கனவு நனவாக...

நான் டாக்டர் ஆக வேண்டும், நான் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்று ஒவ்வொரு குழந்தையும் தனது சிறு வயதில் தினமும் விதவிதமாக கனவு காணும்.
கனவு நனவாக...

நான் டாக்டர் ஆக வேண்டும், நான் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்று ஒவ்வொரு குழந்தையும் தனது சிறு வயதில் தினமும் விதவிதமாக கனவு காணும். ஆனால், அந்த குழந்தை வளர்ந்த பிறகும் அந்த கனவு இறுதி வரை ஒரே இலக்கை நோக்கி இருப்பது ஒரு சிலருக்குதான். அவர்களில் பலர் தங்களது கனவை நனவாக்குவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளாமலேயே எனது கனவு நனவாகவில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
 அவர்களது சந்ததிகள் கனவு கண்டாலும், "நானும் கனவு கண்டேன் அது நடைபெறவில்லை. அதனால் கனவு கண்டு காலத்தைப் போக்காதே'' என்று சிலர் கண்டிப்பர். "சிலர் நான் கண்ட கனவு பலிக்கவில்லை. நீ உன் கனவை நோக்கி பயணி'' என்று ஊக்குவிப்பார்கள். எனினும், அனைவரது வாழ்க்கையிலும் நாம் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கனவு நிச்சயம் இருக்கும். அந்த கனவை நனவாக்க சில வழிகள்...
 கனவை இலக்காக நிர்ணயித்தல்
 நாம் எதிர்காலத்தில் இவ்வாறெல்லாம் வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது. நமது கனவை நாம் இலக்காக மாற்ற வேண்டும். அப்போதுதான் அதை நோக்கி நாம் பயணிக்க முடியும். நமது இலக்கு நமக்கு ஏன் முக்கியம் என்ற கேள்வி நமக்குள் அடிக்கடி எழ வேண்டும். அப்போது அதை நோக்கி நாம் மேலும் தீவிரமாக ஓடத் தொடங்குவோம். இல்லையெனில் காலையில் எழுந்ததும் கனவு மறந்து போகும்.
 திட்டமிடுதல்
 நமது இலக்கை நாம் எந்தெந்த வழிகளின் மூலம் அடையலாம்; அதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு அதைச் செவ்வனே செயலாற்ற வேண்டும். ஏனெனில், திட்டமிடாமல் நாம் பயணிக்கும்போது, நமக்கான இலக்கை விட்டு வேறு பாதைகளில் நாம் பயணிக்க வாய்ப்புகள் அதிகம்.
 சுய பரிசோதனை
 "கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே' என்ற தத்துவம் அனைத்து இடங்களுக்கும் பொருந்துமா என்றால் இல்லை என்றே கூறலாம். ஏனெனில், பலனை எதிர்பாராமல், நாம் நம் இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும்போது, நாம் என்ன தவறு செய்கிறோம் என்பது நமக்கு தெரியாமலேயே போய்விடும். பலனை எதிர்பார்த்து அது நிகழாதபோதுதான் நம்மை நாம் அறிந்து கொள்ளமுடியும்.
 போட்டித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று படிக்கிறோம். தேர்வு முடிவு நமக்கு சாதகமாக வராத வேளையில், கடமையைச் செய்தோம். ஆனாலும் தேர்வு முடிவு சாதகமாக வரவில்லை என்று கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. நாம் எந்த இடத்தில் இருக்கிறோம், சரியான பாதையில்தான் பயணிக்கிறோமா என்று நம்மை நாம் சுயபரிசோதனைக்கு உள்ளாக்குவது அவசியம். அதற்கு பலனை எதிர்பார்ப்பது மிக அவசியம்.
 தன்னம்பிக்கை
 உன்னால் இது முடியாது என்று நம்மைச் சுற்றி இருப்பவர்கள் பல முறை கூறினாலும், தன்னம்பிக்கையைக் கைவிடாது. நம்மால் இது முடியும் என்று முன்னேற வேண்டும். எதிர்மறையான எண்ணங்களையும் எதிர்மறை வார்த்தைகளையும் கூறும் மனிதர்களையும் விலக்கி வைத்து விட்டு, நமது இலக்கில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது இலக்கில் உறுதியான பிடிப்போடு, வெற்றி பெறும் வரை இலக்கை நோக்கி பயணிப்பேன் என்று தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
 தோல்வியே முதல்படி
 நமது இலக்கை நோக்கி நாம் பயணிக்கும்போது நிச்சயம் பல தடைகளையும், தோல்விகளையும் நாம் சந்திக்க வேண்டியது இருக்கும். ஆனால் அவையனைத்தையும் நாம் மிக சிறந்த அனுபவமாக கொள்ள வேண்டும். தோல்விதான் ஒருவரை திடமாகவும், வலிமையாகவும் மாற்றும். மற்றவர்களிடம் இருந்து நாம் பெறும் அனுபவங்களை விட தோல்விகள் நிறைய கற்று தரும்.
 கருமமே கண்ணாயிருத்தல்
 இலக்கு இதுவென பயணிக்கும்போது, அதிலிருந்து நம்மைத் திசை திருப்பும் வகையில் நம் கண் முன்னே பல விஷயங்கள் உள்ளன. முகநூல், சுட்டுரை கூட நம்மை ஒரு வகையில் திசை திருப்பும். அதனால், நமது இலக்கை அடைய என்ன செய்ய வேண்டுமோ, அதில் முழு கவனம் செலுத்த வேண்டும். அதற்காக எவ்வித பொழுதுபோக்கும் இல்லாமல் வாழ வேண்டும் என்று அர்த்தமில்லை. அளவுக்கு மிஞ்சுனால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, பொழுதுபோக்கு அம்சங்கள் நமது காலத்தை வீணாக்கி விடும்.
 அதனால் கூடுமானவரை அவற்றில் இருந்து விலகி இருப்பது உத்தமம்.
 குறித்த நேரத்தில் முடித்தல்
 அனைத்தையும் விட மிக முக்கியமானது நமது இலக்கை நாம் குறிப்பிட்ட காலத்துக்குள் அடைவது. ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவை பொறுமையாக அடையலாம் என்று காலம் கடத்திக் கொண்டே இருந்தால், வயது அதிகமாக விடும். தேர்வு எழுதுவதற்கான அடிப்படைத் தகுதியையே நாம் இழந்து விடுவோம்.
 -க. நந்தினி ரவிச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com