சரியான பார்வை...சரியான வழி... சரியான செயல்! 72

நமது மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதில்லை. உதாரணமாக, மதுரையைச் சுற்றி மல்லிகைப் பூ பரவலாக விளைவிக்கப்படுகிறது
சரியான பார்வை...சரியான வழி... சரியான செயல்! 72

நமது மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதில்லை. உதாரணமாக, மதுரையைச் சுற்றி மல்லிகைப் பூ பரவலாக விளைவிக்கப்படுகிறது. இந்த மலர்களின் வாழ்க்கைக் காலம் மிகக் குறுகியதாகும். இந்த மலர்களை அவற்றின் தரத்துக்கு ஏற்ப வகைப்படுத்தி, விலை நிர்ணயம் செய்து, மலர்கள் தேவைப்படும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்று வாணிபம் செய்வதற்குத் தேவையான மேலாண்மை சார்ந்த ஆய்வுகள் மிகக் குறைவாக உள்ளன. நமது நாட்டில் புணேவிலிருந்தும் ஹோசூரிலிருந்தும் உலக நாடுகளுக்கு மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றனர். 
நம்நாட்டு மக்கள் உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள். அமெரிக்கா, வளைகுடாப் பகுதிகளில் அதிக அளவில் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் மலர்களை அதிக அளவில் பயன்படுத்துவது இயல்பு. ஆனால் அவர்களுக்குத் தேவையான மலர்களை மிகக் குறுகிய நேரத்தில் வாடிப் போவதற்குள் பாதுகாப்பாக எவ்வாறு அனுப்பி வைப்பது என்பது குறித்து ஆராய்ச்சி செய்வதற்கு நமது மாணவர்களை நம்நாட்டிலுள்ள மேலாண்மைக் கல்லூரிகள் ஊக்குவிப்பதில்லை. அத்தகைய ஆராய்ச்சி, மலர்களை விளைவிக்கும் விவசாயிகள், கொள்முதல் செய்யும் வணிகர்கள் உட்பட பலருக்கும் பெரிய அளவில் உதவும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 
நமது திருப்பூரிலிருந்து எண்ணற்ற ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. திருப்பூரில் ஏற்றுமதியில் ஈடுபடும் பெரும்பான்மையானோர் அனுபவ அடிப்படையில் தங்களை மேம்படுத்திக் கொண்டுள்ளனர். 
அந்த அறிவின் அடிப்படையில் உலகச் சந்தையில் நமது பொருட்களை விற்றும் வருகின்றனர். ஏற்றுமதி செய்யும் தொழில்முனைவோர்களான இவர்களுக்கு என பல ஆராய்ச்சிகளைச் செய்து, இன்னும் அவர்கள் உலகச் சந்தையில் தங்களை மேம்படுத்திக் கொள்ளவதற்கான வழிவகைகளை அந்த ஆராய்ச்சிகள் மூலமாகக் கண்டறிந்து மாணவர்கள் வழங்கினால், ஏற்கெனவே ஏற்றுமதியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், புதிதாக ஈடுபட விரும்புகிறவர்களுக்கும் அது பயனுள்ளதாக அமையும். 
திருப்பூர் தொழில்முனைவோர்கள் தங்கள் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான ஆராய்ச்சிகள் மிகவும் தேவை. சர்வதேச சந்தை ஆய்வு மற்றும் விநியோகம் தொடர்பான பல்வேறு ஆய்வுகளை நமது நாட்டில் உள்ள மேலாண்மைக் கல்லூரிகள் செய்ய வேண்டியது அவசியமாகும். 
இது போன்று கூட்டுறவு அமைப்புகளின் வாயிலாக பல பொருள்கள் தயாரிக்கப்பட்டு தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. இன்று காதி கிராப்ட் மூலமாக தயாராகும் பொருட்களை விற்பனை செய்யும்போது போட்டியாளர்களாகப் பன்னாட்டு நிறுவனங்கள் எதிரில் நிற்கின்றன. கூட்டுறவு அமைப்புகளின் தயாரிப்புப் பொருட்களை ஆன் லைன் மூலமாக எவ்வாறு விற்பனை செய்வது என்ற ஆராய்ச்சி இப்போதைய தேவையாகும். இந்த ஆராய்ச்சியின் மூலம் இத்தொழில் விரிவடையும். இத்தொழில் சார்ந்த பல்வேறு பிரிவினரின் வாழ்க்கைத் தரம் மேம்படும். 
