அளவான உணவு, அமிழ்தம்!

பண்டைய தமிழ் மன்னர் ஒரு நாள் தனது அமைச்சரவையில், ""தனது வாழ்நாள் முழுவதும் ஒருவன் நோயில்லாமல் வாழ முடியுமா?''  என்று கேள்வி எழுப்பினார். அக்கேள்வி அந்நாடு முழுவதும் எதிரொலித்தது.
அளவான உணவு, அமிழ்தம்!

பண்டைய தமிழ் மன்னர் ஒரு நாள் தனது அமைச்சரவையில், ""தனது வாழ்நாள் முழுவதும் ஒருவன் நோயில்லாமல் வாழ முடியுமா?''  என்று கேள்வி எழுப்பினார். அக்கேள்வி அந்நாடு முழுவதும் எதிரொலித்தது. எழுபத்தைந்து வயதான ஒருவர்  இளமை தவழும் முகத்தோடு அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டார். ""மன்னா!  இம்மனிதர் தனது எழுபத்தைந்து வயது வரை எந்தவித மருந்தும் உட்கொள்ளாமல் வாழ்ந்து வருபவர்'' என்று அடையாளம் காட்டினர். 

மன்னர் ஆச்சரியத்துடன், ""நோயின்றி வாழ எவ்வாறு உங்களால் முடிகிறது?'' என்றார். அதற்கு அவர், ""மன்னா!  நான் நான்கு வழிமுறைகளை என் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வருகிறேன். 

அவை
""ஒரடி நடவேன் 
ஈரடி கிடவேன்
இருந்துண்ணேன்
கிடந்துறங்கேன்''
என்றார். 

இதன் பொருளென்ன? என்ற மன்னரின் கேள்விக்கு ""எனது நிழல் எனது காலுக்கு அடியிலிருக்கும் நேரத்தில் (உச்சிப் பொழுதில்) எங்கேயும் நடந்து செல்லமாட்டேன்;  ஈரமுள்ள இடத்தில் படுக்கமாட்டேன்;  முன்பு உண்ட உணவு செரிக்காமல் வயிற்றிலிருக்கும்போதே மேலும் உண்ணமாட்டேன்;  அயற்சி ஏற்படாமல் வெறுமனே படுத்து உறங்கமாட்டேன்'' என்று எடுத்து உரைத்தார் அந்தப் பெரியவர். இப்பேருண்மையை அறிந்து, அப்பெரியவருக்கு பரிசுகள் கொடுத்தனுப்பினார், மன்னர்.

தமிழ்ப் பாட்டியாம் ஒüவைப் பாட்டியாரின் “"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது'” என்ற வரிகளுக்கேற்ப இவ்வுலகில் கிடைத்தற்கரிய பிறப்பு இம்மானிடப் பிறப்பேயாகும். இப்பிறவி தப்பினால் மீண்டும் எப்பிறவியில் மனித வாழ்வு கிடைக்கும் என்பது யாராலும் அறிந்திராத ஒன்று. எனவே, கிடைத்திருக்கின்ற மனித வாழ்வை நீண்டு, நெடிது வாழ்வது சிறப்பு. அதிலும், நோயின்றி நெடுங்காலம் வாழ்வதுதான் பிறப்பிற்குப் பெருமை சேர்க்கும். 

ஒரு மனிதனின் சீரான வாழ்க்கை,  அவனது உழைப்பு, உணவு மற்றும் உறக்கத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். இம்மூன்றில் ஒன்று கூடினாலோ அல்லது குறைந்தாலோ அது அவரது உடலையும், மனதையும் பாதிக்கும். அதில் உண்ணும் உணவு பல உயிர்களின் தியாகம். அது உழைப்பவர்களின் வியர்வையின் வெளிப்பாடு. பஞ்ச பூதங்கள் ஒருங்கிணைந்து உருவாக்கும் அதிசயம்தான், உணவு. 

அத்தகைய உணவினை உழைக்காமல் உண்ணலாகாது. உழைக்காதவன் உண்ணுகிறபோது உணவின் சுவையும் தெரிவதில்லை. ஒரு கிராமத்து செல்வந்தர் பக்கத்து ஊரிலிருந்த வைத்தியரைச் சந்தித்து, தனக்கு பசிப்பதே இல்லை என்றார். அவர் பார்ப்பதற்கு நன்கு கொழுத்து இருந்தார். இருவரும் அச்செல்வந்தர் வந்த குதிரை வண்டியில் ஏறினர். வைத்தியர் வண்டி ஓட்ட, செல்வந்தர் பின்னால் அமர்ந்து சென்றார். சிறிது தூரம் சென்றதும், அவருடைய கையிலிருந்த சாட்டை கீழே விழுந்தது. 

