சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 70 

மேலாண்மைக்கென்று 100 வருடங்களுக்கு முன்பு ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் தொடங்கப்பட்டது.
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 70 

மேலாண்மைக்கென்று 100 வருடங்களுக்கு முன்பு ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் தொடங்கப்பட்டது. இது அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் அமைந்துள்ளது. இங்கு வழங்கப்படும் இரண்டாண்டு மேலாண்மைப் படிப்புகள் மாணவர்களின் திறமையை அதிகரிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கும், அவர்கள் சார்ந்துள்ள மேலாண்மைத்துறையின் வளர்ச்சிக்கும் உதவக் கூடிய வகையிலும், அவர்களின் திறமைகள் மேம்படும் வகையிலும் இங்கு கல்வி அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது, உலகில் ஏற்படக் கூடிய மாறுதல்களுக்கேற்ற மேலாண்மை யுக்திகளை உருவாக்கவும் மாணவர்களுக்கு இங்கு கற்றுத் தரப்படுகிறது.
உலகில் பல மாறுதல்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் ஏற்படக்கூடிய நிகழ்வுகளைக் கண்டறிந்து, அவற்றின் சாதக, பாதகங்களை ஆராய்வதற்கு மாணவர்களுக்கு அவர்கள் கற்றுத் தருகிறார்கள். வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும்போது, ஏற்கெனவே நிகழ்ந்த நிகழ்வுகளோடு அவற்றை ஒப்பிட்டு புதிய நிகழ்வுகளை எவ்வாறு கையாள்வது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக, பல்வேறுதுறைகளில் நடக்கக் கூடிய நிகழ்வுகளை CASE STUDY செய்வது இந்த ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் உள்ளது. 
உதாரணமாக Lincoln Electric என்ற 100 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது. வெல்டிங் கருவிகளைத் தயார் செய்யும் இந்த நிறுவனம், தற்போது அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் தங்கள் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்து கிளை பரப்பியிருக்கிறது. உலகில் உள்ள பிற நாடுகளுக்குச் சென்று தங்களுடைய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய அது எப்படித் தகுதிபடுத்திக் கொண்டது; அதற்காக அந்நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகள் எவை? என்பதை இந்த கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் கேஸ் ஸ்டடி செய்திருக்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் தெரிந்து கொண்ட ஓர் உண்மை என்னவென்றால், Lincoln Electric நிறுவனத்தினர், உலகெங்கும் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்கிறவர்களுக்கு அவர்களின் வேலையின் அடிப்படையில் ஊக்கத்தொகை கொடுத்திருக்கிறார்கள். வேலை செய்பவர்கள் இதனால் கடுமையாக உழைத்து அந்நிறுவனத்தின் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்தியிருக்கிறார்கள். இந்த முறையில் அவர்கள் உலகம் முழுவதும் எளிதாக அவர்கள் உற்பத்திப் பொருளைக் கொண்டு செல்ல முடிந்திருக்கிறது. 
இந்த கேஸ் ஸ்டடி மூலம் இந்த கல்வி நிறுவனத்தில் பயின்ற மாணவர்கள், மக்களை எவ்வாறு ஊக்குவிப்பது, மக்களின் மனநிலையை எவ்வாறு புரிந்து கொள்வது, ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாடு எந்தெந்த வகையில் எல்லாம் வேறுபடுகிறது? என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. மேலும் ஒவ்வொரு நாட்டிலும் மேலாண்மையை எப்படி நடத்திச் செல்ல வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. இந்த கேஸ் ஸ்டடி மூலம் மேலாண்மையை உலக அளவுக்கு ஏற்புடையதாக மாற்றியமைப்பதற்கான வழிமுறைகளையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள முடிந்தது. உள்ளூர் போட்டிகளை எதிர்கொள்வது, அவற்றின் தொழில், நிர்வாகம் சார்ந்த கட்டமைப்புகளை ஆராய்வது, அந்தந்த நாடுகளுக்கு ஏற்றவாறு பொருட்களை உற்பத்தி மற்றும் விநியோகம் செய்வதற்கான மேலாண்மை யுக்திகளைக் கையாள்வது என மேலாண்மை சார்ந்த புரிதல்களை மாணவர்கள் பெற முடிந்திருக்கிறது. 