இதுபோன்று பழங்குடியினர் உருவாக்கக் கூடிய பொருள்களை உலகச் சந்தையில் எடுத்துச்செல்வதற்கான சூழலை ஏற்படுத்த நமது மேலாண்மைக் கல்வியின் ஆராய்ச்சிகள் உதவ வேண்டும். 
இன்றைய இளைய தலைமுறை மாணவர்களுக்கு மேலாண்மைக் கல்வியை நன்கு பயிற்றுவித்து, உலகச் சந்தையில் நமது நாட்டுப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும். 
குறிப்பாக இந்தியாவில் இன்பார்மல் எகானமி எனப்படும் முறைசாராத பொருளாதாரம் நமதுநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இந்த முறைசாராத பொருளாதாரத்தில் விவசாயம் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. 
எனவே பெரும்பான்மையான மேலாண்மைக் கல்விநிறுவனங்கள், மேலாண்மை பற்றி அதிகம் தெரியாத தங்கள் அருகில் உள்ள விவசாயக் குடும்பத்தினருக்கு மேலாண்மை முறைகளைக் கற்றுக் கொடுத்தால், அவர்கள் தங்கள் விளைபொருட்களை உலக அளவிற்கு எடுத்துச் செல்வார்கள். 
வாசனைப் பொருள்கள், தானியங்கள், மலர்கள் உட்பட நம்நாட்டின் பல இயற்கை வளங்களை முறையாகத் திட்டமிட்டு ஆராய்ந்து, அவற்றை விற்பனை செய்ய சிறந்த முறைகளை இந்த விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி உதவினால் நல்லது. எப்படிப்பட்ட கூட்டுறவு இயக்கங்கள் தேவை, என்னென்ன தொழில்ரீதியான தேவைகள் உள்ளன என்பதை அறிமுகப்படுத்தினால் நமது நாட்டின் கிராமப்புறங்களில் பெரிய அளவில் மாறுதல்கள் ஏற்படும். 
கிராமத்தின் பல்வேறு விவசாயிகள் தனித்தனியாக விவசாயம் செய்து வருகின்றனர். தனிப்பட்ட ஒருவரால் வேளாண்மைக் கருவிகளை வாங்க முடியாது. அந்த வேளாண்மைக் கருவிகளை பொதுவாக வாங்கி அவற்றைப் பயன்படுத்தலாம் என்பது போன்ற வேளாண்மை யுக்திகளை கற்றுக் கொடுக்க வேண்டும். 
நாம் இதுவரை பார்த்த மேலாண்மைத் துறைகள் எல்லாம் மேலாண்மைத்துறையை மட்டுமே மையப்படுத்தியவை. நாம் இப்போது பார்க்கப் போவது என்னவென்றால், எம்பிஏ இன்டர் டிசிப்ளினரி புரோகிராம் என்ற படிப்பைப் பற்றி. இன்டர் டிசிப்ளினரி என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளை இணைத்து ஒரு குறிப்பிட்ட துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு துறைகளின் சிறப்பம்சங்களை எடுத்து இணைத்து இந்தத் துறையை எவ்வாறு மேன்மேலும் வளர்ப்பது என்ற நோக்கத்துடன் உலகின் மிகச் சிறந்த மேலாண்மைக் கல்லூரிகள் இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ளன
தி வார்ட்டன் ஸ்கூல் ஆஃப் தி யுனிவர்சிட்டி ஆஃப் பென்சில்வேனியா என்ற உலகிலேயே சிறந்த மேலாண்மைப் பல்கலைக்கழகமானது எம்பிஏ இன் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் என்ற மேலாண்மைக் கல்வியை வழங்கி வருகிறது. MBA/MA 
LAUDER JOINT DEGREE IN INTERNATIONAL STUDIES என்ற இரு பட்டப்படிப்புகள் சேர்ந்த கல்வியை வழங்கி வருகிறது. இந்தப் படிப்பில் பன்னாட்டு மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன.
