அறிவியல் முறை வகுத்த பெரியார்...அரிஸ்டாட்டில்! - மு.கலியபெருமாள்

"மனதில் உறுதி வேண்டும்; வாக்கினிலே இனிமை வேண்டும்' வாக்கினிலே இனிமை இருந்திருக்கிறதோ இல்லையோ, ஆனால் மனத்திலே உறுதி இருந்திருக்கிறது.
அறிவியல் முறை வகுத்த பெரியார்...அரிஸ்டாட்டில்! - மு.கலியபெருமாள்

"மனதில் உறுதி வேண்டும்; வாக்கினிலே இனிமை வேண்டும்' வாக்கினிலே இனிமை இருந்திருக்கிறதோ இல்லையோ, ஆனால் மனத்திலே உறுதி இருந்திருக்கிறது. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றிச் சிறிதளவேனும் கவலை இல்லை. சரியோ, தப்போ, நன்மையோ தீமையோ, பொருள் பொதிந்தததோ பொருளற்றதோ, உண்மையிருக்கிறதோ, உண்மை இல்லையோ, பாராட்டுவதற்கு உரியதோ, பாராட்டத் தகுதியற்றதோ - எதைப் பற்றியுமே கவலை இல்லை. தமக்குச் சரி என்று பட்டதா, சரி. இதுதான் உண்மை. அதுதான் முடிந்த முடிபு, அதுதான் சிறந்தது என்று தம்முடைய கருத்துகளைக் கூறும், கருத்துக்களுக்கு அரண் அமைக்கும் நெஞ்சு உரம், மாறாத உறுதி ஒரு சில பெரியார்களிடம் மட்டுமே இருந்திருக்கிறது. அரம் போன்ற கூர்மையான அறிவுடைய அத்தகைய பெரியார்களுள் ஒருவர் 2000 ஆண்டுகளுக்கு முன் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்த கிரேக்க மேதை, கிரேக்க நாட்டினுடய பொற்காலத்தின் இறுதியில் வாழ்ந்து அதன் புகழை மேலும் பரப்பினார் அவர். எந்தப் பொருளை எடுத்தாலும் அதை அறிவியல் முறைப்படி சிந்தித்து, அறிவியல் முறைப்படி பகுத்து ஆராய்ந்து கூறும் அறிவு நலம் பெற்றவர் அவர். தமக்குத் தெரிந்த எண்ணற்ற கருத்துகளை, தமக்கு உண்மை என்று பட்டவைகளை அவர் இந்த உலகுக்கு ஈந்தார். ஆனால் அக்கருத்துகளில் பல உண்மைக்குப் புறம்பாக இருந்ததால் அவருக்குப் பின் வந்த அறிவியலார் அவற்றை ஒதுக்கித் தள்ளினர். ஆனாலும் எந்த ஒரு பொருளை எடுத்துக் கொண்டாலும் அதனை ஒரு ஒழுங்குமுறையில் சிந்தித்துப் பகுத்து, ஆராயும் அறிவியல் முறையை (SCIENTIFIC METHOD) அவர் இந்த உலகில் பரப்பிச் சென்றார். மெய்த்துறை வல்லாராகவும் (PHILOSOPHER), உயிர்நூல் புலவராகவும் (BIOLOGIST), உளவியல் அறிஞராகவும் (PSYCHOLOGIST), சமூகத் தொண்டராகவும் வாழ்ந்த அப் பெரியார்தாம் அரிஸ்டாடில். 

அரிஸ்டாட்டில் கி.மு. 384- இல் கிரேக்க நாட்டிலுள்ள ஸ்டாகிரா(STAGIRA) என்ற நகரத்தில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் நிகோமாகஸ் (NICOMACHUS) என்பது. சிறுவயதில் ஸ்டாகிராவிலேயே தம் வாழ்நாளைக் கழித்து வந்தார் அரிஸ்டாட்டில். அவருடைய தந்தை ஒரு மருத்துவர். தமது 17 - வது வயது வரையில் ஸ்டாகிராவில் வாழ்ந்தார் அரிஸ்டாட்டில். பிறகு மேசெடன் (MACEDON) நாட்டு மன்னனுக்கு மருத்துவராக (PHYSICIAN) இருந்த அவரது தந்தை கி.மு. 367 - இல் இறந்து போகவே, அரிஸ்டாட்டில் தமது 17 - வது வயதில் ஏதென்ஸ் நகர் வந்து சேர்ந்தார். 