சாட்டையை எடுக்க செல்வந்தர் கீழே இறங்கினார். அதே நேரத்தில் குதிரை வண்டியை வேகமாய் ஓட்டினார் வைத்தியர். செல்வந்தர் வண்டியை நிறுத்தச் சொல்லி சப்தமிட்டுக்கொண்டே ஓடோடி வந்தார். ஆனாலும், குதிரை வண்டி வேகமாய்ச் சென்று அவர் வீட்டினை அடைந்தது. ஓட்டமும், நடையுமாய் செல்வந்தர் வீடு வந்து சேர, உடம்பெல்லாம் வியர்த்து மிகவும் களைத்துப் போனாதால், பசியோ வயிற்றைக் கிள்ளியது. அன்றுதான் செல்வந்தருக்கு உடல் உழைப்பே பசியைத் தரும்  என்று புரிந்தது.  

பசிக்கும்போது உண்ணும் உணவு ருசியாயிருக்கும். பசியெடுத்ததும் உண்ணும்போது  பசி ஆறும். பசியாறியபின்  உணவின் சுவை மெதுவாக குறையும். அதோடு, உணவு உட்கொள்வதை நிறுத்திக்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும். பசியோடு அமர்ந்து பசியோடு எழுவதுதான் உணவு உண்பதன் நேர்த்தி என்பதை “பசித்திரு” என்றார் இராமலிங்க அடிகளார். 

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த போகர் என்னும் சித்தரிடம் உபதேசம் பெற்றவர் திருமாளிகைத் தேவர். இவரது பாடல்களின் தொகுப்பு திருவிசைப்பா ஆகும். நோயில்லாமல் நீண்ட காலம் வாழ்ந்த இவரும் பசியின்றி உணவு உண்டதில்லை. ஒருமுறை இவரைச் சோதிக்க ஓர் அமுத உணவை இவரிடம்  தந்தனர். பசியின்மையால் அதனை உண்ண மறுத்து, “"வாய்க்கிடங் கொடுத்தால் நோய்க் கிடமாம்'” என்று சொல்லி அமுத உணவையே உண்ண மறுத்தார்.  எனவே உணவு உண்ணுதல் ஒரு செயல் அல்ல; அது ஒரு முறை.  

நண்பர்களோடு ஒரு தேநீர், அலுவலக கூட்டத்தில் சில  நொறுக்குத் தீனி, வீட்டிலிருந்து கொடுத்துவிட்ட மதிய உணவு என எவர் மனதும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக உண்டால் நோய்க்கு உட்படுவது உறுதி. உணவு மனதின் தேவையாகின்றபோது வீதிக்கொரு மருத்துவமனை முளைக்கின்றன.  

உணவு உண்ணுவது என்பது உடலின் தேவை. அது மனதின் தேவைக்கு அல்ல. சத்தான உணவு என்பது அழகான புரதத்திலோ, டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவிலோ, ருசியான பதார்த்தத்திலோ இல்லை. மனிதனுக்குத் தேவையான சக்தியை கிடைக்கின்ற உணவிலிருந்து எடுத்துக்கொள்வதுதான் உலக இயற்கை என்பதை நிரூபித்தவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லூயி கேர்வரான் ஆவார்.  அவர் ஆராய்ச்சிக்காக நான்கு எலிகளின் முன்னங்கால்களை ஒடித்தார். பின்பு அவற்றில் இரண்டு எலிகளுக்கு எலும்பினை ஒன்று சேர்க்க அவசியமான கால்சியம் மருந்தினைத் தந்தார். மற்ற இரண்டு எலிகளுக்கு புல்லும், காய்கறிகளும் கொடுத்தார். இரண்டு வாரங்கள் கழித்து அவற்றை எக்ஸ் கதிர்கள் மூலம் ஆராய்ந்தார். கால்சியம் உண்ட எலிகளின் எலும்பு சிறிதே வளர்ந்திருந்தது. உடைந்த எலும்புகள் ஒட்டி குணமாகவில்லை. ஆனால் காய்கறிகள் உண்ட இரண்டு எலிகளின் கால் எலும்பு வளர்ந்து ஒட்டி முழுவதும் குணமாகியிருந்தது. 

