வெற்றிக்கு வழி!

"சுய ஆய்வு, வேகமாக முடிவு எடுத்தல், இலக்கில் தெளிவு, செயல்பாடுகளைக் குறிப்பெடுப்பது, திட்டங்களைத் தயாரிப்பது இவற்றையெல்லாம் சீராகக் கடைபிடித்து நானும் வருகின்ற தேர்வுகளில் வெற்றி பெறுவேன் சார்'
வெற்றிக்கு வழி!

செயலற்றதற்கான விலை என்பது தவறு செய்தலின் விலையை விட மிகவும் அதிகம்.
- மீஸ்டர் எக்ஹார்ட்
"சுய ஆய்வு, வேகமாக முடிவு எடுத்தல், இலக்கில் தெளிவு, செயல்பாடுகளைக் குறிப்பெடுப்பது, திட்டங்களைத் தயாரிப்பது இவற்றையெல்லாம் சீராகக் கடைபிடித்து நானும் வருகின்ற தேர்வுகளில் வெற்றி பெறுவேன் சார்'' - இப்படி ஒரு உறுதிமொழி எடுப்பதுபோன்ற தொனியில் மாணவி ஒருவர் என்னிடம் வெற்றிப் பிரகடனம் செய்தார்.
விஷயம் இதுதான்: போட்டித் தேர்வுகளில் தொடர் தோல்விகளைச் சந்தித்த அந்த மாணவி, அவ்வப்போது இசை, இயற்கை, யோகா, தியானம், வாசிப்பு என்றெல்லாம் ஈடுபடுத்திக் கொண்டு தன்னைத் தானே உற்சாகப் படுத்திக்கொள்வார். அப்படிப்பட்டவர் கடைசியாக வாசித்த புத்தகம்: மேகன் மெக்கார்டல் (Megan McArdle) எழுதிய "தி அப்சைடு ஆப் டவுன்; வை பெயிலிங் வெல் இஸ் தி கீ டு சக்சஸ்" (The Up side of Down: Why Failing Well Is the Key to Success). " இந்தப் புத்தகத்தை வாசித்த மாணவி ஒருவர் "போட்டித்தேர்வில் வெற்றிபெறுவேன்' என்று உறுதிபட பேசினாளா? என்று விவரம் தெரிந்தவர்கள் சந்தேகிப்பதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஏனென்றால், இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க வணிகம், வியாபாரம், சினிமா ஆகிய துறைகளின் தோல்விகளை அலசி ஆராய்ந்து, அதன் மூலம் கிடைக்கும் படிப்பினைகளின் அடிப்படையில் வெற்றியடைவதற்கான வழிமுறைகளை சொல்லும் நூல்.
"அனுபவம் மூலமே சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். அனுபவத்தை மோசமான முடிவுகள் மூலமே பெற முடியும்' என்கிற அனுபவ மொழிகளுக்கேற்ப நம் மாணவி அவளது கடந்தகால முடிவுகளால் அடைந்த தோல்விகளைப் பாடங்களாக மாற்றிக் கொண்டு பயணிக்கத் தொடங்கியதன் காரணமாகவே இந்த வாசிப்பும், வாசிப்பிற்குப் பிந்தைய இந்த நம்பிக்கையான உரையாடலும். 
ஒருவருடைய தவறுகளில் ஒருவர் உணர்வுப்பூர்வமாக ஒன்றிப் போய்விடுவது மோசமான மனித வழக்கமாக இருந்தாலும் நம் மாணவி மாறுபட்டு அதிலிருந்து விடுபட, வெளியேற முயற்சிக்கிறார். நிலைமை சரியில்லாத போது எல்லாம் நன்றாக இருப்பதாக நினைத்துக் கொள்வதற்கு, "சகஜநிலை சார்பு' என்று உளவியல் கோட்பாடு ஒன்று விளக்கமளிக்கிறது. இந்த "சகஜநிலை சார்பு' வலையத்திற்குள்ளும் நம் மாணவி அகப்பட்டுக்கொள்ளவில்லை என்பது கூடுதல் சிறப்பு.
மாணவியின் இந்த உத்வேக, எழுச்சி மன மாற்றத்தின், தாக்கத்தின் விளைவாகத்தான் அவர் வாசித்த வணிக, வியாபார யுக்திகளை வரையறுக்கின்ற புத்தகத்தின் கருத்துக்களை, வழிமுறைகளை அவரது அரசுப்பணி தேர்வுகளை வென்றெடுப்பதற்கான ஆயுதமாக, கருவியாக அவரால் மாற்ற முடிகிறது. 
