சரியான பார்வை...சரியான வழி...சரியான செயல்! தா.நெடுஞ்செழியன் 56 

அமெரிக்காவில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் பல அரிய ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் ஏறத்தாழ 30 ஆயிரம் நோய்கள் இருக்கின்றன
சரியான பார்வை...சரியான வழி...சரியான செயல்! தா.நெடுஞ்செழியன் 56 

அமெரிக்காவில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் பல அரிய ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் ஏறத்தாழ 30 ஆயிரம் நோய்கள் இருக்கின்றன. இதில் ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோய்களுக்கு இதுவரை எந்த மருத்துவ ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை.
முதுமைப் பருவத்தில் பல்வேறு நோய்கள் உருவாகின்றன. அவற்றுக்கு புதியவிதமான மருத்துவம் தேவைப்படுகிறது. தொடர்ச்சியான மருத்துவம் செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கு உலக அளவில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது. பல்வேறு துறைகளின் தொழில்நுட்ப வளர்ச்சிகள், சிகிச்சை முறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பல புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கியிருக்கிறது. உயிரியலை நன்கு புரிந்து, புதுவகையான சிகிச்சைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
நானோ தொழில்நுட்பம்: 
நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருத்துவத்துறை தற்போது வளர்ந்து கொண்டிருக்கிறது. தனிப்பட்ட ஒருவருக்கு அவருடைய உடல் சார்ந்த தனிப்பட்ட மருத்துவம் தேவை என்றால் அதை எவ்வாறு செய்வது? சென்சார்களைப் பயன்படுத்தி, நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவருடைய நோய்களை எவ்வாறு குணப்படுத்துவது என்று ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். ஒரு மருத்துவரிடம் நோயாளி போகும்போது, நோயாளியைப் பார்த்து மருத்துவர், ""நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?'' என்றுதான் கேட்பார். அதற்கு நோயாளி தரும் பதில் உணர்வுப்பூர்வமாக இருக்கும். அதை வைத்து மருத்துவரால் நோயின் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. நோயாளியின் உடல் நிலையைக் கண்டுபிடிக்கக் கூடிய கருவி, இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்படவில்லை. 
புதிய மருத்துவத்தில் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு சிறிய அளவில் உள்ள நானோ கருவிகளை மனித உடலில் செலுத்துகிறார்கள். இந்த கருவி மனித உடலுக்குள் சென்று என்ன நோய் உள்ளது என்பதைக் கண்டுபிடிக்கிறது. உதாரணமாக மனித உடலில் புற்றுநோய் உயிரணுக்கள் இருக்குமானால், அந்த உயிரணுக்களை அழித்துவிடும். மூளையில் உள்ள நுண்ணிய குழாய்களில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால் இந்த நானோ கருவியின் மூலமாக அவற்றை நீக்கிவிடலாம். இதயத்தில் அடைப்பு இருந்தாலும் நீக்கிவிடலாம். 
பயோ என்ஜினியரிங்:
பொறியியலில் உள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உயிரியல், மருத்துவத்துறைகளில் உள்ள தீர்க்கப்படாத பல பிரச்னைகளைத் தீர்க்க உதவுவதுதான் பயோ என்ஜினியரிங் ஆகும். நமது உடலில் செயற்கைமுறையில் ஏதேனும் உருவாக்க வேண்டிய தேவையிருந்தால் இந்த பயோ என்ஜினியரிங் மூலமாக உருவாக்கலாம். 
வயதாக ஆக உடலில் உள்ள திசுக்கள் பழுதடைந்துவிடுகின்றன. புதிய திசுக்கள் உருவாகி வளர்வதும் தடைபடுகிறது. இந்நிலையில் செயற்கையான திசுக்களை பயோ என்ஜினியரிங் மூலமாக உருவாக்குகிறார்கள். மனித உடலில் உள்ள உயிரணுவைச் செயற்கையான முறையில் உருவாக்கி, அவற்றை உடலில் இணைத்து இயற்கையான முறையில் அவற்றைச் செயல்படச் செய்வதை இந்த பயோ என்ஜினியரிங் மூலமாகக் கண்டறிந்திருக்கிறார்கள். 
