சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! - 37

சென்னை கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின்படி  பிளஸ் டூ வரை கல்வி கற்பிக்கப்படுகிறது.  
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! - 37

சென்னை கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின்படி  பிளஸ் டூ வரை கல்வி கற்பிக்கப்படுகிறது.   மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதி வசதிகளும் உள்ளன.  இதில்  6 இலிருந்து 8 வகுப்பு வரை படிப்பவர்களுக்கு  ஜூனியர் ஹாஸ்டலும்,  9-ஆம் வகுப்பு 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சீனியர் ஹாஸ்டலும்,  11 -12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் சீனியர் ஹாஸ்டலும் உள்ளன.  

கல்வியைத் தாண்டி இந்தப் பள்ளியில் பல செயல்பாடுகள் மாணவர்களின் முன்னேற்றத்துக்காகச் செய்யப்படுகின்றன. 

"அமெரிக்கன் ஃபீல்டு சர்வீஸ்' என்று சொல்லக் கூடிய  அமைப்புடன் நீண்டகாலமாக இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்கு படிக்கும் மாணவர்களை அமெரிக்காவுக்கும்,  ஜப்பானுக்கும் அனுப்புகிறார்கள்.  அந்த நாட்டிற்குச் சென்று நமது பாரம்பரிய  பண்பாடு, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அங்குள்ள மாணவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.  இதேபோன்று அந்நாட்டு மாணவர்களை சென்னைக்கு வரவழைத்து அங்குள்ள பாரம்பரிய பண்பாடு, பழக்க, வழக்கங்கள் போன்றவற்றை இங்குள்ள மாணவர்கள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்கிறார்கள். மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள வெவ்வேறு சமூகங்களை, அவர்களின் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கு இந்த கலாசார பரிமாற்ற நிகழ்ச்சி  உதவுவதாக உள்ளது.  2017 -18 -ஆம் ஆண்டு மாணவர்கள் ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும் சென்றனர்.  அதேபோன்று அந்நாட்டு மாணவர்கள் இங்கு வந்து இங்குள்ள கலாசார, வாழ்க்கைமுறைகளைத் தெரிந்து கொண்டனர்.  

இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களில்  குறிப்பிடத்தக்கவர்கள் சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவரும்,  பிரேக்ஸ் இண்டியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான எஸ்.விஜி,  எம்.ஆர்.எஃப் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான   கே.என்.மாமன்,   தி ஹிந்து நிறுவனத்தைச் சேர்ந்த என்.ராம், சன்மார் குரூப் நிறுவனத்தைச் சேர்ந்த  என்.சங்கர், ஸ்டெர்லிங் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வி.கே.சந்திரகுமார் மற்றும்  டிவிஎஸ் டைனமிக் குளோபல்  ஃப்ரீட் சர்வீஸஸ் நிறுவனத்தைச் சேர்ந்த    ஐ.ஜெயராஜ் ஆகிய 6 பேர் ஒன்றாக இணைந்து அவர்கள் படித்த பள்ளியின் நினைவாக " குருவில்லா ஜேக்கப் மெமோரியல் ட்ரஸ்ட்'  என்ற அமைப்பை 2004-ஆம் ஆண்டு சென்னை கிறிஸ்துவ கல்லூரி  மேல்நிலைப் பள்ளி  வளாகத்தில் தொடங்கினர். இவர்கள் ஒவ்வோர் ஆண்டும் குருவில்லா ஜேக்கப்பின் பிறந்த நாளாகிய ஆகஸ்ட் 3 அன்று தலைசிறந்த கல்வியாளர்களை அழைத்து,  இங்குள்ள பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களையும் பங்கேற்கச் செய்து கல்வியில் நடக்கும் மாற்றங்களை அறிவதற்கான நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.  

