சுற்றுச்சூழல் பாதுகாப்பு: ஜப்பானில் சோப்புத்தூள் இல்லை!

நாம் அன்றாடம் சலவைக்குப் பயன்படுத்தும் சோப்புத்தூளும், அலட்சியமாக வெளியேற்றப்படும் சமையல் அறை கழிவுகளும் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துமா என்றால், கண்டிப்பாக ஏற்படுத்தும் என்கிறார்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: ஜப்பானில் சோப்புத்தூள் இல்லை!

நாம் அன்றாடம் சலவைக்குப் பயன்படுத்தும் சோப்புத்தூளும், அலட்சியமாக வெளியேற்றப்படும் சமையல் அறை கழிவுகளும் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துமா என்றால், கண்டிப்பாக ஏற்படுத்தும் என்கிறார் ஜப்பான் நாட்டிற்கு 15 நாள்கள் விழிப்புணர்வு சுற்றுலா சென்று திரும்பியுள்ள திண்டுக்கல்லைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஜெ.நாகேந்திரன்.
 ஆசிய நாடுகளில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில், ஜப்பானிய அரசும், ஹியோஷி என்ற ஜப்பானிய நிறுவனமும் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சுற்றுப்புறச் சூழலின் முக்கியத்தும் குறித்து பேச்சுப் போட்டி நடத்தி, வெற்றிப் பெறும் மாணவர்களை ஜப்பான் நாட்டிற்கு ஹியோஷி நிறுவனம் சுற்றுலா அழைத்துச் செல்கிறது. அந்த வகையில், நிகழாண்டிற்கான போட்டியில், திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஜெ.நாகேந்திரன் மாநில அளவில் முதலிடம் பெற்று, ஜப்பான் நாட்டிற்கு 15 நாள்கள் சுற்றுலா சென்று திரும்பியுள்ளார்.
 ஜப்பான் நாட்டினர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அளிக்கும் முக்கியத்துவம் குறித்து அவர் நம்மிடம் பேசியதாவது:
 "ஜப்பான் நாட்டினர் கழிவுப் பொருள்களை மறு உபயோகம் செய்வதற்கும், அதனை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் அழிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். தொழிற்சாலை கழிவுகளால் மீன் வளம் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, அந்த மீன்களைச் சாப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளுமே ஜப்பானியர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க காரணமாக அமைந்துள்ளது.
 தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் பயன்படுத்தப்படும் சலவை சோப்புத் தூள், தண்ணீரை மட்டுமின்றி நிலத்தையும் நச்சாக்கும் என்று சொன்னால் நம்மால் நம்ப முடியாது. ஆனால் அது தான் உண்மை. நாம் பயன்படுத்தும் சலவைத் தூளில் பாஸ்பரஸ் மற்றும் காரத் தன்மை அதிகமாக உள்ளது. ஜப்பான் நாட்டின் பீவாக்கோ ஏரியில் சோப்புத் தூள் தொழிற்சாலை கழிவுகள் கலந்ததால், அங்குள்ள ஷிகா மாநிலத்தைச் சேர்ந்த பலர் 1980களில் மரணம் அடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட இல்லத்தரசிகள், முதன் முறையாக போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர். அதன் மூலம் விழிப்புணர்வு பெற்ற ஜப்பானியர்கள், காரத் தன்மை அதிகமுள்ள சோப்புத்தூள் தயாரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அப்போது முதல், பாஸ்பரஸ் நீக்கப்பட்ட, குறைந்த காரத் தன்மையுடன் கூடிய திரவத் தன்மையிலான சோப்பையே சலவைக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
 காரத் தன்மை நிறைந்த சோப்புத் தூளை ஜப்பானியர்கள் முற்றிலுமாக புறக்கணித்ததால், இன்றைக்கு அதற்கான தொழிற்சாலைகளே அங்கு கிடையாது. இந்தியாவைப் பொருத்தவரை, காரத் தன்மை அதிகமுள்ள சோப்புத் தூளையே இன்று வரை பயன்படுத்தி வருகிறோம். ஜப்பானியர்களைப் பின்பற்றி, குறைந்த திரவ வடிவிலான சோப்பு தயாரிப்புக்கு நாமும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
 அதேபோல், மனிதக் கழிவுகள் மற்றும் சமையல் கழிவுகளை, நேரடியாக நீர்நிலைகளில் கலக்கும்போதும் அதிக மாசு ஏற்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில், ஜப்பானியர்கள் ஜொகாசோ என்ற மினி சுத்திகரிப்பு நிலையத்தை, தொழிற்சாலை முதல் வீடுகள் வரையிலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுத்திகரிப்பு மேலாண்மையைப் பின்பற்றாத தொழில் நிறுவனங்களின் உரிமம் ஜப்பானில் ரத்து செய்யப்படுகிறது.
 ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால், ஆசிய நாடுகளின் கடல் பகுதியை கழிவுகளை கொட்டும் இடமாக ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்துவதாகவும் ஜப்பானியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து ஆசிய மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே, ஆண்டுதோறும் மாணவர்கள் பங்கேற்கும் பேச்சுப் போட்டியை நடத்துகின்றனர்.
 இந்தியா, சீனா, பாகிஸ்தான், வியத்நாம், மியான்மர், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. மாணவர்கள் மூலமாக, இளைய தலைமுறையிடம் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஜப்பானியர்கள் முயற்சித்து வருகின்றனர். இவ்வுலகிற்கு ஏற்படும் பாதிப்பு, அனைத்து நாடுகளில் வாழும் மக்கள் மீதும் எதிரொலிக்கும். கழிவுகள் இல்லாத நிலையை உருவாக்கி, இந்த பூமியைப் பாதுகாக்க வேண்டும் என்பதே ஜப்பானியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளில் நம்நாட்டு இளைஞர்கள் தங்களுடைய பங்களிப்பை உடனடியாக தொடங்க வேண்டும்'' என்றார்.
 ஆ.நங்கையார்மணி
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com