கல்வியே... ஒரு மனிதனுக்கு மதிப்பு! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.

அமெரிக்க நாட்டில் கென்டகி மாகாணத்தில் ஹாகன்வில் என்னும் ஊரில் வளர்ந்து வந்த சிறுவனுக்கு புத்தகங்களின் மீது மிகுந்த ஆர்வம். பாடப் புத்தகங்களோடு மற்ற புத்தகங்களைப் படிக்க ஆசை கொண்டான்
கல்வியே... ஒரு மனிதனுக்கு மதிப்பு! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.

தன்னிலை உயர்த்து! 44 
அமெரிக்க நாட்டில் கென்டகி மாகாணத்தில் ஹாகன்வில் என்னும் ஊரில் வளர்ந்து வந்த சிறுவனுக்கு புத்தகங்களின் மீது மிகுந்த ஆர்வம். பாடப் புத்தகங்களோடு மற்ற புத்தகங்களைப் படிக்க ஆசை கொண்டான். ஆனால், அவனது தந்தையோ ஏழை. அதனால் அவன் "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்ற அதிவீரராம பாண்டியனின் வெற்றி வேற்கை வரிகளுக்கேற்ப, பிறரிடம் கெஞ்சி கேட்டு புத்தகங்களை வாங்கிப் படிப்பான்.
ஒரு நாள் அவன் "அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டன்' என்ற புத்தகத்தை ஒருவரிடம் இரவல் வாங்கி படித்து வந்தான். உறக்கம் வந்ததும் அப்புத்தகத்தை அவனது வீட்டு ஜன்னல் ஓரத்தில் வைத்து விட்டு தூங்கி விட்டான். அன்றிரவு பெய்த மழையில் அப்புத்தகம் நனைந்துவிட்டது. அப்புத்தகத்தை உரிமையாளரிடம் கொடுத்து, "ஐயா... இந்த புத்தகம் எனது கவனக்குறைவால் மழையில் நனைந்து விட்டது. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்' என்றான். அதற்கு அவர், "இக்காரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. புத்தகத்திற்கான விலையைக் கொடுத்து விட்டுச் செல்' என்றார். "ஐயா... என்னிடம் பணம் இல்லை' என்றான் அச்சிறுவன். "அப்படியென்றால், அதற்கு ஈடாக என் வயலில் மூன்று நாட்கள் நீ வேலை செய்ய வேண்டும்' என்றார். அதற்கு சம்மதித்ததோடு, "ஐயா... நான் வேலை செய்து முடித்ததும் தாங்கள் இந்த புத்தகத்தை எனக்கே தரவேண்டும்' என்றான். 
வேலையைச் செய்து முடித்துவிட்டு அப்புத்தகத்தை பெற்றுச் சென்றான். விடுமுறை நாட்களிலும், கிடைக்கின்ற ஓய்வு நேரங்களிலும் புத்தகங்களைப் படித்து, தனது அறிவை மேம்படுத்திக் கொண்டதால்தான் எளிய குடும்பத்தில் பிறந்த ஆபிரகாம் லிங்கனான அச்சிறுவன் பிற்காலத்தில் அமெரிக்க நாட்டின் பதினாறாவது ஜனாதிபதியாக முடிந்தது.
கல்வி என்பது பள்ளியிலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை சென்று படித்து பட்டம் மட்டும் பெறுவது அல்ல. ஒழுக்க நெறிமுறையோடு அறிவை வளர்ப்பதும், வாழ்வின் உண்மையை அறிந்து கொள்வதும்தான் உண்மையான கல்வி. "ஒருவன் பள்ளியில் கற்ற அனைத்தையும் மறந்த பின்பு எஞ்சியிருப்பதுதான் கல்வி' என்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 
"என்னிடத்தில் ஒன்றுமே தெரியாத பன்னிரண்டு வயது சிறுவனைத் தாருங்கள் அச்சிறுவனுக்கு மூன்று வருடம் நான் பாடம் கற்பிக்கிறேன். பிறகு ஒரு தேர்வு நடத்துங்கள். அதே சமயம் பதினைந்து வருடங்கள் பயின்ற மாணவன் அவன் படித்ததை மட்டும் நினைவிலிருந்து சொல்பவனாக இருப்பான். ஆனால், என்னிடம் பயின்ற மாணவனோ கற்று அதன்படி வாழ்ந்து காட்டுபவனாக இருப்பான்' என்று சவால் விட்டார் சுவிட்சர்லாந்து நாட்டு அறிஞர் ரூசோ.
