சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 48- தா.நெடுஞ்செழியன்

மாணவர்களை இன்று நாம் மதிப்பெண்களை வாங்கும் இயந்திரங்களாகவே உருவாக்கியிருக்கிறோம்
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 48- தா.நெடுஞ்செழியன்

மாணவர்களை இன்று நாம் மதிப்பெண்களை வாங்கும் இயந்திரங்களாகவே உருவாக்கியிருக்கிறோம். மதிப்பெண்களைத் தாண்டி ஓர் உலகம் உள்ளது; குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் கூட, வாழ்க்கையில் சாதிக்கக் கூடிய திறமையை இன்றைய கல்விச்சூழல் மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தருவதில்லை. குறைந்த மதிப்பெண்கள் எடுத்து வாழ்க்கையில் சாதித்தவர்கள் இருக்கிறார்கள். இதற்கு நல்ல உதாரணமாக, நாமக்கல்லில் படித்த நிஷாந்த் பிரபாகரன் என்ற மாணவரைச் சொல்லலாம். பிளஸ் டூ தேர்வில் 59 சதவீதம் மதிப்பெண்கள் வாங்கியிருந்தார் அவர். அவருடைய பெற்றோர் எங்களை அணுகியபோது, நிஷாந்த் படித்த பள்ளியில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் அதிக மதிப்பெண்கள் வாங்குவதை மட்டும் மாணவர்களின் குறிக்கோள் என அந்த பள்ளி வழிநடத்தியிருப்பது தெரிய வந்தது. மாணவர்களின் தனித்திறமைகளைப் பற்றி அந்தப் பள்ளி கவலைப்படுவதில்லை . நிஷாந்தும் பெற்றோரும் எங்களை அணுகியபோது, நிஷாந்த் தான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை நன்றாக ஓவியம் வரைந்ததாக எங்களிடம் சொன்னார். 
அது எங்களுக்குத் தெரிய வந்ததும், நாங்கள் அவரை அகில இந்திய அளவில் நடைபெறும் "டிசைன் என்ட்ரன்ஸ் தேர்வு' எழுதச் சொன்னோம். அவரும் அந்தத் தேர்வை எழுதினார். அதனால் அவருக்கு - பரோடாவில் உள்ள எம்எஸ் யுனிவர்சிட்டியில் பிடெக் "பேச்சலர் ஆஃப் டிசைன்' படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கு படிக்கும்போது அந்தத் துறையின் மீதுள்ள ஆர்வத்தினால் அவர், அத்துறைசார்ந்த ஆலோசனைகளை ஊடகத் தொழிற்துறைக்கு வழங்கி, நிறையப் பணம் சம்பாதித்தார். படிக்கும்போதே உயர்கல்விக்கான திட்டமிடலையும் சிறப்பாகச் செய்தார். உலகிலேயே நம்பர் ஒன் என்று கருதப்படும் நியூயார்க் ஃபிலிம் அகாடமியில் அவருக்கு எம்எஃப்ஏ மாஸ்டர் இன் பைன் ஆர்ட்ஸ் இன் சினிமாட்டோகிராபி என்ற உயர் கல்விக்கான இடம் கிடைத்தது. தற்போது அமெரிக்காவில் லாஸ்ஏஞ்செல்சில் படித்து வருகிறார். எண்ணற்ற ஆஸ்கார் விருதுகளை வாங்கிய திரைப்படக் கலைஞர்களை உருவாக்கிய கல்வி நிறுவனம் இது. 
பிளஸ் டூவில் மதிப்பெண்கள் குறைவாக வாங்கினாலும், நிஷாந்த் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக, தான் தேர்ந்தெடுத்ததுறையின் மீதான அபரிமிதமான நம்பிக்கையின் காரணமாக, அவருடைய தனிப்பட்ட முயற்சியின் விளைவாக - தான் முன்னேற வேண்டும் என்ற அவருடைய அளவற்ற ஆர்வம் காரணமாக - அவர் உலகின் மிகச் சிறந்த கல்விநிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. வேலை கிடைக்கும் என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் அவர் தனது தனித்திறமையைப் பற்றிக் கவலைப்படாமல், எதிர்காலத்தில் இந்தத் துறைக்கு நல்ல வாய்ப்புண்டு என்று கருதி வேறொரு துறையைத் தேர்ந்தெடுத்திருந்தால், அவருக்குள் இதுபோன்ற திறமை உள்ளது என்று அவருக்கும் தெரியாமல் போயிருக்கும். பிறருக்கும் தெரியாமல் போயிருக்கும். அவருடைய திறமைகள் வீணடிக்கப்பட்டிருக்கும். 
