சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 52 - தா.நெடுஞ்செழியன்

வரலாற்றுத்துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தவர்கள் இத்தகைய அருங்காட்சியகங்களைப் பொருத்தவரை சுவடிக்காப்பாளர் (archivisit) பணிக்குச் செல்லலாம்.
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 52 - தா.நெடுஞ்செழியன்

வரலாற்றுத்துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தவர்கள் இத்தகைய அருங்காட்சியகங்களைப் பொருத்தவரை சுவடிக்காப்பாளர் (archivisit) பணிக்குச் செல்லலாம். ஆவணங்களைப் பாதுகாப்பது, மஹால்களைப் பாதுகாப்பது, கட்டடங்களைப் பாதுகாப்பது போன்ற பணிகளில் ஈடுபடும் ஹெரிட்டேஜ் மேனேஜர் பணிக்கான வாய்ப்புகளும் உள்ளன. மியூசியம் எஜுகேஷன் ஆபிஸர் என்ற பணியில் இருப்பவர்கள் பார்வையாளர்களுக்கு வரலாற்றுப் புகழ்மிக்க மியூசியங்களைப் பற்றி விளக்கிச் சொல்வார்கள். கியூரேட்டர் என்ற பணியில் உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட மியூசியத்தில் எவற்றைக் கொண்டு வந்து வைத்துக் காட்சிப்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார்கள். உதாரணமாக பறவைகளைப் பற்றிய மியூசியம் என்றால் பலவிதமான பறவைகளின் சிறகுகள், எலும்புகள் போன்றவற்றை மியூசியத்தில் வைப்பார்கள். வரலாறு படித்தவர்கள் அகடமிக் லைப்ரேரியனாகப் போகலாம், கொள்கை முடிவு எடுக்கும் பணிக்குப் போகலாம், வரலாற்று ஆராய்ச்சியாளராகப் போகலாம், சர்வதேச சுற்றுலா வழிகாட்டியாகவும் போகலாம். 
18 - 20 ஆம் நூற்றாண்டு காலப்பகுதிகளில் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளைக் கைப்பற்ற கிழக்கிந்திய கம்பெனி நடத்திய போர்களில் ஈடுபட்ட - பழைய கிழக்கிந்திய கம்பெனியின் படைகளில் இடம் பெற்ற - சிப்பாய்களைப் பற்றிய ஆவணமாக THE FORGOTTEN SENTINELS என்ற புத்தத்தை என்.நெடுமாறன் எழுதியிருக்கிறார். அந்த போர்களில் நிறைய இந்திய சிப்பாய்கள் மரணமடைந்தனர். ஆனால் அவர்களைப் பற்றி வரலாற்றில் பெரிய அளவுக்குக் குறிப்பிடப்படவில்லை. வரலாற்றில் மறைக்கப்பட்ட அந்த மக்களைப் பற்றி இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இவ்வாறு வரலாற்றில் இதுவரை கண்டறியாத - வெளிச்சத்துக் கொண்டு வரப்படாத - பலவற்றை வரலாறு படித்த மாணவர்கள் வெளிக் கொண்டு வந்து உலகத்துக்குத் தெரியப்படுத்தலாம். 
சமூக அறிவியலின் கீழ் உள்ள உற்பத்தி, விநியோகம், நுகர்வு பற்றி படிப்பதே பொருளாதாரத்துறை சார்ந்த படிப்புகளாகும். 19 ஆம் நூற்றாண்டில் பொருளாதாரம் பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டு "பொருளாதார அறிவியல்' ஆக வளர்ச்சியுற்றது. பொருளாதாரம் என்பதற்கான நவீன வரையறை ஆல்ஃபிரட் மார்ஷல் என்பவரால் எழுதப்பட்ட Principles of Economics (1890) என்ற புத்தகத்தில் கூறப்பட்டது. தேவைக்கும் அளிப்புக்கும் இடையிலான உறவு, நுகர்வின் அளவு, உற்பத்தி விலை ஆகியவற்றைப் பற்றிய தெளிவை ஏற்படுத்தும்விதமாக இந்தப் புத்தகத்தை அவர் எழுதியிருக்கிறார். 
சாதாரண மனிதனின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய தொழில், வணிகம் குறித்த படிப்பே பொருளாதாரம். இதில் அம்மனிதர் எவ்வாறு வருவாய் ஈட்டுகிறார், எவ்வாறு செலவழிக்கிறார், எவ்வாறு அவற்றைச் சேமிக்கிறார், நாட்டின் ஒட்டுமொத்த வளத்தில் இந்த மனிதரின் பங்கு என்ன என்பதைப் பற்றிய படிப்பாக பொருளாதாரம் உள்ளது. 
மைக்ரோ எகனாமிக்ஸ் படிப்பில் பொருளாதாரத்தின் அடிப்படைக் கூறுகளைப் பற்றி தெரிந்து கொள்வார்கள். சந்தைக்கும் நுகர்வோருக்கும் இடையில் செயல்படும் பல்வேறு கூறுகளைப் பற்றிய படிப்பாக அது உள்ளது. 