வணிகம், வியாபாரம், சினிமான்னு... வார்த்தைகள் இருந்த இடத்தில் எல்லாம், பெரும்பாலும் தேர்வு, வாழ்க்கைன்னு பொருத்தி, "மொத்த புத்தகத்தையும் நான் படிச்சு முடிச்சேன்... சார்! இந்த அணுகுமுறை என் படிப்பிற்கும், தேர்வு தயாரிப்பிற்கும் எல்லாவிதத்திலும் இந்தப் புத்தகத்தை பயனுள்ளதா மாத்திடுச்சு சார்!'' என்று பிரகாசமான வார்த்தைகள் மற்றும் முகத்தோடு பேசிய அந்த மாணவி, சுற்றியுள்ள அனைவரையும் அவளது உற்சாக வளையத்திற்குள் ஈர்த்துக் கொண்டார்.
சூரியன் உதயமாவதற்கு முந்தைய விழிப்பு, குளிப்பு, தியானம், யோகா அல்லது உடற்பயிற்சி என்று தொடங்கிய அவரது ஒவ்வொரு நாளும் பொது அறிவு, மொழி அறிவு, சமீபத்திய நிகழ்வுகள், வாய்ப்பாடு, கணக்கு, அறிவியல், அறிவுத்திறன், தர்க்க அறிவுப் பயிற்சி என்று தொய்வின்றி நடந்தேறியது; நடந்தேறுகிறது. ஒவ்வொரு நாளும் தவறாத திருப்புதல் வழக்கத்தோடு நடக்கும் இந்த மாணவியின் பயிற்சியானது பிசகாத வெற்றியை நோக்கியதே என்பதில் எதிரிக்கும் சந்தேகம் வராது.
தோல்விகளில் அல்லது தொடர் இழப்புகளில் நம்பிக்கையிழக்காது, உற்சாகம் செத்துவிடாது, மனதை மரணிக்கவிடாத பயணம் எல்லாருக்கும் வாய்க்காது. "டிப்ரஷன்' என்னும் ஆழ்மனச் சோர்வு முதுமையில் மட்டும் வருவதல்ல. "இளமையில் உற்சாகமும் முதுமையில் சோர்வும் வாழ்வின் அமைப்பு' என்கிற விதியை மீறி, இளமையில் உற்சாகத்தை இழக்கப் பழகிவிட்ட யாருக்கும், எந்த வயதிலும் இந்த "டிப்ரஷன்' என்னும் ஆழ்மனச் சோர்வு வரலாம். இதைப் புரிந்த நம் மாணவி தானே தன்னை மறுசுழற்சி செய்துகொள்கிறார். ரத்தத்தில் இரும்புச் சத்துக் குறைவு, நரம்புத் தளர்ச்சி, கண்களில் எரிச்சல் என்று சோர்ந்து வழியாமல், அவரது வழக்கமான படிப்பும், உழைப்பும் தெம்பாக நடந்தேற உயிர்ச்சத்தும் இரும்பு, கால்சியம் நிறைந்த உணவுகளையும் திட்டமிட்டுச் சேர்த்துக்கொண்டே தன் உடற்சோர்வையும் விரட்டியடிக்கிறார்.
இரண்டாயிரத்து இருபதில் இவ்வுலகை, நம் இளைஞர்களை, மாணவர்களை ஒரு கொடிய நோய் கொடுமையாக தாக்கி அழிக்கவிருக்கிறதாம். அது எய்ட்ஸ் அல்ல."டிப்ரஷன்' என்னும் ஆழ்மனச் சோர்வுதானாம் அது. 
ஒவ்வொரு வீழ்ச்சியாலும் பாதிக்கப்படாமல் மறுபடியும் எழுவதே உயிர்ப்பு, இயற்கை, வாழ்முறை. வீழ்ச்சியின் வேகத்தை மீண்டும் எழுவதற்கான வேகமாக மாற்றிக்கொள்வதே சாமர்த்தியம். 
உடம்பையும் மனதையும் பலப்படுத்தினால் பாதி வெற்றி. வாழ்வின் இயக்கத்தை விளங்கிக் கொண்டால் மீதி வெற்றி. வாழ்க்கையின், வெற்றியின் இந்த சூத்திரங்களைப் புரிந்துகொண்டு புத்துணர்வோடு படிக்கும், உழைக்கும் நம் மாணவிக்கு, இனிவரும் எல்லாத் தேர்வுகளிலும் வெற்றி என்பதும், அதைத் தொடர்ந்து பணிநியமன ஆணைகள் வரிசைகட்டி வரப் போவதிலும் நம்மில் யாருக்கும் எந்த ஐயமும் இல்லையே! 
-கே.பி. மாரிக்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com