மென்பொருள் நிறுவனம் நடத்தும் 13 வயது சிறுவன்!

நாங்கள் அவனுடைய எந்த நடவடிக்கையிலும் தலையிடுவதில்லை. அவனுடைய வளர்ச்சி அனைத்தும், அவனுடைய சொந்த முயற்சியே.
மென்பொருள் நிறுவனம் நடத்தும் 13 வயது சிறுவன்!

துபையில் 7- ஆம் வகுப்பு பயிலும் இந்தியச் சிறுவன் செல்லிடப்பேசி செயலி உள்ளிட்ட மென்பொருள்களை உருவாக்கி, தனக்கென ஒரு நிறுவனத்தையும் தொடங்கி, அங்குள்ள தகவல் தொழில்நுட்பத் துறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளான்.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், திருவில்லா நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ் நாயர். இவர் தனது மகன் ஆதித்யனுக்கு 5 வயதாக இருந்தபோது குடும்பத்துடன் துபைக்கு இடம்பெயர்ந்தார். ஆதித்யன் அங்குள்ள எலைட் ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் தனது 9 ஆவது வயதில் தனது முதல் செல்லிடப்பேசி செயலியை உருவாக்கினார். அவர் தான் உருவாக்கும் செயலிகளை ஆன்ட்ராய்ட் செல்லிடப்பேசி செயலிகளுக்கான மாற்று சந்தை களமான Aptoide தளத்தில் பதிவேற்றம் செய்தார். இவர் புதிதுபுதிதாக செல்லிடப்பேசி செயலிகளை உருவாக்குவதோடு, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக இலச்சினைகள் (லோகோ) மற்றும் புதிய இணையதளங்களை உருவாக்கிக் கொடுத்துவந்தார். இந்நிலையில், தற்போது தனது 13 ஆவது வயதில் சொந்தமாக Trinet Solutions என்ற மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து ஆதித்யன் கூறுகையில், "நான் துபைக்கு வந்த எனது 5 ஆவது வயதிலேயே கணினியைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன். எனக்கு என் தந்தை முதலில் அறிமுகப்படுத்தியது பிபிசி டைப்பிங் என்ற இணையதளம்தான். இது குழந்தைகளுக்கான தளம். இதில் இளைஞர்கள் தட்டச்சும் கற்றுக்கொள்ள முடியும். நான் துபைக்கு வந்தபோது என்னுடைய அண்டைவீடுகளில் எனக்கு நண்பர்கள் யாரும் இருக்கவில்லை. அதனால், நான் அதிக நேரம் யூடியூப்-இல் கார்ட்டூன்களை விரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பேன். அதோடு, வார்த்தை விளையாட்டுகளில் (ஸ்பெல் பீ) பங்கேற்று விளையாடினேன்.அதுமுதல் கணினி மற்றும் தொழில்நுட்பங்களால் கவரப்பட்டேன்.
நான் இணைய விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டிருந்தபோது, நானாக ஒரு செல்லிடப்பேசி செயலியை உருவாக்க விரும்பினேன். அவ்வாறு நான் உருவாக்கிய முதல் செயலிதான் Ashirwad Browser. இந்த இணைய உலாவி கிட்டத்தட்ட Google Chrome போன்றது. ஆனால், இது தற்போது தனிப்பட்டவர்களின் குறைவான பயன்பாட்டில் மட்டுமே உள்ளது. இந்த செயலியை உருவாக்கும்போது எனக்கு வயது 9. அப்போதே நான் Android Studio-வைப் பயன்படுத்தினேன். PlayStore-இல் என்னுடைய செயலியை பதிவேற்றம் செய்ய அடிப்படை கட்டணமாக 25 அமெரிக்க டாலர் (ரூ. 1,750) தேவைப்பட்டது. அதனால், அதில் என்னுடைய செயலியைப் பதிவேற்றம் செய்யவில்லை. அதற்குப் பதிலாக மாற்று சந்தை களமான Aptoide தளத்தில் பதிவேற்றம் செய்தேன்.