கல்வி என்பது ஏட்டுச்சுரைக்காய் அல்ல. அது வாழ்க்கைப் படிப்பு. சரியாக படிக்கவில்லையென்றால், வாழ்க்கை கோணலாகிவிடும். எனவே, கற்பதை தேர்வுக்காகவும், பிறருக்காகவும் அல்லாமல், தனக்காகக் கற்க வேண்டும்; அதைத் தெளிவாகவும் கற்க வேண்டும்.
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்ற திருக்குறளின் மூலம், "கல்வியின் நோக்கமே வாழ்க்கைக்கு பயனுள்ள அறிவு நூல்களை சந்தேகமின்றி கற்று, அதன்படி ஒழுக்க நெறியில் வாழ வேண்டும்' என்கிறார் நம் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
அறிவின் பிறப்பிடம் கல்வி. முன்னேற்றத்தின் மூலதனம் கல்வி. உயர்வான வாழ்க்கையின் உன்னதமே கல்விதான். எதிர்காலத்தின் அடித்தளம் இன்று கற்கும் கல்வியேயாகும். கல்வி, அறியாமையை அகற்றும் விளக்கு.
வெறுமனே படிப்பது என்பது, பசியோடு இருப்பவருக்கு மீனவர் ஒருவர் தன்னிடமுள்ள மீன்களில் ஒன்றைப் பசியாறக் கொடுப்பது போன்றது. அது அவரது ஒருநாள் பசியை அகற்றும். இதனைத் தேர்வுக்காக மட்டும் படிப்பதோடு ஒப்பிடலாம். கற்பது என்பது படித்ததை வாழ்வோடு பழக்கப்படுத்திக் கொள்வது. அது மீனவர் அப்பசியுள்ளவனுக்கு மீனைப் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதாகும். அது அப்பசியுள்ளவனின் வாழ்க்கையின் வறுமையைப் போக்கிவிடும். ஆகவே, வாழ்க்கைக்காகப் படித்தால் மட்டுமே ஒருவரது திறமை பெருகும்.
"சொல்லிக் கொடுத்தால் நான் மறந்துவிடுவேன்; படத்தோடு விளக்கினால் நான் ஞாபகத்தில் வைத்து இருப்பேன். என்னையும் ஈடுபடுத்துங்கள் நான் புரிந்து கொள்வேன்' என்கிறது சீனப் பழமொழி. படிக்கின்ற மாணவன் கற்றுக்கொள்ள வேண்டியவற்றைப் புரிந்துகொண்டு அதில் தன்னை ஈடுபடுத்தாவிட்டால், அத்தகைய கல்வி ஒரு செரிக்காத உணவே ஆகும். செரிக்காத உணவு, வயிற்றை அசுத்தப்படுத்தும். அதுபோல் புரியாத சங்கதி மனதினை அசுத்தப்படுத்தும். செரித்த உணவே உடலுக்குப் பலம்; புரிந்து படிப்பதே உள்ளத்திற்குப் பலம். 
மனிதனுக்கு அழகு கல்வி. மனிதனைப் புனிதப்படுத்துவதும் கல்வியே. ஒரு சிறிய விதைக்குள்ளே மாபெரும் ஆலமரம் படிவமாய் படிந்திருப்பதுபோல், மனிதன் பிறக்கின்றபோது ஒரு ஞானியாகத்தான் பிறக்கின்றான். அவனுக்குள் தெய்வீகமும், எண்ணிலடங்கா ஆற்றலும் விதையைப்போல் படிந்திருக்கிறது. அதை அழகாய், அற்புதமாய் மனிதத்தின் உன்னதமாய் வெளிப்படுத்துவதுதான் கல்வியாகும். 
