இணைய வெளியினிலே...(5-11-2019)

வெறும் குழந்தைகளின் உலகத்திலேயே சில நாட்கள் இருந்துவிட வேண்டும். குழந்தைகள் எழுதியவை, அவர்கள் வரைந்தவை, குழந்தைகளின்
இணைய வெளியினிலே...(5-11-2019)

முக நூலிலிருந்து....
ஓடி ஓடி நிழலில் நின்றாலும்...
துரத்திக் கொண்டே 
வந்தது வெயில்.
இனி வெயிலைத் 
துரத்தலாம் என்று
ஓடிப் பார்த்தேன்...
துரத்திக் கொண்டே வந்தது, நிழல்!
நா.வே.அருள்

நான் ஒரு கன்னத்தில்
அறை வாங்கியவனல்ல
என்றறிந்த பின்...
என் மறுகன்னத்தில்
யாருமே அடிக்கவில்லை. 
கவி வளநாடன்

எங்கெங்கு மயங்குகிறோமோ 
அங்கிருந்து நமக்குத் தெளிவு கிடைக்கிறது... 
எதெதற்கு அஞ்சுகிறோமோ 
அதிலிருந்து நமக்குத் துணிவும் பிறக்கிறது.
ஆரூர் தமிழ்நாடன்

இளமையில் வறுமை கொடுமை என்று சொன்னவர்,
ஏன் அது முதுமையில் அதை விடக் கொடியது
என்று சொல்லவில்லை?
வெங்கடேஷ் சக்ரவர்த்தி

உன் உண்மையான அன்பைப் பற்றித் 
தெரியாதவர்களிடம் உன் கோபத்தைக் காட்டாதே...
ஏன் என்றால் அவர்களுக்குத் தெரியாது... 
உன் கோபமும் ஓர் அன்பு தான் என்று. 
திருப்பதி ராஜா

சுட்டுரையிலிருந்து...
சாலையில் சல்லி சல்லியாய்
உடைந்து கிடக்கிறது...
ஏதோ ஒரு மலையின் 
ஆணவம்.
தற்குறி

கற்பனையாகவும் யதார்த்தமாகவும்
உவமையாகவும் புலம்பித் திரிகிறேனே
என்செய்ய ? 
வெறுங் கவிதை தானே நான்? 
விஜி

தேவையான நேரத்தில் காட்டப்படாத அன்பு ,
பின்பு ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வந்தாலும்
அர்த்தம் அற்றது.
அப்பாவி

உங்கள் மனமே
நீங்கள் விரும்பியபடி
இயங்காத போது...
மற்றவர்கள் உங்கள் மனதுக்கு ஏற்ப
இயங்கவில்லை என்று கோபம் கொள்வது
என்ன நியாயம்? 
அன்பு 

வலைதளத்திலிருந்து...
வெறும் குழந்தைகளின் உலகத்திலேயே சில நாட்கள் இருந்துவிட வேண்டும். குழந்தைகள் எழுதியவை, அவர்கள் வரைந்தவை, குழந்தைகளின் விளையாட்டு, அவர்களின் பாடல்கள் என குழந்தைகளுக்குள் குழந்தையாகக் கிடந்து உழன்று கிடக்க வேண்டும். அது சாத்தியமா? 
அவசர உலகின் எல்லா நசநசப்புகளிலிருந்தும் ஏதோ ஒரு கணம் குழந்தைகள் நம்மைக் கைபிடித்து தங்களின் உலகத்துக்குள் இழுத்துச் சென்றுவிடுகிறார்கள். அது ஒற்றைப் புன்னகையாகக் கூட இருக்கலாம் அல்லது அவர்கள் பிய்த்துத் தரும் மிட்டாயின் சிறு துணுக்காக இருக்கலாம். 
அவசரகதியில் அலுவலகம் கிளம்பும் மனிதர் பிஞ்சுக் குழந்தை ஒன்றிடம் "நீ அவ்வளவு அழகா இருக்க...ஒரு கடி கடிச்சுக்கட்டுமா' என்று கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். முரட்டுத்தனமான அம்மனிதர் அந்த ஒற்றைக் கணத்தில் அப்பாவியாகி தனது நாளை புத்தாக்கம் செய்து கொண்டார். அப்படியான தருணங்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அப்படியே வாய்த்தாலும் குழந்தைகளை ரசித்துக் கொண்டிருக்கும் மனநிலை நம்மிடம் இருப்பதில்லை. 
பால் நிற வெள்ளைத்தாள் அல்லவா குழந்தையின் மனம்? அதில் நம் கற்பனைக்கே எட்டாத வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களாகவே எதை எதையோ வரைகிறார்கள். யாருமே புரிந்து கொள்ள முடியாத அந்தச் சித்திரங்கள்தான் உலகின் மிகப்பெரிய பொக்கிஷங்கள். ஆனால் அதை ரசிப்பதற்குத்தான் நம்மில் பலருக்கும் நேரமுமில்லை. மனமுமில்லை. 
http://www.nisaptham.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com