நாடகக் கலைக்கு உயிர் கொடுக்கும் இளைஞர்கள்!

தமிழகத்தில் நாடகக் கலைக்கு தனி வரலாறும், தனி சிறப்பும் உண்டு.வரலாற்று நிகழ்வுகளைச் சித்திரிப்பதாகவும்,
நாடகக் கலைக்கு உயிர் கொடுக்கும் இளைஞர்கள்!

தமிழகத்தில் நாடகக் கலைக்கு தனி வரலாறும், தனி சிறப்பும் உண்டு.
வரலாற்று நிகழ்வுகளைச் சித்திரிப்பதாகவும், பொழுதுபோக்குக்காகவும், கலை திறன்களை வெளிப்படுத்துவதற்காகவும், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், சுதந்திர வேட்கை கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் நாடகக் கலை தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆடல் பாடல், உரையாடல், அபிநயம், இசை போன்றவற்றின் கூட்டுக் கலவையாக சிந்தைக்கும், கண்ணுக்கும் விருந்தளிப்பது நாடகக் கலையாகும்.
தமிழகத்தைப் பொருத்தவரை நாடகத்தின் நீட்சியாகத்தான் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. நாடகத்தில் நடித்துப் புகழ்பெற்ற பலர் திரைக்கலைஞர்களாக மாறி புகழின் உச்சியைத் தொட்டனர். 
நவீன சினிமா, டிவி., கம்ப்யூட்டர் போன்றவற்றின் வரவால், சிறிது சிறிதாக நாடகக் கலை மக்களிடம் இருந்து மறையத் தொடங்கியது. மேடை நாடகத்திற்கு இந்த நலிவு ஏற்பட்ட போதிலும், வீதி நாடகங்கள் நடத்தப்படுகின்றன. பல்வேறு கருத்துகளைப் பிரசாரம் செய்ய, சுகாதாரம், சுற்றுச்சூழல் போன்ற சமூகப் பிரச்னைகள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வீதி நாடகங்கள் பயன்படுகின்றன. மேடை நாடகங்கள் சென்னை போன்ற பெரிய நகரங்களில் பெரிய சபாக்களில் நடத்தப்படுகின்றன. எனினும் சினிமாவின் வருகைக்கு முன்பிருந்த நாடகத்தின் செல்வாக்கு இப்போது இல்லை என்றே சொல்லலாம். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம், ஆர். பட்டணம் கிராமத்தில் இளைஞர்களால் ஆண்டுதோறும் சமூக - சரித்திர நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. 
நிகழ் ஆண்டு சிவாஜி கண்ணன் என்பவரின் இயக்கத்தில் "நெல்லை சீமையின் எல்லைச்சாமி வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற தலைப்பில் நவீன வரலாற்று நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது. அலைகடலெனத் திரண்டிருந்த அனைவரின் வரவேற்பையும் அது பெற்றது. கிராமத்தில் படித்த இளைஞர்கள் சுமார் 20 பேர் இந் நாடகத்தில் கதாபாத்திரம் ஏற்று நடித்துக் காட்டியது நாடகக் கலையின் மீது இளைஞர்களிடம் உள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது. 
இதுகுறித்து இந்த நாடகத்தில் நடித்த ராஜகுமாரனிடம் பேசியதிலிருந்து...
"ஆண்டுதோறும் இக் கிராமத்தில் திருவிழா காலங்களில் சமூக நாடகம், வரலாற்று நாடகம் ஆகியவற்றை அரங்கேற்றுவது வழக்கம். இதில், கிராமத்து இளைஞர்களான நாங்களே பாத்திரம் ஏற்று நடிப்போம். வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்துக்கு மூன்று மாதங்களாக பயிற்சி எடுத்தோம். இது போன்ற நாடகங்களால் மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்ல முடிகிறது.
நாடகத்தில் நடிக்க எங்களைப் போன்று ஏராளமான இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். இவர்களைத் தமிழகம் கண்டறிந்து ஊக்கப்படுத்திட வேண்டும்'' என்றார்.
- ஆர்.ரமேஷ்கிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com