அதன்பிறகு, மென்பொருள், வன்பொருள், செயலி உருவாக்கம், இணையதள வடிவமைப்பு என அனைத்தும் குறித்து கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். என்னுடைய இந்த ஆர்வம் இணையப் பாதுகாப்பு குறித்து கற்றுக் கொள்வது வரை விரிந்தது. கடந்த 2017, டிசம்பர் 17 ஆம் தேதி Trinet Solutions என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன். மென்பொருள், வன்பொருள், கோடிங் போன்றவற்றில் சிறந்து விளங்க வேண்டும் என்பதும், இந்தச் சேவைகளை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்பதும் எனது விருப்பம்'' என்றார்.
தற்போது இவருடைய நிறுவனத்தில், ஆதித்யனோடு பயிலும் 7 ஆம் வகுப்பு நண்பர் ஒருவர், அதே பள்ளியில் பயிலும் 11, 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த நண்பர்கள் இருவர் என 3 பேர் பணியாற்றி வருகின்றனர். அதேநேரத்தில், தங்களுடையது பதிவுபெற்ற ஒரு தனியார் நிறுவனமாக செயல்படவில்லை என்று கூறும் ஆதித்யன், "18 வயதிலேயே நான் ஒரு நிறுவனத்தைத் தொடங்க முடியும் என்பதால், தற்போது ஒரு நிறுவனத்தைப் போலவே செயல்பட்டு வருகிறோம். 12 வாடிக்கையாளர்களுடன் பணியாற்றிவரும் நாங்கள், அவர்களுக்காக எங்களுடைய வடிவமைப்பு மற்றும் கோடிங் சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்கி வருகிறோம்'' என்கிறார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இளம் மேதையாக விளங்கும் ஆதித்யன், iOS தளத்துக்கான செயலிகளை உருவாக்கி, தன்னுடைய நிறுவனத்தை சர்வதேச நிறுவனமாக மாற்றும் விருப்பத்தில் உள்ளார். 
இதுகுறித்து ஆதித்யனின் தந்தை ராஜேஸ் நாயர் கூறுகையில், "அவன் தன்னுடைய வகுப்பு நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவனுடைய பள்ளிக்கான அனைத்து திட்ட வேலைகளையும் இலவசமாகச் செய்து கொடுத்து வருகிறான். நாங்கள் அவனுடைய எந்த நடவடிக்கையிலும் தலையிடுவதில்லை. அவனுடைய வளர்ச்சி அனைத்தும், அவனுடைய சொந்த முயற்சியே'' என்று பெருமிதத்துடன் கூறுகிறார். 
YouTube தளத்திலும் செயல்பட்டு வரும் ஆதித்யன், தன் எண்ணங்கள் மற்றும் கருத்துகளை தன்னுடைய A Craze என்ற சேனல் மூலம் வீடியோவாக அளித்து வருகிறார். இதன்மூலம், தனக்குத் தெரிந்த அனைத்தையும், மற்றவர்களுக்கு கற்பிப்பதாகவும், அதோடு, Android App Development குறித்த கோர்ஸை தன்னுடைய வர்ன்பன்க்ஷங் சேனலுக்காக உருவாக்கி வருவதாகவும் கூறும் ஆதித்யன், தன்னுடைய பெற்றோர் மற்றும் 6 வயது தங்கை ஆரத்யா ஆகியோர் தனக்கு பெரிதும் துணையாக இருப்பதாகவும், தன்னுடைய YouTube சேனலுக்கான அனைத்து வீடியோக்களையும் தன் தங்கையே படம்பிடித்துத் தருவதாகவும் மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார்.
Programming, Machine Learning ஆகியவற்றில் போதிய புரிதல் இல்லாத சிறுவர்கள் மற்றும் கோடிங் கற்றலில் தொடக்க நிலையில் உள்ள சுமார் 1 லட்சம் பேருக்கு ஆதித்யனின் YouTube சேனல் உதவி வருவதாகவும், தற்போதைய நிலையில், இந்த சேனல் 250 சந்தாதாரர்களைப் பெற்றுள்ளதாகவும் EverybodyWiki என்ற இணையதளம் கூறுகிறது.

நாங்கள் அவனுடைய எந்த நடவடிக்கையிலும் தலையிடுவதில்லை. அவனுடைய வளர்ச்சி அனைத்தும், அவனுடைய சொந்த முயற்சியே.
- ராஜேஸ் நாயர்

இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com