ஆனால் எண்ணற்ற மாணவர்களின் திறமைகள் வீணடிக்கப்படுவது என்பது நம்நாட்டில் சாதாரணமாகிவிட்டது. எனவே வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையைத் தாண்டி சிந்திக்கக் கூடிய மாணவர்களின் எதிர்காலமே சிறப்பாக அமைகிறது என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. 
மூன்றாவதாக தனக்கு ஆர்வமுள்ள துறை என்று ஒருவர் தேர்ந்தெடுப்பதிலும் கூட தவறுகள் உண்டு. ஏனென்றால், ஒருவருக்கு முன்னால் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது அவருக்கு முழுமையாகத் தெரியாது. அவர் அறிந்த சில துறைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு அதில் ஏதேனும் ஒன்றில் ஆர்வமிருப்பதாகக் கூறுவது, சரியில்லாத ஒன்றாகும். ஒரு மாணவனின் ஆர்வம் என்பதை ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் தன்னுடைய ஆற்றலை முழுமையாக அதில் ஒருமுகப்படுத்தி, அந்தத் துறையில் தனது வாழ்நாளின் தொடக்கக் காலத்தில் பெரும்பான்மையான நேரத்தைச் செலவிட்டு, இன்னும் சொல்லப்போனால், 20 வயதுள்ளாகவே ஏதேனும் சாதனை செய்யும்போது மட்டுமே, உண்மையில் அது அவருடைய ஆர்வமான துறை என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியும். இதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும். சச்சின் டெண்டுல்கர், விஸ்வநாதன் ஆனந்த், சாய்னா நெய்வால் போன்ற எண்ணற்ற இளம் சாதனையாளர்களை உதாரணமாகச் சொல்ல முடியும். அவர்கள் 15 வயதிற்குள்ளாகவே உலகின் சிறந்த சாதனையாளர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதன் உத்வேகத்தினால் என்றும் மேன்மேலும் உயரும் நிலையை அடைகிறார்கள். இதுதான் உண்மையான ஆர்வம் ஆகும். 
நம் மாணவர்களில் பலர் 17 வயதில் இது என்னுடைய ஆர்வம் என்று கூறும்போது, ஆர்வம் என்று அவர்கள் சொல்லக் கூடிய துறையைப் பற்றியே கூட ஓர் ஆர்வமான தேடல் இல்லாமல் அவர்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்தத் துறையின் வளர்ச்சியைப் பற்றியோ அந்தத் துறையைச் சொல்லித் தரும் சிறந்த கல்வி நிறுவனங்களைப் பற்றியோ போதிய தகவல்களை அவர்கள் தெரிந்து கொள்ளாமலேயே அந்தத் துறையில் ஆர்வம் இருப்பதாகக் கூறுகிறார்கள். அந்தத் துறையைப் பற்றிய 360 டிகிரி முழுமையான தகவல்களைப் பெற்றிருந்து, அதன் பிறகு, அதை ஆர்வமான துறையாக ஒருவர் கருதினால் மட்டுமே நாம் அதனை ஆர்வம் என்று கூற முடியும். இப்படி ஆராயாமல் ஒன்றில் ஆர்வம் இருப்பதாகக் கூறுபவர்கள், அடுத்து வேறு சிலதுறைகளைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே அவற்றில் ஆர்வம் இருப்பதாகக் கூறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. 