பயோ என்ஜினியரிங்கின் ஒரு பிரிவுதான் ரீ ஜெனரேட்டிவ் மெடிசன் (Regenerative medicine). இந்த ரீ ஜெனரேட்டிவ் மெடிசன் என்று சொல்லப்படுகிற இந்த மருத்துவம் Embryonic stem cells - Il பயன்படுத்தி செயற்கையான உயிரணுக்களை உருவாக்கி, அதன் மூலமாக செயற்கையான உடல் உறுப்பை உருவாக்குகிறது. அதை இயற்கையான முறையில் செயல்பட வைக்கிறது. மாரடைப்பு ஏற்படும்போது, இதயம் பழுதடைந்துவிடுகிறது. அவ்வாறு பழதடைந்ததைப் புதுப்பிக்கும் தன்மை மனித உடலுக்கு இல்லை. இதயத் தசைகளில் சில பகுதிகள் தேய்ந்து இல்லாமற் போகின்றன. பழுதடைந்துவிடுகின்றன. இதயத் திசுக்களை உருவாக்கி, பழுதடைந்த இதயப் பகுதியில் நானோ தொழில்நுட்ப உதவியுடன் ஒட்ட வைக்கிறார்கள். சிறிது காலத்தில் இந்த செயற்கை இதயத்திசுக்கள் உடலில் சேர்ந்து, இயற்கையானதாக மாறிவிடுகிறது. பிற உறுப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இதனால் இதயம் சரியானமுறையில் இயங்கத் தொடங்குகிறது. இது மருத்துவத்துறையில் இதயநோய்ப் பிரிவில் ஒரு சாதனை மைல் கல்லாகும். 
பொறியியல்துறையின் தொழில்நுட்பங்களை மருத்துவத்துறையில் பயன்படுத்தவில்லை என்றால் இந்தச் சாதனை சாத்தியமாகியிருக்காது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இந்த ரீ ஜெனரேட்டிவ் மருத்துவம் மூலமாக சிறுநீரகம், நுரையீரல், மூளை, தண்டுவடம் உட்பட பல உடல் உறுப்புகள் சேதமடைந்தால் அவற்றைச் சரி செய்து புதுப்பித்துவிட முடியும். 
இம்யுனோ தெரபி (IMMUNOTHERAPY):
நோய் வராமல் முன்னரே எப்படித் தடுப்பது, வந்த பின் எவ்வாறு சரி செய்வது என்பதைக் கண்டறிந்து சிகிச்சை முறைகளை மேம்படுத்துவது, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துவது தொடர்பான மருத்துவம், இம்யுனோ தெரபி ஆகும். முக்கியமாக புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளில் இத்துறை ஈடுபட்டுள்ளது. கில்லர்ஸ் செல் என்று சொல்லக்கூடிய உயிரை மாய்க்கக் கூடிய புற்றுநோய் உயிரணுக்களை எவ்வாறு அழிப்பது, எவ்வாறு உடலில் மேலும் அவை பரவாமல் தடுப்பது என்பதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. 
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஓரளவுக்கு இந்த இம்யுனோ தெரபி வழியாகக் குணப்படுத்த முடிகிறது. இம்யுனோ தெரபி புற்றுநோய் உயிரணுக்களைக் கண்டுபிடித்து அவற்றை அழிக்கிறது. 
ஒரு புற்றுநோயாளியின் உடலில் கீமோ மெடிசனைச் செலுத்தும்போது அவரின் உடலில் உள்ள புற்றுநோய் உயிரணுக்கள் மட்டுமல்ல, நல்ல உயிரணுக்களும் கொல்லப்படுகின்றன. இந்த இம்யுனோ தெரபி மூலமாக புற்றுநோய் உயிரணுக்களை மட்டுமே அழிக்க முடியும். நல்ல உயிரணுக்களைக் காப்பாற்ற முடியும். 
இந்த புற்றுநோய் உயிரணுக்கள், அவற்றை அழிக்கும் எந்த மருந்துகளினாலும் பாதிக்கப்படாதவாறு அவ்வப்போது தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன. அவ்வாறு தகவமைத்துக் கொண்ட புற்றுநோய் உயிரணுக்களை அழிக்க, புதிய அணுகுமுறைகளை, புதிய நோய்த் தடுப்புமுறைகளைக் கையாள வேண்டியிருக்கிறது. 
