9 கின்னஸ் சாதனைகள்!

தற்காப்புக் கலையில் 9 கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ளார் மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த நாராயணன் என்ற இளைஞர்.
9 கின்னஸ் சாதனைகள்!

தற்காப்புக் கலையில் 9 கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ளார் மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த நாராயணன் என்ற இளைஞர். சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தபோது தற்காப்புக் கலைகளில் ஒன்றான டேக் வாண்டோ மீது ஆர்வம் ஏற்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். அதில் கருப்புப்பட்டை பெற்ற பிறகு டிசிஎஸ் நிறுவனத்தில் பொறியாளராக பணியைத் தொடங்கியுள்ளார். தற்காப்புக் கலையில் இவரது திறமையை அறிந்த நிர்வாகம், தற்காப்புக் கலையைப் பயிற்றுவிக்கும் வாய்ப்பை வழங்கியது.இதையேற்று பயிற்சி அளித்த நாராயணன் பல தற்காப்புக்கலை நிபுணர்களை உருவாக்கினார்.
 இதைத்தொடர்ந்து டேக்வாண்டோ தற்காப்புக் கலையை பிரபலப்படுத்துவதற்காக மென்பொருள் பொறியாளர் பணியைத் துறந்து மதுரையில் டேக் வாண்டோ பயிற்சிப்பள்ளியைத் தொடங்கினார். அங்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு தற்காப்புக்கலை பயிற்சி அளித்து வந்த நாராயணன், டேக் வாண்டோ தற்காப்புக்கலையை பிரபலப்படுத்துவதற்காக உலக சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கினார்.
 அதன் ஒரு பகுதியாக 2016 அக்டோபரில் ஹைதராபாத்தில் டேக்வாண்டோ தற்காப்புக்கலை நிபுணர்கள் 50 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை முயற்சியில் மதுரையில் இருந்து 11 பேருடன் பங்கேற்றார். அதில் 50 ஆயிரம் கிக்ஸ் என்றழைக்கப்படும் கால் உதைகளை செய்து காட்டினர். இது கின்னஸ் சாதனையில் இடம்பெற்றதைத் தொடர்ந்து மதுரையில் 2017 ஏப்ரலில், 250 தற்காப்புக்கலை நிபுணர்களுடன் அரை மணி நேரத்தில் 1060 டேக்வாண்டோ பயிற்சி முறைகளை செய்து காட்டினார். இந்த சாதனையும் கின்னஸில் இடம்பெற்றது.
 இதையடுத்து தனிநபர் சாதனை முயற்சிகளுக்கு திட்டமிட்ட நாராயணன் அதற்காக கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டார். அதன் விளைவாக 2017 டிசம்பரில், தனிநபராக 1 நிமிடத்தில் எல்போ ஸ்டிரைக் என்றழைக்கப்படும் முழங்கையால் தாக்குவதை 160 முறை மேற்கொண்டார். இந்த முயற்சி கின்னஸ் சாதனையில் இடம்பெற்று அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2018 ஏப்ரலில், 30 நொடிகளில் 52 சைடு கிக்(காலால் உதைப்பது), அதே ஆண்டின் மே மாதத்தில் 30 நொடிகளில் 15 தர்ப்பூசணி பழங்களை காலால் உதைத்து உடைத்தது, 2018 ஆகஸ்ட்டில், வலது கையில் 1 கிலோ எடையை சுமந்துகொண்டு 1 நிமிடத்தில் 265 பஞ்ச்சுகள் என்றழைக்கப்படும் கையால் குத்துகள் விடுவது, மே மாதம் 30-ஆம் தேதி, 3 நிமிடங்களில் 490 எல்போ ஸ்டிரைக் தாக்குதல், ஆக்ஸ்ட்30-ஆம் தேதி கையில் 1 கிலோ எடையுடன் ஒரு நிமிடத்தில் 276 குத்துக்கள் விட்டு தனது முந்தைய கின்னஸ் சாதனையை தானே முறியடித்தது, அடுத்ததாக அக்டோபர் 2018-இல் இரு கைகளிலும் 1 கிலோ எடையை வைத்துக்கொண்டு இரு கைகளாலும் 3 நிமிடங்களில் 1510 குத்துக்கள் விடுவது ஆகிய 9 கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ளார். நாராயணின் 9 சாதனைகளை அறிந்து டேக் வாண்டோ அமைப்பின் சர்வதேசத் தலைமை தென்கொரியாவுக்கு அவரை வரவழைத்து டேக் வாண்டோ அமைப்பின் சர்வதேச தலைவர் மூலம் நாராயணனுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்து பாராட்டியது. மேலும் 2019 பிப்ரவரியில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டேக்வாண்டோ சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க நேரடியாக நாராயணனைத் தேர்வு செய்துள்ளது.
 கின்னஸ் சாதனைகள் தொடர்பாக நாராயணன் கூறும்போது, "குங்ஃபூ, கராத்தே மட்டுமே தற்காப்புக்கலைகள் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் கொரியாவில் தோன்றிய டேக் வாண்டோ மிகச்சிறப்பான தற்காப்புக் கலையாகும். குங்ஃபூ, கராத்தே போன்றவற்றை விட டேக்வாண்டோவில் வேகம் அதிகமாக இருக்கும். மேலும் குங்ஃபூ, கராத்தே போன்ற தற்காப்பு கலைகளுக்கு ஒலிம்பிக் அமைப்பு அங்கீகாரம் அளிக்கவில்லை. ஆனால் டேக்வாண்டோவுக்கு ஒலிம்பிக் அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் டேக் வாண்டோவும் இடம் பெற்று வருகிறது. டேக் வாண்டோவில் சிறப்பாக செயல்பட்டு மாநில, தேசிய அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு விளையாட்டு அடிப்படையிலான அரசு வேலை வாய்ப்பு ஒதுக்கீடுகளும் உண்டு. எனவே டேக் வாண்டோவை அனைவரின் மத்தியிலும் பிரபலபடுத்துவதற்காக 2 கூட்டு கின்னஸ் சாதனைகள், 7 தனி நபர் கின்னஸ் சாதனைகள் படைத்துள்ளேன். இந்த 9 சாதனைகளையும் கின்னஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டு சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது. மேலும் அடுத்தடுத்து கின்னஸ் சாதனைகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்'' என்றார்.
 ச.உமாமகேஸ்வரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com