இன்றைக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் பேரளவிலான வளர்ச்சி உள்ளது. ஒரு தகவல் சரியான தருணத்தில் ஒருவருக்குக் கிடைக்கவில்லை என்றால் அது டெட் இன்ஃபர்மேஷன் ஆகும். உதாரணமாக ஒருவர் பிளஸ் டூவில் தமிழகத்தில் முதல் மதிப்பெண்கள் எடுத்திருந்தால், அந்த தகவல் ரிசல்ட் வரும் நாளன்று எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டும். மறுநாள் அத்தகவல் தெரிய வந்தால் அந்தத் தகவலுக்கு மதிப்பில்லாமல் போய்விடும். ஒரு தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாளுக்குப் பிறகு அதைப் பற்றிய தகவல் நமக்குக் கிடைத்தால் அந்தத் தகவலால் எந்தப் பயனும் இல்லை. இதேபோன்று சிறந்த உயர்கல்வி பற்றிய தகவல்கள், வேறு உயர்கல்வியில் சேர்வதற்கு முன்பு ஒரு மாணவருக்குக் கிடைக்கவில்லை என்றால், அவற்றால் எந்தப் பயனும் இல்லை. எனவே சிறந்த உயர்கல்வி குறித்த ஆழமான தேடல் அவசியம். தகவல்களைச் சேகரிப்பது நமது வாழ்வின் இன்றியமையாத தேவை. 
இந்தத் தேடலை பள்ளிப் பருவத்தில் இருந்தே வளர்த்துக் கொண்டோமானால், இந்த ஆழமான தேடலின் வாயிலாக, வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். 
நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு மாணவர் கிராமத்தில் அல்லது சிறுநகரத்தில் படித்துக் கொண்டிருப்பார். அந்த மாணவர் பள்ளிப் படிப்பை முடிக்கும் போது, அந்த மாணவரின் பெற்றோர் அந்தப் பகுதியில் மிக உயர்ந்த கல்வியை யார் படித்திருக்கிறாரோ, அவரின் இல்லத்துக்குத் தேடிச் சென்று, தனது மகன் என்ன படிக்கலாம்? எந்தத்துறையைத் தேர்ந்தெடுக்கலாம்? பிற வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன? என்பதையெல்லாம் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். ஆனால் அப்படிக் கிடைத்த பல தகவல்கள் அந்த மாணவருக்குச் சரியானதா? அது அந்த மாணவரின் திறமைக்கு ஏற்புடையதா? அது அந்த மாணவருக்கு எவ்வாறு உதவும் என்ற விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கை முன்னேறுவதற்குப் பதிலாக தலைகீழாக மாறியிருக்கிறது. 
ஆனால், இதில் குறிப்பிடத்தக்க ஒன்று அன்றைய பெற்றோரிடம் ஒரு தேடல் இருந்தது என்பதுதான். ஆனால் இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இந்தத் தேடல் குறைந்துவிட்டது. ஆன்லைன் மூலமாக கணினியின் முன் நின்று தேடுவதில் நேரத்தைச் செலவழிக்கிறோம். அந்நாளில் உயர் கல்வி கற்றவர்கள் கொடுத்த தகவல்கள், எண்ணற்றவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைத்ததோ, அதுபோலவே இப்போதைய ஆன்லைன் தகவல்களும் மாற்றி அமைத்துவிடுகின்றன.
ஆனால் ஆன்லைனில் முறையான, சரியான தகவல்கள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஆன்லைனின் தகவல் தொழில்நுட்பப் பரிமாற்ற வளர்ச்சி என்பது ஒரு தனிமனிதரின் தனிப்பட்ட தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது. ஒரு தனிமனிதனுக்குத் தேவையான பொருத்தமான தகவல்கள் ஆன்லைனில் கிடைக்கும் என்றும் கூற முடியாது. எனவே தேடலைப் பொறுத்தவரை பள்ளிகளும் பெற்றோரும் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு எவை தேவைப்படும் என்பதை உணர்ந்து அவர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளைக் காண்பிக்க வேண்டும். அப்போது மட்டுமே நாம் நிஷாந்த் போன்ற நிறைய மாணவர்களை உருவாக்கி உலக அளவில் வெற்றி பெறச் செய்ய முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com