சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 58

மாசு நிறைந்த காற்றைச் சுவாசிப்பதால் குழந்தைகளின் வளர்ச்சியை அது மிகவும் பாதிக்கிறது. வளர்ச்சியை மட்டுமல்ல அறிவுத்திறனையும் குறைக்கிறது. 
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 58

மாசு நிறைந்த காற்றைச் சுவாசிப்பதால் குழந்தைகளின் வளர்ச்சியை அது மிகவும் பாதிக்கிறது. வளர்ச்சியை மட்டுமல்ல அறிவுத்திறனையும் குறைக்கிறது. 
ஏர் விஷுவல், கிரீன்பீஸ் என்ற இரண்டு தன்னார்வ நிறுவனங்கள் ஒன்றிணைந்து உலகம் எங்கும் உள்ள நகரங்களில் காற்று எந்த அளவுக்கு மாசடைந்துள்ளது என்பதை ஆராய்ந்து, கணக்கிட்டு வெளியிட்டு வருகிறார்கள். அப்படி வெளியிட்ட நகரங்களின் பட்டியலில் மிக அதிக அளவில் காற்று மாசடைந்த நகரங்களாகப் பத்து நகரங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவற்றில் 7 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. 
உலகிலேயே அதிக காற்று மாசடைந்த நகரம் குருகிராம் ஆகும். இது டெல்லியிலிருந்து 30 கி.மீ. தென்மேற்கே அமைந்துள்ளது. இது உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த சராசரி காற்று மாசடையும் நிலையில் இருந்து 13 மடங்கு அதிக அளவு காற்று மாசு அடைந்த நகரமாக உள்ளது. உலக அளவில் மோசமாக காற்று மாசடைந்த நகரங்களில் இரண்டாம் இடத்தை காஸியாபாத் பெற்றுள்ளது. நான்காவது இடத்தை ஃபரிதாபாத்தும், ஐந்தாம் இடத்தைப் பிவாடியும் பெற்றுள்ளன. உலக அளவில் மோசமான காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தை நொய்டாவும், ஏழாவது இடத்தைப் பாட்னாவும், ஒன்பதாவது இடத்தை லக்னோவும் பெற்றுள்ளன. டெல்லி 11 ஆவது இடத்தையும், ஜோத்பூர் 12 ஆவது இடத்தையும், முசாபர்பூர் 13 இடத்தையும் பிடித்துள்ளன. வாரணாசி, மொராதாபாத், ஆக்ரா ஆகியவை முறைய 14 - 15- 16 ஆவது இடங்களையும், கயா 18 ஆவது இடத்தையும், ஜிண்ட் 20 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன என்பது வேதனையளிக்கும் செய்தியாகும். 
காற்று மாசினால் ஏற்படும் விளைவுகள் மோசமானவை. நமதுநாட்டில் 70 லட்சம் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னதாகவே இறந்துவிடுகின்றன. நமது சராசரி வயது விகிதத்தை காற்று மாசு குறைத்து விடுகிறது. மாசடைந்த காற்றைச் சுவாசிப்பது புகைப்பிடிப்பதை விட மிக மிகத் தீங்கானதாக உள்ளது. இந்தியா சுற்றுச்சூழலுக்கு எதிரான போரை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
காற்று மாசினால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதற்கான செலவினங்களைத் திட்டமிடும்போது, அது 225 பில்லியன் டாலராக மதிப்பிடப்படுகிறது. காற்று மாசைக் கட்டுப்படுத்தினால் உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் உள்ள மக்களின் சராசரி வயது தற்போது இருப்பதை விட 1.3 சதவீதம் முதல் 1.8 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 
காற்று மாசினால் உலக அளவில் இறக்கும் மக்கள் தொகையில் இந்தியா 3 ஆவது இடத்தில் உள்ளது. 1 லட்சம் மக்களில் 195 பேர் காற்றில் ஏற்படக்கூடிய மாசுகளினால் இறந்துபோகிறார்கள். இந்தியா சுற்றுச்சூழலுக்கு எதிரான போரை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சீனாவிடமிருந்து இந்தியா இது தொடர்பாக நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. சீனா காற்று மாசடைவதைத் தடுப்பதை முதன்மையான பிரச்னையாக எடுத்துக் கொண்டு, காற்றில் கலந்துள்ள சல்ஃபர் டை ஆக்ஸைடின் அளவை பெரிய அளவில் குறைத்திருக்கிறார்கள். இதனால் காற்று மாசினால் உலக அளவில் இறக்கும் மக்கள் தொகையில் 5 இடத்தில் உள்ளார்கள். 