இதில் அவர்கள் கற்றுக் கொள்ளக் கூடியவையாக, மேம்படுத்தக் கூடியவையாக, கையகப் படுத்துதல், பணியாளர் உறவு, மறுகட்டமைப்பு செய்தல் (RESTRUCTURE), உலகமயமாக்கல், சர்வதேச வணிகம், சர்வதேச நடவடிக்கைகள், இழப்பீடு தருதல், ஊக்கத்தொகை, மார்க்கெட் என்ட்ரி, போட்டிக்கான சூழல், விரிவாக்கம், உற்பத்தி, பன்னாட்டு நிறுவனங்களின் உறவுகள், மாற்றம், நடைமுறைப்படுத்துவதற்கான செயல்தந்திரம் ஆகியவை இருந்திருக்கின்றன. இந்த கேஸ் ஸ்டடி 1998 - இல் வெளியிடப்பட்டது.
இதேபோன்று Philips versus Matsushita என்ற கேஸ் ஸ்டடியை இந்த கல்விநிறுவனத்தின் மாணவர்கள் செய்தார்கள். உலக அளவில் Philips மற்றும் Matsushita என்ற இரு நிறுவனங்களுக்கிடையே நிகழ்ந்த தொழில் போட்டிதான் இந்த கேஸ் ஸடடியின் மையப்புள்ளி. இந்த நிறுவனங்கள் தங்களுடைய சந்தையை மேம்படுத்த செய்த வணிகத் தந்திரங்களை ஆய்வு செய்து ஒரு மூன்றாம் நபருடைய பார்வையில் மேலாண்மை சார்ந்த தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டன. இதுபோன்று பல்லாயிரக்கணக்கான கேஸ் ஸ்டடிகளை இந்த ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் உலகம் முழுவதும் செய்திருக்கிறது. 
இந்த கல்விநிறுவனம் செய்த வித்தியாசமான கேஸ் ஸ்டடிகளில் ஒன்று, சீமென்ஸ் (Siemens) நிறுவனத்தில் உள்ள ஊழலை எவ்வாறு ஒழிப்பது என்ற கேஸ் ஸ்டடி ஆகும். 2012 -ஆம் ஆண்டு இந்த கேஸ் ஸ்டடியை இவர்கள் செய்தார்கள். 
2008 - ஆம் ஆண்டு லெனோவா என்ற நிறுவனம் உலக அளவில் எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பதைப் பற்றிய கேஸ் ஸ்டடி செய்தார்கள். 2007 ஆம் ஆண்டு விக்கி பீடியாவைப் பற்றி ஒரு கேஸ் ஸ்டடி செய்தார்கள். இவர்கள் செய்த கேஸ் ஸ்டடிகளை எல்லாம் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். 
மேலாண்மைத்துறை சார்ந்த வீடியோக்களை இவர்கள் தயாரித்து உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் மாணவர்கள் பார்க்கக் கூடிய வசதியைச் செய்து தந்திருக்கிறார்கள். இதன் மூலம் உலகின் எந்த மூலையில் ஒருமாணவர் இருந்தாலும், பிற நாடுகளின் மேலாண்மை சார்ந்த சிறந்த நடைமுறைகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர் வாழும் பகுதியின் சூழலுக்கு ஏற்றவாறு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவையும் இந்த வீடியோக்கள் மூலம் அவர் பெற முடியும். நமது மாணவர்கள் ஒரு சாதாரண கல்லூரியில் மேலாண்மையை எங்கோ ஒரு கிராமத்தில் படித்து வந்தாலும், இணையத்தின் வாயிலாக கிடைக்கக் கூடிய தகவல்களை நன்கு ஆராய்ந்து, உலக அளவில் பல்வேறு நிறுவனங்களின் மேலாண்மை நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ள முடியும். 