உண்மையான கல்வி, தேர்வென்றதும் பயத்திற்கு மாறாக தைரியத்தைத் தரும். புதியன செய்வதற்கு தயக்கத்திற்கு மாறாக தன்னம்பிக்கையைத் தரும். எத்தகைய சூழ்நிலையிலும் ஒழுக்கத்தினின்று இம்மியும் விலகாத மன உறுதியைத் தரும். ஏழைகளுக்கும், நலிவடைந்தவர்களுக்கும் உதவ வேண்டுமென்கின்ற உயர்ந்த நோக்கத்தைத் தரும். 
"உண்மையான கல்வி ஒருவனின் ஏழு ஜென்மத்திற்கும் துணை நிற்கும்' என்கிறது வள்ளுவம். எனவே, நன்கு கற்ற கல்வி அழியாது. அது ஆக்கப்பூர்வமானது. 
ஒருநாள் ஒரு துறவியும் அவரது சீடரும் காட்டிற்குள் நடந்து சென்றனர். அப்பொழுது ஒரு தேன் கூட்டிலிருந்து தேனை ஒருவன் எடுத்துக்கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் சீடர், "சுவாமி தனது கடின உழைப்பால் தேனீக்கள் தேனைச் சேகரிப்பதை மனிதன் திருடிவிடுகிறான். அதற்காக அவை மிகவும் வருத்தப்படுமல்லவா?' என்றார். அதற்கு துறவி, "கண்டிப்பாக அவை வருத்தமடையா. ஏனென்றால் மனிதர்களால் அந்த தேனை மட்டும்தான் திருடமுடியுமே தவிர அந்தத் தேனை உருவாக்கும் திறமையை எப்போதும் திருடவே முடியாது' என்றார். தேன் என்பது தேனீக்களின் உழைப்பு, தேனை உருவாக்குவது அதன் திறமை. உழைப்பைத் திருட முடியும். ஆனால், திறமையைத் திருட முடியாது என்பதே உண்மை. 
நன்கு கற்ற கல்வி ஒரு மனிதனின் திறமையாக மாறும். பின்னர் அதுவே கலையாகவும் மாறிவிடும். அதனை பிறருக்குக் கற்றுத் தருவதன் மூலம் அது வளர்வதோடு, ஒரு மனிதனின் அறிவையும் பலப்படுத்தும். 
புத்தகம் என்பது ஓர் ஏர். அதனைக் கொண்டு மனதினை உழுதால் அற்புதமானதொரு வாழ்க்கை வண்ணங்களாய் மலரும். வெறுமனே வாசித்து பார்த்தால் வார்த்தையின் அர்த்தங்கள் புரியும். அதனை நேசித்துப் படித்தால் வாழ்வின் அர்த்தங்கள் தெரியும். வாசிக்கும்போது செய்திகள் புரியும். தொடர்ந்து அதனை நேசிக்கும் போது சிந்தனை வெளிப்படும். புத்தகத்தை வாசிப்பது படிப்பு. அதிலிருந்து வெளிப்படும் சிந்தனையே கல்வி. 
புத்தகத்தில் மட்டும் இருப்பதல்ல கல்வி; இயற்கையின், சூட்சுமங்களை அறிந்து கொள்வதுதான் கல்வி. நியூட்டனுக்கு ஆப்பிளைப் போல, கலிலியோவுக்கும் சற்று உற்று நோக்கியபோது மட்டுமே புதியன பிறந்தன. இத்தாலி நாட்டிலிருந்த பைசாநகரத்து உயர்ந்த கோபுரங்களில், உயர்ந்து நின்ற தேவாலயங்களில் தன் மனதைப் பறிகொடுத்து அமர்ந்திருந்தார் கலிலியோ. இருள் படிந்த இரவுகளில் ஆகாயத்திலிருந்து இறங்கி வந்த நட்சத்திரங்களைப் போல், தேவாலயங்கள் எங்கும் விளக்குகள். ஒரு சராசரியான வேகத்தில் காற்று வீச, தொங்கவிடப்பட்டிருந்த விளக்குகளும், ஜன்னல் ஓரத்தில் சிறிய கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த விளக்குகளும் காற்றின் திசைநோக்கிப் பயணித்தன. பின்னர் மீண்டும், அதன் மையப்பகுதியை நோக்கி வந்தன.