மேக்ரோ எகனாமிக்ஸ் உற்பத்தி, நுகர்வு, சேமிப்பு, முதலீடு ஆகியவற்றை உள்ளடக்கிய முழு பொருளாதாரத்தின் அனைத்துக் கூறுகளைப் பற்றிய படிப்பாக உள்ளது. கூலி, மூலதனம், நிலம் ஆகியவற்றின் மூல வளத்தைப் பற்றி, பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி, பொருளாதாரம் சார்ந்த கொள்கைகளைப் பற்றி படிக்கும் படிப்பாக மேக்ரோ எகனாமிக்ஸ் உள்ளது. மேக்ரோ எகனாமிக்ஸ் படிக்கும் மாணவர்கள் தேசிய அளவிலான பொருளாதாரம் சார்ந்த விஷயங்களைத் தெரிந்து கொள்வார்கள்.
உற்பத்தி பொருள்களைச் சந்தைப்படுத்துதல், அவற்றின் விலையை நிர்ணயித்தல், விலை ஏற்ற தாழ்வு பற்றித் தெரிந்து கொள்ளுதல் என எல்லாவற்றையும் பொருளாதாரம் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிப்பவர்கள் தெரிந்து கொள்வார்கள். 
பொருளாதார வளர்ச்சி எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் கணக்கிட்டு, ஒப்பீடு செய்து, அவற்றிற்கேற்ற பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கும் திறனுடையவர்களாக மாணவர்களை இந்தப் பொருளாதாரம் சார்ந்த படிப்புகள் உருவாக்கும். 
சர்வதேச பொருளாதாரம், வளர்ச்சிப் பொருளாதாரம் ஆகிய படிப்புகளும் உள்ளன.
சர்வதேச பொருளாதாரம் பற்றிய படிப்பு, வணிகத்தினால் ஏற்படக்கூடிய லாபங்களைக் கணக்கிட உதவுகிறது. உதாரணமாக, ஒரு நாட்டில் துணி உற்பத்தி அதிகமாக இருக்கும். இன்னொரு நாட்டில் துணி உற்பத்தியே இருக்காது. ஒரு பொருளை எந்த நாட்டில் இருந்து வாங்கி, எந்த நாட்டில் விற்பனை செய்யலாம் என்பதைப் பற்றி, எந்த இடத்தின் மூலப்பொருள்களை வாங்கி அவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம் என்பதைப் பற்றி சர்வதேசப் பொருளாதாரப் படிப்பு கற்றுத் தரும். 
ஒரு நாட்டில் உருவாக்கப்படும் ஓர் உற்பத்திப் பொருளை, இன்னொரு நாட்டில் உருவாக்கினால் அதனுடைய உற்பத்தி விலை பன்மடங்கு அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தப் பொருளை இறக்குமதி செய்து பயன்படுத்துவதே சரியாக இருக்கும். வளரும் நாடுகளில் இருந்து வளர்ந்த நாடுகள் விலை குறைவான பொருள்களை வாங்குவது இந்த அடிப்படையில்தான். இப்படிப்பட்ட பொருளாதாரம் சார்ந்த விஷயங்களை மாணவர்களுக்குக் கற்றுத் தருவதற்காக சர்வதேசப் பொருளாதாரம் சார்ந்த படிப்புகள் உள்ளன. 
பொருளாதாரத்தில் மேம்படாத நாடுகளில் உள்ள மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களின் நிதிநிலையை மேம்படுத்தவும், அவர்களுடைய வறுமையை அகற்றவும் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது வளர்ச்சிப் பொருளாதாரப் படிப்பில் கற்றுத் தரப்படுகிறது.
பொருளாதாரப் படிப்பில் பொருளியல் அமைப்புகளைப் பற்றிய படிப்பும் உள்ளது. முதலாளித்துவப் பொருளாதாரம் என்றால் என்ன? சோசலிசப் பொருளாதாரம் என்றால் என்ன? கலப்பு பொருளாதாரம் என்ன? என்பதைப் பற்றிய படிப்பு அது. 
தற்போது பொருளாதாரத்துறை படிப்பில், புதியதாக "எனர்ஜி எகனாமி' என்பது சேர்ந்துள்ளது. ஒரு நாட்டில் எவ்வளவு ஆற்றல் உள்ளது, எவ்வளவு ஆற்றல் தேவை, எவ்வளவு ஆற்றல் விநியோகிக்கப்படுகிறது என்பதைப் பற்றியெல்லாம் "எனர்ஜி எகனாமி' படிப்பு படிக்கும் மாணவர்கள் தெரிந்து கொள்வார்கள். 