ஐரோப்பிய நாடுகளிலும் கூட அங்குள்ள நகரங்களில் உள்ள காற்றின் தன்மை கடந்த தலைமுறை சுவாசித்ததை விட தற்போது மிகவும் தூய்மையாக உள்ளது. 1960 -களில் உலகிலேயே அதிக காற்று மாசடைந்த நகரங்களில் ஒன்றாக கலிபோர்னியா விளங்கியது. அவர்களுடைய சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கையினால் தற்போது உலகிலேயே காற்று மாசை எப்படிக் குறைப்பது என்பதற்கு வழிகாட்டும் நாடாக அது மாறிவிட்டது. காற்றின் மாசை நீக்குவதற்காக அவர்கள் செலவழித்த தொகையினால், அங்குள்ளமக்களின் ஆரோக்கியம் மேம்பட்டது. மருத்துவச் செலவுகள் குறைந்தன. புதியவேலை வாய்ப்புகள் உருவாகின. தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. கலிபோர்னியா நகரம் சிறந்த நகரமாக விளங்க இந்தச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்திட்டங்களும் காரணங்களாக இருக்கின்றன. 
காற்று மாசடைந்ததைப் போன்று, இந்தியாவில் உள்ள ஆறுகள், நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், கடல்கள் எல்லாமே மாசுபட்டுள்ளன. வேதிப்பொருள்கள், மனிதக் கழிவுகள், பிளாஸ்டிக், மனிதர்கள் பயன்படுத்தி தூக்கியெறியும் பொருள்கள் ஆகியவற்றால் நீர்நிலைகள் மாசுபடுத்தப்படுகின்றன.
ஆயிரக்கணக்கான மக்கள் 
இந்தப் புவியினில் உயிர் 
வாழ்ந்தார்கள். 
அவர்கள் அன்பில்லாமல் உயிர் 
வாழ்ந்தார்கள். 
ஆனால் ஒருவர் கூட 
தண்ணீரில்லாமல் உயிர் வாழ்ந்ததில்லை 
என்ற டபிள்யூ. எச். ஆடன் என்பவர் எழுதிய கவிதையை நினைவுக்கு வருகிறது. 
உலகில் உள்ள நீர்நிலைகளில் 80 சதவீதம் நீர்நிலைகள் மனிதர்கள் பயன்படுத்திய தூய்மையில்லாத நீரால்தான் நிரம்பியிருக்கின்றன. நாம் பயன்படுத்தும் நீரை தூய்மைப்படுத்தாமல் அப்படியே ஆற்றிலோ, கடலிலோ கலந்துவிடுகிறோம். இந்த மாசடைந்த தண்ணீரானது மக்களுடைய ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கிறது. உலகிலேயே அதிகமான மரணங்கள் தூய்மையான குடிநீர் கிடைக்காததால் ஏற்படுகின்றன. இது போர்களினால் ஏற்படும் மரணங்களை விட அதிகமாக இருக்கிறது. 
எந்தவோர் இயற்கைப் பேரழிவையும் விட, தூய்மையான குடிநீர் கிடைக்காததால் மக்கள் உயிர்விடுவது அதிகமாக உள்ளதாக ஓர் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. உலகில் உள்ள நீர்நிலைகளில் தூய்மையான தண்ணீர் 1 சதவீதம் மட்டுமே இருக்கிறது. இப்போது உள்ள சூழ்நிலையே இனியும் தொடருமேயானால் 2050 - இல் இந்த 1% தூய்மையான தண்ணீரில் மூன்றில் இரண்டு பங்கு இல்லாமல் போய்விடும்.