இந்த குருவில்லா ஜேக்கப் மெமோ ரியல் ட்ரஸ்ட் வாயிலாக   சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்காக வெவ்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர். அவற்றில் ஒன்று, டோட்டல் குவாலிட்டி மேனேஜ்மென்ட் இன் இஜுகேஷன் இன்ஸ்டிடியூட் (TQM)  என்ற நிகழ்ச்சி. பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதே இதன் நோக்கம்.  

சிஐஐ   இன்ஸ்டிடியூட் ஆஃப் குவாலிட்டி என்ற பெங்களூருவில் உள்ள நிறுவனத்துடன் சேர்ந்து  தமிழகத்தில் உள்ள கார்ப்பரேஷன் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கான பயிற்சி 2006 - 2008 வரை 20 மாதங்கள்  நடந்தது.

அந்தப் பயிற்சியின் மூலமாக  தரம் உயர்த்தப்பட்ட  மாதிரிப் பள்ளிகளை தமிழகத்தில் ஏற்படுத்தினார்கள். 

இதுமட்டுமல்லாது, எஜுகேஷன் லீடர்ஷிப் புரோகிராம்  என்ற பயிற்சியும் டில்லியில் உள்ள சென்டர் ஃபார் எஜுகேஷன்   மேனேஜ்மென்ட்  அண்ட் டெவலப்மென்ட்  என்ற அமைப்புடன் இணைந்து நடத்தப்படுகிறது.  "ஸ்பிரிட் ஆஃப் லீடர்ஷிப்'  என்ற பெயரிலான இந்தப்  பயிற்சியை தலைமையாசிரியர்கள், உதவித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளித்து வருகின்றனர்.  யுனிவர்சிடி ஆஃப் வாஷிங்டன் மற்றும்  ஹார்வார்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றால் இந்தியப் பள்ளிகளுக்கு இந்த  பயிற்சியானது  வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.  இதில் எண்ணற்ற பள்ளிகள் பங்கேற்றன. இந்தப் பயிற்சி 12 மாதங்கள் நடைபெறும். 346 பள்ளி தலைமையாசிரியர்கள், தாளாளர்கள்  இந்தப் பயிற்சியை இதுவரை பெற்றிருக்கின்றனர். 

இணைய வழியாக கல்வி கற்றுத் தரும் வசதிகளையும் இந்த குருவில்லா ஜேக்கப் மெமோரியல்  ட்ரஸ்ட் உருவாக்கி உள்ளது.  6 -8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு  இயற்பியல், வேதியியல் பயில்வதற்காக ஐஐடி, மெட்ராஸýடன் இணைந்து  இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். ஐஐடி மெட்ராஸின் முன்னாள் இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த்,   குருவில்லா ஜேக்கப்பின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

"எ கிளாஸ் அபார்ட்'  என்ற பயிற்சி  திறமைகளை வளர்ப்பது குறித்த பயிற்சி. சென்னையில் உள்ள வி-எக்ùஸல் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து நடத்துகிறார்கள்.   படிப்புத் திறன் குறைவாக உள்ள மாணவர்கள், கவனிக்கும் திறன் குறைவாக உள்ள மாணவர்கள், ஆட்டிஸம் பாதிப்புள்ள மாணவர்கள் உள்ளிட்டோரைக் கண்டறிந்து,  அவர்களின் படைப்பார்வத்தை, கற்பனையாற்றலைத் தூண்டி விடுவதற்கு,  ஆசிரியர்கள் எவ்வாறு பணிபுரிய வேண்டும் என்பதற்கான  பயிற்சிகளை அளிக்கிறார்கள்.  தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் இத்தகைய மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை முன்னேற்றுவதற்கே இந்தப் பயிற்சி.    

