இணைய வெளியினிலே...

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் முன்னெப்போதும் இல்லாத வாசலை மக்களுக்குத் திறந்துவிட்டிருக்கின்றன. 
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....
* அடுத்தவர்கள் கேட்க வேண்டும்
என்ற நோக்கம் இருப்பதில்லை...
குயிலின் பாடலில். 
அது தனக்காகவே பாடுகிறது.
பெ. கருணாகரன்

* எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த கடவுளுக்கு இப்போதுதான் அவர் மனைவியிடமிருந்து போன் கால் வந்தது. அதனால்தான் வெளியே போயிருக்கிறார். கடவுளாச்சே... நான்கு பேர் முன்னாடி பொண்டாட்டியிடம் திட்டு வாங்கினால் நல்லாவா இருக்கும்?
அன்பில்பிரியன்

* கோழையின் கையில்
நெடுங்கூர் வாளாக அல்ல...
வீரனின் கையில் 
ஒடிந்த வாளாகச் 
சுழல்வதையே
யாசிக்கிறேன்.
வெற்றிப்பேரொளி

* உலகம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்... 
நாம் நேசிப்பை மட்டுமே கொடுத்துக் கொண்டிருப்போம்.
ராஜா முகம்மது ராஜா

சுட்டுரையிலிருந்து...
* அரை அடி தோண்டி
மரம் நட்டிருந்தால்...
500 அடி தோண்டி 
போர் போட வேண்டிய
அவசியமில்லை.
விவசாயி

* ஊ ர் ந் து... செல்லும் 
பேருந்துதான்...
எனக்குப் பிடிக்கும்!
வழியெங்கும்...
காணக்கிடைப்பதையெல்லாம் 
அள்ளிப்போட்டுக்கொண்டே 
செல்ல...
பார்வையுடன் படைத்திட்ட 
பெற்றோருக்கு 
நனி நன்றி.
மாதொருபாகன்

* நல்லவனிடம் கண்ட ஒரு
தவறுக்காக அவனை விட்டு
விலகாதே... 
தீயவனிடம் கண்ட ஒரு
நற்செயலுக்காக அவனுடன்
சேராதே. 
முகமூடி

* என் வானம் நீ...
தேய்ந்தாலும்
மறைந்தாலும்
மீண்டும் வலம் வரும்
நிலவாய் நான்.
சப்பாணி

வலைதளத்திலிருந்து...
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் முன்னெப்போதும் இல்லாத வாசலை மக்களுக்குத் திறந்துவிட்டிருக்கின்றன. 
யாரும், எதைப் பற்றியும் கருத்து வெளியிடலாம். 
அந்தக் கருத்து சரியானதாகவோ, தவறானதாகவோ, முட்டாள்தனமாகவோ, விஷமத்தனம் கொண்டதாகவோ இருக்கலாம். ஆனால் உங்கள் ஃபேஸ்புக்கில்; ட்விட்டரில் அதை எழுத முடியும். பல்லாயிரம் பேர் அதை படிக்க, பகிர முடியும். புகழுக்கும், அங்கீகாரத்துக்கும் ஏங்கும் மனித மனதின் ஆசைகளுக்கு மேடை அமைத்துத் தந்து "நீங்களும் வி.ஐ.பி. தான்' என்று ஒவ்வொருவரையும் திருப்தி அடைய வைக்கின்றன சமூக இணையதளங்கள்.
இதற்கு முன்பு சீரியஸான கட்டுரைகள் சில இணையதளங்களில் எழுதப்படும். அரட்டைத் தளங்கள் தனியே இருக்கும். புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடும் தளங்கள் தனியே செயல்படும். 
ஃபேஸ்புக் வந்து இவை அனைத்தையும் ஒரே இடத்துக்குக் கொண்டுவந்துவிட்டது. இது ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர். இங்கு புரட்சியும் கிடைக்கும்; புடலங்காய் கூட்டு செய்முறையும் கிடைக்கும். 
"அனைத்தும் ஒரே இடத்தில்' என்ற இந்த உத்தி, அவர்களின் வியாபார வெற்றிக்கு வழிவகுத்திருக்கலாம். ஆனால் அவற்றைப் பயன்படுத்தும் மக்களின் மனதில் "அனைத்தும் ஒன்றே' என்ற மனநிலையை இது உருவாக்குகிறது. தனித்தனியே பிரித்துப் பகுத்துப் பார்க்கும் ஆய்வு மனப்பான்மை, பலருக்கும் இல்லாத நிலையில் இதன் ஜிகினாத்தன்மையில் மனதைப் பறிகொடுக்கின்றனர். இதன் உண்மையான ஆபத்து இதுவே.
https://nadaivandi.blogspot.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com