அந்தந்த நாடுகளில் மானுடவியல், சமூகவியல் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக அதற்கான கல்வியும் கற்பிக்கப்படுகிறது. இந்தப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இதில் மாணவர்கள் குளோபல் நாலெட்ஜ் லேப் என்று சொல்லக் கூடிய ஓர் ஆய்வகம் அமைந்துள்ளது. மொழி, மேலாண்மை, கலாசார திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கும்விதமாக அவற்றை நடைமுறை சார்ந்து இந்த ஆய்வகம் மூலம் தெரிந்து கொள்கிறார்கள். ஆராய்ச்சிகளும் மேற்கொள்கிறார்கள்.
இந்த கல்வி நிறுவனத்துக்கு வெளியே உள்ள நிறுவனங்கள், அறக்கட்டளைகள், நிதி வங்கிகள், ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், வணிகக் கழகங்கள் ஆகியவை அவற்றின் தேவைக்காகத் தரக்கூடிய மேலாண்மை சார்ந்த ஆய்வுகளைச் செய்கிறார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
இந்த பாடத்திட்டம் 24 மாதங்களுக்கு வடிவமைக்கப்பட்டது. இதில் ஆண்டில் மூன்று மாதங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அந்தந்த நாடுகளில் உள்ள மொழியையும், பொருளாதாரத்தையும், வரலாற்றையும், அரசியலையும், வணிகத்தையும், கலாசாரத்தையும் நன்கு அறிந்து இவற்றை இணைத்து ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்கள். 
இந்த ஆராய்ச்சிகள் அந்தந்த நாட்டின், பகுதிகளின் தற்போதைய தேவைகளை முன்னிறுத்துவதாக இருக்கின்றன. அந்த நாட்டை வெளியிலிருந்து பார்க்கும் ஒருவரின் கண்ணோட்டத்துடன் பார்த்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்போது அது குறிப்பிட்ட சாய்வு இல்லாமல், பரந்த பார்வையாகிவிடுகிறது. அந்நாட்டின் நிலைமைகள், குறைகள், நிறைகள் அறியப்பட்டு ஆராய்ச்சி செய்து அவற்றை ஆவணப்படுத்துகிறார்கள்.
THE FRANCIS J. & WM. POLK CAREY JD/MBA   என்ற மேலாண்மைப் படிப்பானது மாணவர்களை சட்டம் மற்றும் வணிகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உலக அளவில் பல்வேறு நாடுகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யும் போது அந்த ஒப்பந்தம் சார்ந்த சட்டங்கள் எவ்வாறு அமையவேண்டும், சர்வதேச அளவிலான பணமதிப்புகளின் ஏற்றத்தாழ்வுகளை மனதில் கொண்டு, எவ்வாறு உருவாக்குவது என்று கற்றுக் கொடுக்கிறது. ஒரு புதிய மருந்து அல்லது உயிரியல் சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்கும்போது அவற்றுக்கான சட்டதிட்டங்களை எவ்வாறு வடிவமைப்பது என்பதைப் பற்றி பயோ எத்திக்ஸ் லா சொல்லித் தருகிறது. 
இதைப் படித்து முடிக்கக் கூடிய மாணவர்கள் பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் தேவைகளை அறிந்து, அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உலக அளவில் உள்ள பிற பன்னாட்டு நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகளை- அதன் அனுபவங்களைத் தொகுத்து ஆராய்ச்சி செய்து, பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கிறார்கள். எந்தத் துறையில் எங்கெல்லாம் முதலீடு செய்வது, நிதி சேவை, மேலாண்மையில் பொதுமக்களின் நலனைஎவ்வாறு கவனத்தில் கொள்வது, அரசுகளுக்கு இடையூறு இல்லாமல் எவ்வாறு நடந்து கொள்வது என்பன போன்ற விஷயங்களில் இம்மாணவர்கள் மிக மிக முக்கியப் பங்களிப்பு செய்கிறார்கள். 
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: 
சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com