"எகனாமெட்ரிக்ஸ்' என்ற படிப்பு உள்ளது. இது புள்ளியியல், கணிதம், பொருளாதாரம் கலந்த படிப்பு. பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகளில் உள்ள புள்ளி விவரங்களிலிருந்து அவற்றை ஆய்வு செய்து, வளர்ச்சிக்கு உகந்த பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வழிகாட்டும் படிப்பு இது. 
அடுத்து பொருளாதார வரலாறு (HISTORY OF ECONOMICS) என்ற படிப்பும் உள்ளது. 
பொருளாதாரப் படிப்பு படித்தவர்களுக்கு பல்கலைக்கழகங்களில், தொழில்துறையில், வங்கித்துறையில், கருவூலங்களில் அதிக அளவு வேலை வாய்ப்புகள் உள்ளன. நிதி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச நிதிசார்ந்த நிறுவனங்களில் பணியாற்றலாம். 
பொருளாதாரம் சார்ந்த படிப்புகளை "சென்ட்ரல் யுனிவர்சிட்டி ஆஃப் ஹைதராபாத்' - இல் படிக்கலாம். பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்கலாம். அங்கே பிளஸ் டூ முடித்த மாணவர்கள் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு படிக்கலாம். ஐஐடி மும்பையில் பிஎஸ் எகானமிக்ஸ் என்ற 4 ஆண்டு படிப்பு உள்ளது. 
யுனிவர்சிட்டி ஆஃப் டெல்லி, யுனிவர்சிட்டி ஆஃப் பாம்பே, யுனிவர்சிட்டி ஆஃப் கல்கத்தா, யுனிவர்சிட்டி ஆஃப் மெட்ராஸ் ஆகியவற்றிலும் பொருளாதாரப் படிப்புகள் உள்ளன. ஜேஎன்யு டெல்லியிலும் பொருளாதாரப் படிப்புகள் உள்ளன. இங்கேயெல்லாம் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டப் படிப்பு படிக்கலாம். இதற்கு முன்பு ஏதாவது கல்லூரியில் பிஏ எகனாமிக்ஸ் படிப்பு படித்துவிட்டு, முதுகலைப் பட்டப்படிப்பை மத்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்கலாம். 
சென்னையில் "மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்' என்பது 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் மாணவர்கள் CENTRAL UNIVERSITIES COMMON ENTRANCE TEST (CUCET) என்ற தேர்வை 12 ஆம் வகுப்பு படித்தவுடன் எழுதி, அதன் பிறகு 5 ஆண்டுகள் எம்.ஏ. இன்டகரேட்டடு படிப்புகள் படிக்கலாம். இதில் முதல் மூன்று ஆண்டுகள், தமிழகத்தில் அமைந்துள்ள சென்ட்ரல் யுனிவர்சிட்டி திருவாரூரில் படிக்க வேண்டும். பின்னர் 2 ஆண்டுகள் சென்னையில் உள்ள "மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்' - இல் படிக்க வேண்டும். இந்த "மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்' - இல் பொருளாதாரப் பாடப்பிரிவில் உள்ளமுக்கிய துறைகளான புள்ளியியல் மற்றும் அனலிட்டிக்ஸ் துறைகளுடன் பொருளாதாரப் பாடப் பிரிவுகள் எவ்வாறு ஒருங்கிணைகின்றன என்பதைப் பயிற்றுவிக்கிறார்கள். இங்கு ஜெனரல் எகனாமிக்ஸ், ஃபினான்சியல் எகனாமிக்ஸ், Actuarial Economics, அப்ளைடு குவாண்டிடேட்டிவ் ஃபினான்ஸ், என்விரான்மென்டல் எகனாமிக்ஸ் ஆகிய துறைகளில் முதுகலைப் படிப்புகள் உள்ளன. 
அதேபோன்று ரிசர்ச் அண்ட் பிசினஸ் அனலிட்டிக்ஸ், டேட்டா சயின்ஸ் அண்ட் ஃபினான்சியல் இன்ஜினியரிங் புரோகிராம் ஆகிய போஸ்ட் கிராஜுவேஷன் படிப்புகளும் உள்ளன. 
இந்தப் படிப்புகள் எல்லாம் பொருளாதாரத்துறை சார்ந்த படிப்புகளில் குறிப்பிடத்தக்கவை. அனைத்துக் கல்லூரிகளிலும் இல்லாதவை. முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜன் இங்கு சேர்மனாகப் பணியாற்றினார். பொருளாதார ஆராய்ச்சிகளில் எவ்வாறு ஈடுபடுவது என்பதை மாணவர்களுக்குக் கற்றுத் தந்தார். ஜிஇ ஃபினான்ஸ், சிட்டி பேங்க், ஐபிஎம், எல்&டி, கேபிஎம்ஜி, டெலாய்ட் போன்ற பல்வேறு புகழ்வாய்ந்த பன்னாட்டு நிறுவனங்களில் இங்கு படிக்கக் கூடிய மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன.
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: 
சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com