கைத்தொழில் கற்க...இணையதளம்!

"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்றார் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை.
கைத்தொழில் கற்க...இணையதளம்!

"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்றார் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை. இந்த உலகின் பயன்பாட்டிலிருக்கும் பல்வேறு பொருட்களைச் செய்வதற்கான கைத்தொழில்களைக் கற்றுக் கொள்ள உதவும் வகையில் ஓர் இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 
இந்த இணையதளத்தில் தொழில்நுட்பம், பணிமனை, கைத்தொழில், இல்லம், உணவு, விளையாட்டு, வெளிப்புறம், அணிகலன்கள் எனும் முதன்மைத் தலைப்புகள் தரப்பட்டிருக்கின்றன. 
ஒவ்வொரு தலைப்பின் கீழும், தலைப்புடன் தொடர்புடைய பல்வேறு பொருட்களைச் செய்வதற்கான படக்குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்படக்குறிப்பின் மேல் சொடுக்கினால், அப்பொருளைச் செய்வதற்குத் தேவையான பொருட்கள், அவற்றை இணைய வழியில் வாங்குவதற்கான இணையதளங்களுக்கான இணைப்புகள், அதனைக் கொண்டு பொருளைச் செய்வதற்கான வழிமுறைகளைப் படங்களுடன் விளக்கும் குறிப்புகள், அதனை விளக்கும் வீடியோக்கள் உள்ள யூ டியூப் இணையதள இணைப்புகள் போன்றவையும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 
தற்போதைய நிலையில் இந்தத் தளத்தில், தொழில்நுட்பம் எனும் தலைப்பில் 1424 பக்கங்களும், பணிமனை எனும் தலைப்பில் 671 பக்கங்களும், கைத்தொழில் எனும் தலைப்பில் 714 பக்கங்களும், இல்லம் எனும் தலைப்பில் 623 பக்கங்களும், உணவு எனும் தலைப்பில் 564 பக்கங்களும், விளையாட்டு எனும் தலைப்பில் 510 பக்கங்களும், வெளிப்புறம் எனும் தலைப்பில் 261 பக்கங்களும், அணிகலன்கள் (Costumes) எனும் தலைப்பில் 153 பக்கங்களும் இடம் பெற்றிருக்கின்றன. மொத்தத்தில் 4920 பக்கங்களும், இந்தப் பக்கங்களில் பக்கத்திற்கு 60 பொருட்களுக்கான செய்முறைக் குறிப்புகள் வீதம் 2,95,200 பொருட்களுக்கான செய்முறைக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. 
இத்தளத்தில் வகுப்புகள் (Classes), போட்டிகள் (Contests), சமூகம் (Community) போன்ற தலைப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. வகுப்புகள் (Classes) எனும் தலைப்பில் முப்பரிமான அச்சு (3D Printing), கம்ப்யூட்டர் நியூமரிக்கல் கண்ட்ரோல் , மின்னணுவியல் (Electronics), பணிமனை (Workshop), தையல் , கைத்தொழில் , உணவு , வடிவமைப்பு , குழந்தைகளுக்கானது, இணையக்கல்வி , தெளிவானவை எனும் துணைத்தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு தலைப்பிலும், தலைப்புடன் தொடர்புடைய சில செய்முறை வகுப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. 
இதேபோன்று போட்டிகள், சமூகம் தலைப்புகளுக்கான துணைத் தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் தரப்பட்டுள்ளன. எந்த ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்கும் பல இணையதளங்களில் சென்று தேடுவதற்குப் பதிலாக இந்த ஒரே இணையதளத்தில் அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருப்பது பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
கைத்தொழிலைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கும், பல்வேறு புதிய பொருட்களைச் செய்து பார்க்க விரும்புபவர்களுக்கும் பெரிதும் உதவக்கூடிய இந்த இணையதளத்திற்குச் செல்ல விரும்புபவர்கள் https://www.instructables.com/ எனும் இணையமுகவரியைப் பயன்படுத்தலாம். 
தகவல்: தேனி மு. சுப்பிரமணி 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com