கடைசி மனிதர்கள். முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் வாழ்வில் முன்னேறுபவர்கள். முக்கியத்துவத்தை கையாளுபவர்களே முதன்மையானவர்கள்.

முக்கியத்துவத்திற்கு முன்னுரிமை அளிப்பவர் வாழ்க்கை முன்னிறுத்தப்படும். எஸ்.எல்.வி-3 திட்டப் பணிகளுக்கான தலைமையேற்றபோது டாக்டர்  ஏ.பி.ஜே. 
அப்துல் கலாமுக்கு நேர நிர்வாகம் ஒரு சவாலாக இருந்தது. தினமும் காலை நடைப் பயிற்சியின் போதே அன்றைய அலுவல் திட்டத்தைத் தயாரித்து அதில் ஒவ்வொரு நாளும் நிறைவேற்ற வேண்டிய முக்கியமான மூன்று செயல்களைத் தீர்மானித்திருக்கிறார். அவரது அக்னிச் சிறகுகளில், "அலுவலகத்தில் நுழைந்ததும் முதல் வேலையாக எனது மேசையில் ஒழுங்குபடுத்துவதில் பத்து நிமிடங்கள் செலவிடுவேன். எல்லாத் கோப்புகளையும் விரைவாக துருவிப்பார்த்து உடனடிக் கவனம் செலுத்த வேண்டியவை, முக்கியத்துவம் குறைந்தவை, ஒத்திபோட வேண்டியவை, படிப்பதற்கானவை என பகுத்துக்கொள்வேன். அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியவை தவிர வேறு எதுவும் மேசைகளில் இருக்காது' என்கிறார். முக்கியத்துவத்திற்கு முன்னுரிமை அளித்ததால்தான் அப்துல் கலாம்  வாழ்வின் உன்னத மனிதர்களில் ஒருவராய்த் திகழ்ந்தார்.

"நாடு எனக்கு என்ன செய்தது என்பதைவிட, நாட்டிற்கு நான் என்ன செய்தேன்?' என்ற அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியின் வரிகளைப்போல்,  தனது நாட்டின் நலன் காப்பவர்களே தலைவர்கள். "ஒரு படையை வழிநடத்திச் செல்லும் ஒரு தளபதிக்கு,  எப்போதும், எந்நேரத்திலும், அவரது நாட்டின் பாதுகாப்பு, கெளரவம் மற்றும் குடிமக்கள் நலனே முதன்மையாக இருக்கவேண்டும். அடுத்ததாக, தனது கட்டளைக்கு செயல்படும் போர்வீரர்களின் நலனும், மரியாதையும் இடம்பெற வேண்டும். தலைவனின் சொந்த நலனும், பாதுகாப்பும் எப்போதும், எந்நேரத்திலும் இறுதியாகவே இருக்க வேண்டும்' என்கிறார் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி பீல்டு மார்ஷல் பிலிப் ஷெட்வுட். 

அன்பை முதன்மைப்படுத்தினால் வாழ்வு அழகாகிறது.  அன்று இரவு பத்து மணி இருக்கும். ""அப்பா... உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?'' என்றான் அவரது பத்து வயது மகன். ""கேள்'' என்றார் தந்தை. ""ஒரு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?'' என்ற மகனின் கேள்விக்கு,  ""இது உனக்கு தேவையில்லாதது; இதை ஏன் கேட்கிறாய்?'' என்றார் கோபத்துடன். இருப்பினும்,  ""நூறு டாலர்'' என்று பெருமையாகச் சொன்னார். ""அப்பா... எனக்கு ஐம்பது டாலர் கடனாகத் தர முடியுமா?'' என்றதும், தந்தை கோபமடைந்தார். ""பொம்மை வாங்க வேண்டுமா? அதற்கு இத்தனை கேள்வியா?'' என்றார். வாடிய முகத்தோடு நீண்ட நேரம் கழித்தும் தூங்காமல் விழித்திருந்த மகனிடம், ""இந்தா! நீ கேட்ட 50 டாலர்'' என்று வேண்டா
வெறுப்பாய் தந்தார்.

உடனே எழுந்து ஓடிச்சென்று ஒரு பையில் தான் சேர்த்து வைத்திருந்த 50 டாலரை எடுத்து வந்தான். ""அப்பா! இப்பொழுது என்னிடம் நூறு டாலர் இருக்கிறது. இதை வைத்துக் கொள்ளுங்கள். நாளை நீங்கள் அலுவலகத்தில் இருந்து ஒரு மணி நேரம் முன்னதாக வருகிறீர்களா! ஒரு மணி நேரம் என்னோடு செலவிடுங்கள்'' என்றான். சுக்குநூறாகிப் போனது தந்தையின் இதயம். தனது குழந்தை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்து, நிறையப் பணம் சம்பாதிக்க இரவு பகல் பாராது உழைத்தார் தந்தை,  ஆனால், மகனின் மகிழ்ச்சி தந்தையுடன் விளையாடுவதுதான் என்பது  புரியாமல். 

பணம் அவசியம்தான். ஆனால் அதைவிட பாசம் முக்கியம். முக்கியத்துவத்தினை அறியாமல் வாழ்க்கை பயணமானால் வாழ்க்கை திசைமாறிப் போகும். அவ்வப்போது நமது முக்கியத்துவத்தையும், முன்னுரிமையையும் சரிசெய்து கொண்டால்,  நமது லட்சியம் அர்த்தமுள்ளதாகவே பயணிக்கும்.

முக்கியத்துவம் முதன்மையானது!
முக்கியத்துவமே மனிதனை முழுமைப்படுத்தும்! 

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: 
காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com