அவ்வாறு தெரிந்து கொண்ட மாணவர்கள், நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போது இது குறித்த தங்களுடைய அறிவை வெளிப்படுத்த முடியும். உலக அளவில் வளர்ச்சியடைந்துள்ள மேலாண்மைத்துறை சார்ந்த அறிவைப் பெறுவதில் ஆர்வமுள்ள மாணவர்கள், தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுவார்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கக் கூடும்.
எனவே எண்ணற்ற தகவல்கள் அடங்கியுள்ள வீடியோக்களை இலவசமாகவும், குறைந்தபட்சம் 3 -6 டாலர்கள் வரை கட்டணமாகவும் பெற்றுக் கொண்டு இந்த ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் அளித்திருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் இதில் மேலாண்மைத்துறை ஆசிரியர்களுக்கும் பயன்படும் தகவல்களும் தரப்பட்டுள்ளன. 
இந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம்தான் இந்தியாவில் ஐஐஎம் தொடங்குவதற்கு அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்தது. இதேபோன்று தற்போது ஐஐஎம் அகமதாபாத், மற்றும் பிற ஐஐஎம் களிலும் எண்ணற்ற கேஸ் ஸ்டடிகள் செய்யப்பட்டு அவை இணையத்தில் அளிக்கப்பட்டு வருகின்றன. 
மாணவர்கள் தாங்கள் எந்தத் துறையினில் மேலாண்மையை சிறப்புப் பிரிவாக எடுத்து படிக்க விரும்புகிறார்களோ, அதைத் தேர்வு செய்ய இந்த இணையதளங்களில் உள்ள கேஸ் ஸ்டடிகள் உதவுகின்றன. 
உதாரணமாக சில்லறை வணிகம் என்ற வணிகப் பிரிவைப் பற்றி கேஸ் ஸ்டடி செய்ய ஒரு மாணவர் விரும்புகிறார் என்றால், அவர் அந்தப் பிரிவில் ஏற்பட்டுள்ள நிறைய மாறுதல்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, பொருட்களை வாங்குவோர் கடைகளுக்கு நேரடியாகச் சென்று வாங்க வேண்டும். கடையில் உள்ள ஒருவர் வாங்குபவருக்கு ஒவ்வொரு பொருட்களையும் எடுத்துக் காட்டி, அதைப் பற்றி விளக்கிச் சொல்வார். 
15 ஆண்டுகளுக்கு முன்பு பொருள்களை மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் வந்தன. பொருட்களை வாங்குபவர்களே அவற்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் தரப்படுகிறது. 
இப்போது ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்கும் முறை வந்துவிட்டது. சில்லறை வணிகத்தில் ஏற்பட்ட இப்படிப்பட்ட மாறுதல்களை கேஸ் ஸ்டடி செய்தால், இந்த மாற்றங்கள் எவ்வாறு நிகழ்ந்தன, எதிர்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழலாம், அதற்கான சூழல் எவ்வாறு அமையும் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த கேஸ் ஸ்டடியை ஒரு மாணவர் வேலைக்கான நேர்காணலின் போது எடுத்துச் சென்றால், அந்த மாணவரின் தனிப்பட்ட ஆர்வத்தை எந்த ஒரு நிறுவனமும் நிச்சயம் வரவேற்கும்.
இதுபோன்ற முன்முயற்சிகளை மாணவர்கள் உருவாக்குவதற்கான வாய்ப்புகளை உலகப் புகழ்பெற்ற சில கல்விநிறுவனங்களே தருகின்றன. 
இப்போது நமது நாட்டிலும் எண்ணற்ற தனியார் மேலாண்மைக் கல்விநிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை உலக அளவில் மேலாண்மைக் கல்வி எந்த அளவுக்கு வழங்கப்படுகின்றன என்ற புரிதல் எதுவும் இல்லாமல், மேலாண்மைக் கல்வியை வழங்கி வருகின்றன. இது மிகவும் வருந்தத் தக்கது. 
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: 
சமூக கல்வி ஆர்வலர்
ஜ்ஜ்ஜ்.ண்ய்க்ண்ஹஸ்ரீர்ப்ப்ங்ஞ்ங்ச்ண்ய்க்ங்ழ்.ர்ழ்ஞ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com