ஜீன் எடிட்டிங்: 
ஒரு நோயாளியின் உடலில் இயற்கையாக அமைந்திருக்கிற உடலில் உள்ள நார்மல் டிஎன்ஏ எவ்வாறு அமைந்திருக்கின்றது? பாதிப்படைந்த டிஎன்ஏ எவ்வாறு உள்ளது? அவை உடலில் எங்கு இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து சரி செய்வதே ஜீன் எடிட்டிங் ஆகும். இதன் மூலம் பரம்பரை பரம்பரையாகத் தொடரும் நோய்களைக் குணப்படுத்த முடியும். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஜீன் எடிட்டிங் துறையில் மிக உயர்ந்த ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறார்கள். மனித உடலில் வியாதிகளை உருவாக்கக் கூடிய டிஎன்ஏ, உடலில் உயிரணுக்களை எவ்வாறு சேதமடையச் செய்கின்றன என்பதைக் கண்டறிந்து, அவற்றைச் சரி செய்யும் பணியை ஜீன் எடிட்டிங்கில் செய்கிறார்கள். 
கடந்த சில ஆண்டுகளாக இந்தத் துறையில் ஆராய்ச்சி மிகவும் வளர்ந்துள்ளது. இதில் கிரிஸ்பெர்(CRISPR) என்று சொல்லப்படக் கூடிய மருத்துவமுறை ஜீன்களை வெட்டி ஒட்டக் கூடிய தொழில்நுட்பமாகும். மேலும் டிஎன்ஏ தொகுதிகளை உடலின் ஆரோக்கியத்துக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கக் கூடியதுமாகும். 
உடலில் எந்த இடத்தில் நோயால் பாதிக்கப்பட்ட உயிரணுக்கள் உள்ளன என்பதைக் கண்டறிந்து அதை வெட்டி எடுக்கிறார்கள். வெட்டி நீக்கப்பட்ட செல்
களிலிருந்து புதிய செல்களை உருவாக்குகிறார்கள். அவற்றைத் திரும்பவும் மனித உடலில் பொருத்துகிறார்கள். இயல்பாக அவற்றைச் செயல்படும்படி சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த கிரிஸ்பெர் மருத்துவமுறை மனித உடலில் ஏற்படக் கூடிய நோயினை முற்றிலும் குணப்படுத்த உதவுகிறது. இது உயிரணுக்களைப் பற்றி உன்னிப்பாக ஆராய்கிறது. அவற்றில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதைக் கண்டறிந்து தகவல்களைச் சேகரித்து, அவற்றைக் கம்ப்யூட்டரில் பதிவேற்றுகிறது. பாதிப்படைந்த செல்களின் பாதிப்பை நீக்குவதற்கான கம்ப்யூட்டர் புரோகிராம்களை ஏற்படுத்தி, அதன் மூலமாக செல்களை மாற்றி அமைக்கிறது. இந்தத் தொழில்நுட்பம் வாயிலாக தீர்க்க முடியாமல் இருந்த பல நோய்களுக்கு எளிதாகச் சிகிச்சை செய்யக் கூடிய நிலை உருவாகி உள்ளது.
இவ்வாறு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் பொறியியல், உயிரியல் என பலதுறைகளின் வளர்ச்சியை, தொழில்நுட்பங்களை, மருத்துவத்துறைக்குப் பயன்படுத்தி அவற்றை வளர்க்க பல ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட உலக அளவில் நிறைய இளம் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் தேவைப்படுகிறார்கள். 
ஆனால் இந்தியாவில் பயோ என்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் நிறையப் பேர் இருந்தாலும், சில குறிப்பிட்ட தரம் வாய்ந்த கல்விநிறுவனங்களைத் தவிர, பல கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உதவுவதில்லை; உறுதுணையாக இருப்பதுமில்லை. ஆராய்ச்சி செய்வதற்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கித் தருவதுமில்லை. மாணவர்களின் திறமைகளை ஆக்கப்பூர்வமான உருவாக்கத் துணைபுரிவதுமில்லை. அதனால் நமது மாணவர்கள் இத்தகைய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதில்லை.
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com