தந்தை இறந்ததும் அவருக்குப் பாதுகாவலராக (GUARDIAN) இருந்தவர் அவரைப் படிப்பதற்காக ஏதென்சுக்கு அனுப்பி வைத்தார். ஏதென்ஸ் வந்த அரிஸ்டாட்டில் பிளேட்டோவின் (PLATO)பள்ளியில் சேர்ந்து படித்தார். ஏதென்சுக்கு புறநகர் பகுதியில்தான் பிளேட்டோவின் கல்விக்கழகம் (ACADEMY) இருந்தது. அந்தக் கல்விக்கழகத்தில் அரிஸ்டாட்டில் 20 - ஆண்டுகள் படித்தார். சில நேரங்களில் பிளேட்டோவுக்கு உதவியாளராகவும் இருந்து வந்தார். பிளேட்டோவின் கருத்துகள் அறிவியலுக்கும் உண்மைக்கும் புறம்பாக இருந்தாலும் கணிதத்தைப் பற்றியும், உரையாடலின்போது சொற்களைக் கவனமாகப் பயன்படுத்தும் முறையைப் பற்றியும் அவர் சொல்லியவை அரிஸ்டாட்டிலை அவர் பால் ஈர்த்தன. 
கல்விபயின்று கொண்டு பிளேட்டோவுக்கு உதவியாளராக இருக்கும்போதே அரிஸ்டாட்டில் பிளேட்டோவைப் போல் மெய்த்துறை உரையாடல்கள் (PHILOSOPHICAL DIALOGUES) பல எழுதினார். அவர் எழுதிய உரையாடல்களை அவருடைய காலத்தில் சிறந்தனவாக மக்கள் பாராட்டினர். பிளேட்டோ இறந்த பிறகு அரிஸ்டாட்டிலும் செனோ கிரேடஸ் (XENO KRATES) என்ற மற்றொரு மாணவரும் ஏதென்ஸ் நகரை விட்டு நீங்கினர். ஏஜியன் கடலைக் கடந்து ஆசஸ் (ASSOS) என்ற ஊரை அடைந்தனர். இந்த ஊர் ஆசியா மைனர் கடற்கரையில் பழைய டிராய் (TROY) நகர் இருந்த இடத்திற்கு அருகில் இருந்தது. 
ஆசசுக்குச் சென்று அரிஸ்டாட்டில் தாமாகவே சொற்பொழிவு ஆற்றத் தொடங்கினார். நாளுக்குநாள் அவரது சொற்பொழிவைக் கேட்க மக்கள் திரண்டு வந்தனர். அவர்களில் ஒருவர் ஹெர்மியஸ் (HERMIUS). சாதாரண ஒரு வங்கி எழுத்தராக (BANK - CLERK) இருந்த ஹெர்மியஸ் தம்முடைய ஆற்றலினால் அட்டேர்னியஸ் (ATARNEUS) என்ற நகரத்தை ஆளும் வல்லாட்சியாளராக (DICTATOR) உயர்ந்தார். அரிஸ்டாட்டிலின் அறிவாலும் ஆற்றலாலும் ஈர்க்கப்பட்ட ஹெர்மியஸ் அவரைத் தம் நண்பராக்கிக் கொண்டார். இருவரின் நட்பும் வளர்ந்தது. 
எந்த அளவுக்குத் தெரியுமா? ஹெர்மியசின் வளர்ப்புப் பெண்ணாகிய பிதியசை (PYTHIAS) அரிஸ்டாட்டிலுக்குத் திருமணம் செய்து கொடுக்கிற அளவுக்கு அவர்களது நட்பு மலர்ந்து மணம் பரப்பியது. திருமணம் முடிந்த பிறகு அரிஸ்டாட்டில் தம்துணைவியை அழைத்துக் கொண்டு தேனிலவு காலத்துக்காக (HONEYMOON) லெஸ்பால் (LESPOS) என்ற தீவுக்குச் சென்றார். 
ஆனால் சென்ற இடத்தில் வந்த வேலையை விடுத்துச் சொந்த வேலையில் நாட்டம் செலுத்தினார் அரிஸ்டாட்டில். இன்பப் பொழுது போக்கிற்காக மனைவியை அழைத்து வந்த அவர் அதைவிட்டு, லெஸ்பாஸ் தீவின் கடற்கரையிலும், குளம் குட்டையிலும் கிடந்த எட்டுக்கால் உயிர்களையும் (OCTHPODES) அவை போன்ற கடற்பொருள்களையும் எடுத்து அறுத்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். சமையல் அறையெல்லாம் ஆய்வுக்கூடமாக மாறியது. பாவம்! அந்த அரசிளங்குமரியின் உள்ளம் எப்படி இருந்ததோ? அரிஸ்டாட்டிலின் ஆராய்ச்சி வரலாற்றுச் சிறப்புடைய அறிவுப் பணி என்பதை அந்தப் பெண் அறியவில்லை. 