அந்த விளக்குகள் முற்றும் கற்றுத் தேர்ந்த ஒரு பரத நாட்டியமாடும் பெண்ணைப் போல், அழகாய் அசைந்தன. அதே கலையைக் கற்றுக் கொள்கின்ற குட்டி குழந்தைபோல் ஜன்னல் ஓரத்தில் கட்டி தொங்கிய விளக்குகளும் அதேபோல் சிறிதாய் அசைந்தன. நாட்டியம் கற்றுத் தேர்ந்த பெண்மணியின் கைகள் நீண்ட தூரம் சென்று வருவதைப் போல், அதே நேரத்திற்குள் அருகிலேயே சென்றுவரும் குழந்தையின் கைகள்போலும் அனைத்து விளக்குகளும் ஒரே கால அளவுக்குள் அசைவதைக் கண்டார். வேறுபட்ட இரண்டு நீளமுள்ள பெண்டுலங்கள் மையப்பகுதியிலிருந்து ஒரு முனை சென்று மறுமுனையை அடைந்து, மீண்டும் மையத்தை அடைவதற்கு, ஒரே கால அளவை எடுத்துக்கொள்கின்றன என "பெண்டுல விதி'யினைக் கண்டுபிடித்தார். விளக்கின் ஒளி கலிலியோவின் அறிவின் ஒளியை உலகிற்கு எடுத்துரைக்கிறது.
கல்வி ஒரு சாதாரண மனிதனை மகானாக்கும். ஒரு ஜென் துறவி ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அவர் ஒவ்வொரு நாளும் தனது வீட்டைவிட்டு கிளம்பும்பொழுது வீட்டின் கதவைப் பூட்டுவதில்லை. ஆனால், வீட்டிற்குள்ளே வந்ததும் உடனே உட்புறம் தாழிட்டுக் கொள்வார். அவரைக் காண எவராவது வந்தால் மட்டுமே கதவைத் திறப்பார். அவரிடம் ஒரு சீடர், "சுவாமி... தாங்கள் ஏன் வீட்டிற்குள் இருக்கின்றபொழுது கதவை பூட்டிக்கொள்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு அந்த ஜென் துறவி, "உன் வீட்டில் விலையுயர்ந்த பொருட்களை எப்படி பாதுகாப்பாய்?' என்று பதில் கேள்வி கேட்டார். அதற்கு சீடர், "சுவாமி விலையுயர்ந்த பொருட்களை நாங்கள் அலமாரியில் வைத்து, பத்திரமாக பூட்டி வைத்துக்கொள்வோம்' என்றார். அதைக் கேட்டதும் புன்முறுவலோடு, "இந்த உலகிலேயே விலை மதிக்கமுடியாதது கல்வி. சிறந்த கல்வி பெற்ற நாமும் விலை மதிக்கமுடியாதவர்களே. ஆகையால், நம்மை மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பது நமது முக்கிய கடமை. அதனால்தான், நான் வீட்டிலிருக்கும்பொழுது கதவைத் தாழிட்டு கொள்கிறேன்' என்றார். கல்வியால் உயர்ந்தவர்களே இந்த உலகில் விலை மதிக்கமுடியாத பொக்கிஷங்கள். 
வார்த்தைகளைப் புரிய வைப்பது படிப்பு;
வாழ்க்கையைப் புரிய வைப்பதே கல்வி!
(தொடரும்)
கட்டுரையாசிரியர்:
காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com