சுற்றுச்சூழல் பற்றி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதற்காக "கேர் எர்த்' என்ற நிறுனத்தின் வாயிலாக "என்விரான்மென்ட் எஜுகேஷன்'  என்ற பயிற்சியை  அளித்து வருகிறார்கள்.  பள்ளிகளில் எவ்வாறு செடிகள் வளர்ப்பது,   சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்பதை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக 2012 இலிருந்து  பள்ளிகளுக்குப் பயிற்சி  அளித்து வருகிறார்கள்.  குறிப்பாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் உயிரியல்துறை  ஆசிரியர்களுக்கு அளித்து வருகிறார்கள்.  

"இங்கிலீஷ் எவால்யூஷன் கோர்ஸ்' - அதாவது ஆங்கிலத் திறன் வளர்க்கும் பயிற்சி  நடத்தப்படுகிறது.  ஆங்கிலத்திறனை மாணவர்களும் ஆசிரியர்களும் வளர்த்துக் கொள்வதற்கான இந்தப் பயிற்சி  பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து 2014-இல்  இருந்து அளிக்கப்படுகிறது.  இந்தப் பயிற்சி 42 மணி நேரம் 11  வாரங்களுக்கு அளிக்கப்படுகிறது.  இதுதவிர, பிரிட்டிஷ் கவுன்சில் ஆசிரியர்களின் ஆங்கிலத்திறனை மேம்படுத்தவும், ஆங்கிலத்தைக் கற்பிக்கும் திறனை வளர்க்கவும் பயிற்சிகளை அளித்து வருகிறது. 

இதுதவிர, என்னாலும் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும்  என்று பொருள்படும் "ஐ கேன் மேக்  எ டிஃபரன்ஸ்' என்ற பயிற்சி ஆசிரியர்கள் தம்மை வெறும் ஆசிரியர்கள் என்று சொல்லிக் கொள்வதற்குப் பதிலாக, அவர்களுடைய திறமைகளை வளர்க்கும் விதமாக  பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 

இதேபோன்று "ஹார்ட் ஆப் தி மேட்டர்' என்ற ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாணவர்களை உளவியல்ரீதியாக அணுகி, அவர்களுடைய திறன்களை மேம்படுத்துவதற்கான  பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளிப்பதற்காக மூத்த உளவியலாளர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள் ஆகியோரைக் கொண்ட குழுவினால்  பயிற்சி அளிக்கப்படுகிறது.  இதுவரைக்கும் 60 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.  5 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி இது.  8 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குச் சொல்லித்தரும் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் மறைந்த பின்னும் - கல்விசார்ந்த அவருடைய  எதிர்காலத் திட்டங்களை -  தொடர்ந்து செயல்படுத்துவதற்காக அவரிடம் படித்த மாணவர்கள் இந்த ட்ரஸ்ட்டை  அமைத்து  அதன் மூலம் செயல்பட்டு வருகிறார்கள். 

பணத்தை வேறு வழிகளில் செலவு செய்யாமல், கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக இந்த முன்னாள் மாணவர்கள் செலவழித்துச் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது. 

குருவில்லா ஜேக்கப்பின் பிறந்தநாளன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை அழைத்துப் பேசச் செய்கிறார்கள்.  

குருவில்லா ஜேக்கப்பிடம் பயின்ற மாணவர்கள் தற்போது வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் பணியாற்றினாலும் சிறந்து விளங்கினாலும் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற உன்னத நோக்குடன் ஆற்றிவரும் பணி பாராட்டத்தக்கது.   இம்மாதிரியான முன்மாதிரியான நிகழ்ச்சிகள் வேறெங்கும் ஓர் ஆசிரியரின் முன்னாள் மாணவர்களால்  நடத்தப்பட வில்லை. இந்த முயற்சிகள் கிராமப்புறங்களில் உள்ள பின்தங்கிய பள்ளிகள் கூட சிறந்த கல்விகற்பிக்கும் முறைகளைக் கற்றறிந்து அந்தப் பகுதியில் உள்ள மாணவர்கள் முன்னேற்றத்துக்கு வழி ஏற்படுத்தி இருக்கிறது.

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com