நாம் எல்லாருமே அமெரிக்காவில் நல்ல தண்ணீர் கிடைப்பதாக நம்புகிறோம். அமெரிக்காவில் உள்ள குழாய் தண்ணீரில் காப்பர், கரி, ஆர்செனிக் போன்றவை உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 
குடிநீர்க்குழாய்களில் வரும் நீரைக் கூட நாம் தூய்மைப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். நீர் மாசடைவதற்கு முக்கிய காரணங்களாக, நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் கழிவுப் பொருள்கள் தண்ணீரில் கலந்து, ஓடைகள், ஆறுகளின் வாயிலாக கடலில் கலக்கின்றன. 
நாம் பூமியில் பயன்படுத்தக் கூடிய ரசாயனப் பொருள்களே நிலத்தடி நீரும் கெட்டுப் போவதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. மழை பெய்யும்போது இந்த ரசாயனப் பொருள்கள் நீருடன் எளிதாகக் கலந்து, அது நிலத்தின் ஆழமான பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அது நிலத்தடி நீரின் தன்மையை மாற்றிவிடுகிறது. குடிப்பதற்கு உகந்த நீராக நிலத்தடி நீர் இருப்பதில்லை. இந்த மாசடைந்த நீரைச் சுத்தமான நீராக மாற்ற ஒரு தலைமுறைக் காலம் முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை கூட தேவைப்படலாம். 
பூமியின் 70 சதவீதம் பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. கடல், ஏரி, குளங்களாக அவை உள்ளது. இவ்வாறு வெளியே தெரியக் கூடிய சர்ஃபேஸ் நீரும் மாசடைந்தே உள்ளது. 
யுஎஸ் என்விரான்மென்டல் புரடக்ஷன் ஏஜென்சி ஒன்று தற்போது நடத்திய சர்வேயின்படி, உலகில் உள்ள பாதி ஆறுகளும், ஓடைகளும், மூன்றில் ஒரு பங்கு ஏரிகளும் நீந்துவதற்குக் கூட உகந்ததாக இல்லாமல் போய்விட்டன. மீன்கள் கூட வாழத் தகுதியற்ற நீராக அவை மாறிவிட்டன. குடிப்பதற்கு தகுதியற்ற நீராக உள்ளது. நைட்ரேட், பாஸ்பேட் ஆகிய ரசாயனப் பொருள்கள் இந்த நீர்நிலைகளில் அதிகமாக கலந்திருக்கின்றன. 
குறிப்பாக ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்திச் செய்யக் கூடிய விவசாயத்தினால் ஏற்படக் கூடிய கழிவுகள், தொழிற்சாலைகளில் பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்வதனால் வெளித்தள்ளப்படும் கழிவுகள் நீர்நிலைகளில் அதிகம் கலந்து விடுகின்றன. 
கடல்நீரும் மாசடைந்தே உள்ளது. கடல் நீரில் ஏற்படக் கூடிய மாசின் 80 சதவீதம் நிலத்திலிருந்தே உருவாக்கப்படுகிறது. நிலத்திலிருந்து வேதிப் பொருள்கள், தொழிற்சாலை கழிவுகள், விவசாய உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளினால் ஏற்படும் கழிவுகள் நிலத்தில் உள்ள தண்ணீரில் கலந்து பின்னர் ஆறுகள், கால்வாய்கள் மூலமாக கடலைச் சென்று அடைகின்றன. இந்த கழிவுகள் ஆழ்கடல் வரைக்கும் மாசடைய வைக்கின்றன. கடலின் அடியில் இருந்து எடுக்கக் கூடிய எண்ணெய்கள், கப்பல்களில் ஏற்படக் கூடிய எண்ணெய்க் கசிவுகள், கடலில் ஏற்படும் எண்ணெய்க் கப்பல் விபத்துகள் போன்றவையும் கடல் நீரை மாசடையச் செய்கின்றன. கடல்நீரில் கலந்த இந்த மாசு காற்றில் கார்பன் மாசாக வெளிவருகிறது. மனிதர்கள் உருவாக்கக் கூடிய கார்பன் மாசுகளை கடல் உள்வாங்கி, கடல் காற்றை மாசுபடுத்துகிறது. 
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: 
சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com