கி.மு.342- இல் மேசேடன் நாட்டு மன்னனாக இருந்த இரண்டாம் பிலிப் (PHILIP II) தன் மகனாகிய அலெக்சாந்தருக்கு ஓர் ஆசிரியர் வேண்டுமென்று தேடிக் கொண்டிருந்தான். பிலிப்பின் தந்தைக்கு அரிஸ்டாட்டிலின் தந்தை மருத்துவராக இருந்ததாலும், ஹெர்மியசுக்கும் இரண்டாம் பிலிப்புக்கும் நெருங்கிய நட்பு இருந்ததாலும், அரிஸ்டாட்டில் அலெக்சாந்தருக்கு ஆசிரியர் ஆனார். மெசேடனின் தலைநகரான பெல்லா(PELLA)விலிருந்து 20 கல் தொலைவிலிருந்த மைசா (MIEZA) என்ற சிற்றூரில் தங்கினார். அங்குதான் அலெக்சாந்தருக்கும் அவருடைய தோழர்களுக்கும் அரிஸ்டாட்டில் கல்வி கற்பித்து வந்தார். 
ஆனால் அரிஸ்டாட்டில் மேசேடனில் அதிக நாட்கள் இருக்கவில்லை. சுமார் ஏழாண்டுகளே அவர் அங்கு இருந்ததாகத் தெரிகிறது. அதற்குள்ளாக அவருடைய மாமனாராகிய ஹெர்மியசைப் பாரீசுக்காரர்கள் தூக்கிச் சென்று கொன்றுவிட்டனர். அடுத்தாற்போல இரண்டாம் பிலிப் கொல்லப்பட்டு அலெக்சாந்தர் அரியணை ஏறியதும் அரிஸ்டாட்டில் மேசேடனை விட்டு ஏதென்ஸ் நகருக்கு வந்து சேர்ந்தார். அங்கு செனோ கிரேட்டிஸ் பிளேட்டோவின் கல்விக் கழகத்தை ஏற்று நடத்தி வந்தார். ஏதென்ஸ் வந்த பிறகு லிசியம் (LYCCUM) என்ற மற்றொரு கல்விக் கழகத்தை நிறுவினார் அரிஸ்டாட்டில். இந்தக் கழகத்தில் பிளேட்டோவைப் போலவே அரிஸ்டாட்டில் இங்கும் அங்கும் நடந்து கொண்டே பாடம் சொல்லிக் கொடுத்தார்.
பிறகு 13 ஆண்டுகள் வரை அரிஸ்டாட்டில் இங்கு தம் பாடங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டும், நூல்களை எழுதிக் கொண்டும் இருந்தார். அதாவது அரிஸ்டாட்டில் இரண்டாவது முறையாக ஏதென்ஸ் நகருக்கு வந்த பிறகுதான் அவருடைய நூல்களை எழுதத் தொடங்கினார். மிகப் பெரிய உலக எழுத்தாளர்களுள் அவரும் ஒருவரானார். அவர் எழுதிய நூல்கள் கிடைக்கப்பெற்றால் இந்தக் காலத்தில் எழுதப்படும் 100 பெரிய நூல்களைப் போல இருக்கும். ஆனால் அந்த நூல்களில் நமக்கு கிடைத்திருப்பது ஒரு சிறு பகுதியே. அவருடைய மெய்த்துறை உரையாடல்கள் யாவும் அழிந்து போயின. அவர் பல ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்தபோது எழுதிய சிறுநூல்களும் மடிந்து போயின. பிற்காலத்தில் அவர் ஏதென்சில் வாழ்ந்தபோது, அறிவியல், அரசியல் வரலாறு, இலக்கியத் திறனாய்வு பற்றி எழுதியவைகளை எல்லாம் ஒன்று சேர்த்து வைத்தார். இவையெல்லாம் அவ்வப்போது அவர் ஆற்றிய சொற்பொழிவுகளே. இவையெல்லாம் அரிஸ்டாட்டிலைப் பற்றி அறிந்து கொள்ள வழி செய்கின்றன. கிரேக்க அரசியல் அமைப்பைப் பற்றி எழுதிய 15 நூல்களில் ஏதென்சின் அரசியல் அமைப்பைப் (CONSTITUTION OF ATHENS) பற்றி அவர் எழுதிய நூல் ஒன்றே இன்று உயிருடன் இருக்கிறது. 

(அடுத்த இதழில்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com