இயற்கையில் எளிதில் கிடைக்கும் கீரை வகைகள், வீட்டுத் தோட்டத்தில் விளையும் காய்கறிகள், காலத்தில் விளையும் பழங்கள், முளைகட்டிய தானியங்கள் அனைத்தும் முதல் தரமான உணவு. இவை உடலுக்கு ஆதார சக்தியோடு ஆயுளையும் வளர்க்கும். புரதம் நிறைந்த பருப்புகள், மாவு மற்றும் சர்க்கரை நிறைந்த கிழங்குகள் ஆகியவை இரண்டாம் தரமான உணவுகளாகும். இவை இரண்டையும்  அன்றாட வாழ்வில் சேர்த்தால் ஆரோக்கிய வாழ்வு நிச்சயம். சத்தான உணவைவிட  ஜீரணிக்கும் உணவே உன்னத உணவாகும்.

ஆரோக்கியமான மனிதனுக்கு 2500 கலோரிகளும், கடுமையாக உழைப்பவர்களுக்கு 2800 கலோரி உணவும் போதுமானது. அலுவலக வேலை பார்ப்பவர்களுக்கு 2000 கலோரிகளே போதுமானது. ஆனால் இந்த கலோரி அளவு கிடைக்காமல் இவ்வுலகில் இறப்பவர்களை காட்டிலும் அதிகமாக உண்டு நோய்வாய்ப்பட்டு இறப்பவர்கள் தான் அதிகம். "ஒரு நாளில் மூன்று வேளை சாப்பிட்டால் அவருக்கு கட்டாயம் நோய் வரும். இரண்டு வேளை உண்பவர்கள் போகி. ஒரு வேளை உண்டால் அவர் யோகி ஆகலாம்'  என்கிறது நீதிவெண்பா. 

ஜெர்மானிய நாட்டில் ஓர் உணவு விடுதிக்கு சுற்றுலா வந்த ஒரு குடும்பத்தினர் சென்றனர். அவர்களுக்கு அங்கே பரிமாறப்படுகின்ற உணவு பட்டியலில் அவர்களுக்கு தேவையானதை குறித்துக் கொடுத்தனர். உணவு உண்டு முடிக்கப்படும் நிலையில், உணவுக் கட்டண ரசீது தரப்பட்டது. அதிலே அவர்கள் சாப்பிட முடியால் வீணாக்கிய நான்கு வகை உணவிற்கு இரண்டு மடங்கு உணவுக் கட்டணம் இருந்தது. 

""எதற்காக நாங்கள் உண்ணாத உணவுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்?'' என்ற கேள்விக்கு அந்த உணவு விடுதியின் மேலாளர்,  ""ஐயா! இது எங்கள் நாட்டின் வழக்கம். எங்கள் நாட்டினர் விருப்பமானவற்றை வாங்குவார்கள். அதை உண்டு முடிக்கும் தறுவாயில், வயிற்றின் அளவை அறிந்து அடுத்த உணவை எங்களிடம் தயார் செய்யச் சொல்வார்கள். ஆனால் நீங்களோ மொத்தமாக அனைத்தையும் தயார் செய்ய சொன்னீர்கள். அனைத்தையும் உண்ணாமல் இங்கே வீணடித்து விட்டீர்கள். 

நீங்கள் எங்கள் நாட்டின் உணவை உதாசீனப்படுத்தியிருக்கிறீர்கள். அரும்பாடுபட்டு இதனை வளர்த்த எங்கள் விவசாயிகளின் உழைப்பை தாங்கள் அலட்சியம் செய்துள்ளீர்கள். இதே உணவை நீங்கள் வாங்காமல் இருந்திருந்தால் அது அடுத்து வருகின்ற வாடிக்கையாளரின் பசியை போக்கியிருக்கும்'' என அடுக்கி கொண்டே போனார்.  ""இதற்கான அபராதம்தான் சாப்பிடாமல் வீணாக்கிய உணவுக்கு இரண்டு மடங்கு கட்டணம்'' என்றார். இவர்களால் அதற்கு பதில் ஏதும் பேசமுடியாமல் பணத்தைக் கட்டினர். 

"இந்தியாவில் திருவிழாக்களிலும் மற்றும் இதர சுபநிகழ்வுகளிலும் விருந்தினர்களை உபசரித்தது போக குறைந்தது பத்து முதல் நூறு நபர்கள் உண்ணும் உணவு வீணாகிறது.  அதே வேளையில் இந்தியாவில் மட்டும் தான் பதினெட்டு கோடி மக்கள் காலை  அல்லது மதிய உணவின்றியும், முப்பது கோடி மக்கள் இரவு உணவு இல்லாமலும் உறங்கச் செல்கின்றனர்' என்று ஐ.நா.வின் உணவு மற்றும் மேலாண்மை நிறுவனம் தெரிவிக்கிறது.

"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்'” என்று பாடிய மகாகவி பாரதி பாடிய இம்மண்ணில்தான் குளிர்சாதனப் பெட்டி வைத்திருக்கிறோம் என்ற காரணத்திற்காக ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வைத்து, வாரத்தின் இறுதியில் பயன்படுத்தாத காய்கறிகளை தூக்கி எறிவதுடன், விரைவில் அழுகும் காய்கறிகளை முதலில் சமைக்காமல் பின்னாளில் குப்பையில் போடுவதும் அரங்கேறுகிறது. 

அதற்காக "உணவு மீதமாகிவிட்டதே, குப்பையில் கொட்டிவிடக்கூடாதே' என்பதற்காக தானே உண்பது உடலினைக் குப்பைத் தொட்டியாக்குவதாகும். மொத்தமுள்ள வயிற்றின் கொள்ளளவில ஐம்பது சதவீதம் உணவு, இருபத்தைந்து சதவீதம் தண்ணீர், மீதியுள்ள இருபத்தைந்து சதவீதம் காற்றினை நிரப்புவதுதான் உணவு உண்பதில் ஆரோக்கியமான பழக்கமாகும். 

விருப்பமின்றி சாப்பிடுவதும், ஆவலாய் விழுங்குவதும்,  தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும், நின்றுகொண்டும், உண்ணும்போதே நீர் பருகுவதும், நடந்து கொண்டும் அவசர அவசரமாய்ச் சாப்பிடுவதால், உமிழ்நீர் படாமலே உணவு வயிற்றுக்குள் செல்லும். பற்களால் நன்கு அரைக்கப்பட்ட உணவில், உமிழ்நீர் கலந்தால்  அது  எளிதாகச் செரித்துவிடும்.  ஆனால், அவசரமாக உண்ணும்  உணவு எளிதில் செரிக்காது.  அதைச் செரிக்க வைக்க கல்லீரலும், பித்தப் பையும் அதிக அமிலத்தைச் சுரக்க வேண்டியிருக்கிறது.  அதனால் அவை விரைவில் பழுதடையும். விளைவு, செரிமானக் கோளாறினால் எல்லா வகை நோய்களுக்கும் அது வழிவகுக்கும் என்பது அறிவியல் உண்மை.

ஐம்பூதங்களில் ஒன்றின் தலைவன் அக்னி தேவன். வானத்தில் ஜோதியாகவும், மேகத்தில் மின்னலாகவும், உலகத்தில் தீயாகவும் இருப்பவர்.  நம் உடலில் பசியாக இருக்கிறார். ஒருநாள் சுவேதகி என்னும் மன்னர் ஒரு பெரிய வேள்வியை பன்னிரண்டு வருடம் நடத்தினார். அதில் நெய்யினை ஊற்ற ஊற்ற அக்னி தேவன் அதை நிறைய குடித்தார். அது செரிக்காமல் அவருடைய வயிறு மந்தமானது. இதன் விளைவாக நோய்கள் பலவற்றிற்கு ஆளாகி, உடல்மெலிந்து துடித்தார். பல ஆண்டுகள் மிகவும் துன்பப்பட்டு வாழ்ந்தார். 

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்

என்று திருவள்ளுவரின் வரிகள் மூலம் தனது பசியின் அளவினைப் புரிந்து கொள்ளாமல், அதற்கு அதிகமாக உண்டால்,  நோய் அளவின்றி வருந்த நேரிடும் என்பது தெளிவான எச்சரிக்கை. 

அளவின்றி  உண்டால் உணவு நஞ்சு;
அளவாய் உண்டால் உணவு அமிழ்தம்!. 

(தொடரும்)

 கட்டுரையாசிரியர்:  காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com