ஃபார்ம்-டி... ஒரு புதிய பாதை!

மருத்துவப் படிப்பை பற்றி கனவு காணாத மாணவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நமது மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் மருத்துவப் படிப்புக்கு தனி ஆர்வம் உள்ளது

மருத்துவப் படிப்பை பற்றி கனவு காணாத மாணவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நமது மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் மருத்துவப் படிப்புக்கு தனி ஆர்வம் உள்ளது. பல மாணவர்கள் மருத்துவப் படிப்பைத் தங்களது லட்சியமாகவும், கனவாகவும் கொண்டு படிக்கின்றனர். எனினும், எம்.பி.பி.எஸ் மட்டும்தான் மருத்துவப் படிப்பு என்று நினைத்துக்கொண்டு அது கிடைக்கவில்லையென்றால் விரக்தியடைந்துவிடுகின்றனர்.
இந்தியாவில் மருத்துவம் சார்ந்த பதினைந்துக்கும் மேற்பட்ட துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. அவை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவைக் கலைத்து விட்டு அவர்களுக்கு விருப்பமில்லாத ஏதாவது ஒரு படிப்பைப் படித்தால் போதும் என்ற நிலைமைக்கு இன்றைய மாணவர்கள் வந்துவிடுகின்றனர். 
ஃபார்ம்-டி: ஓர் அறிமுகம்
இந்தியக் கல்வி முறையில் கடந்த 2008-ஆம் ஆண்டு இந்திய பார்மஸி கவுன்சில் அறிமுகப்படுத்திய பட்டப்படிப்பே ஃபார்ம்-டி எனப்படும் டாக்டர் ஆஃப் பார்மஸி. ஃபார்ம்-டி என்பது 6 ஆண்டு தொழில்கல்வி சார்ந்த பட்டப்படிப்பாகும். அறிவியல் பிரிவில் +2 முடித்த மாணவர்கள் இந்தப் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். இந்தப் படிப்பின் முதல் 5 ஆண்டுகள் பாடக்கல்வியாகவும், கடைசி ஓராண்டு செயல்முறை பயிற்சிக் கல்வியாகவும் வழங்கப்படுகிறது. தொழில்முறை பயிற்சியின்போது நோயாளிகளின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ப மருந்துகள் கொடுத்து சிகிச்சை அளித்து, அதன்பின் மருந்துகளின் தாக்கம் குறித்து மாணவர்கள் ஆய்வு செய்வார்கள். 
ஏன் ஃபார்ம்-டி?
இந்தியாவில் அரசுக் கல்லூரிகளில் ஃபார்ம்-டி பட்டப்படிப்பு தொடங்கப்படவில்லை என்றாலும், பல தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் முக்கிய பிரிவாக இது உள்ளது. நமது நாட்டில் ஃபார்ம்-டி வளர்ந்து வரும் பட்டப்படிப்பாக இருந்தாலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் பெரும் எதிர்பார்ப்புள்ள தகுதியான பட்டப்படிப்பாக ஃபார்ம்-டி உள்ளது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு மிக அதிக ஊதியம் பெறும் துறையாகவும் இது விளங்குகிறது.
மருந்துகளைக் கண்டுபிடித்தல், தயாரித்தல், பராமரித்தல், கலவைகளை ஆராய்ச்சி செய்தல், பக்க விளைவுகளைக் கண்டறிதல் என ஆராய்ச்சி மிக்க படிப்பாக இருப்பதால், ஆராய்ச்சியில் ஆர்வம் உடைய மாணவர்கள் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஃபார்ம்-டி -பி.ஃபார்ம், டி.பார்ம் என்ன வேறுபாடு?
இந்தியாவில் ஃபார்ம்-டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் இருந்தே மருந்தக டிப்ளமோ படிப்பும் (டி. ஃபார்ம்), 3 வருட இளங்கலை மருந்தக பட்டப்
படிப்பு (பி. ஃபார்ம்) ஆகியவை உள்ளன. ஆனால் அவற்றுக்கும் ஃபார்ம்-டி படிப்புக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. மருந்துக் கடைகளை நிர்வகிக்க டிப்ளமோ படித்தால் போதும். மருந்துப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கு பி.ஃபார்ம் தேவைப்படுகிறது. 
ஆனால் ஃபார்ம்-டி பட்டப்படிப்பு முடித்தவர்கள் மருந்து உற்பத்தி மட்டும் இல்லாமல் புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு, மருந்துகளின் தாக்கம், மருந்துகளின் கலவைகள், மருந்துகள் கட்டுப்பாடு என மருந்துகள் சார்ந்த அனைத்து துறைகளிலும் பிரதான தகுதியானவர்
களாக அடையாளம் காணப்படுகின்றனர்.
வேலைவாய்ப்புகள்:
Clinical Pharmacist
மருத்துவராகவும், மருந்தாளராகவும் ஒரேசமயத்தில் பணி செய்யும் வகையில் ஏற்படுத்தப்பட்ட பட்டப்படிப்பே ஃபார்ம்-டி ஆகும். இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே Clinical Pharmacist என்ற பணி அமைக்கப்பட்டது. 
உடல் நலம் பேணுதல், நோய் தடுத்தல், மருந்துகளை மேம்படுத்துதல், மருந்துகளின் சிகிச்சை பயன்பாடுகளைக் கண்காணித்து முறைப்படுத்துவது உள்ளிட்டவையே இவர்களது முக்கிய பணியாகும்.
Analytical Chemist
ஒரு பொருளின் வேதியியல் கூறுகளைப் படிப்பதே பகுப்பாய்வு வேதியியலாளர்களின் பணியாகும். இந்த பணியில் திறம்பட விளங்க, உயிர் பகுப்பாய்வு, தடயவியல் அறிவியல், சுற்றுச்சூழல் பகுப்பாய்வு, மருத்துவப் பகுப்பாய்வு உள்ளிட்டவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஃபார்ம்-டி படிப்பதன் மூலம் இத்தகைய பணிகளில் சேர்ந்து நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.
Clinical Research
ஃபார்ம்-டி முடித்தவர்களுக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையங்களில் ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் வேலைவாய்ப்பு உள்ளது. நோயாளிகளின் மரபணு அமைப்பை கண்டறிந்து, அதற்கேற்றாற் போல மருந்துகளை வழங்குவது, மருந்து சிகிச்சையைக் கண்காணிப்பது ஆகியவையே இவர்களின் பணியாகும்.
Quality control Officers
மருந்து உற்பத்தி நிறுவனங்களின் மூலம் தயாரிக்கப்படும் மருந்து பொருள்கள் பரிந்துரைக்கப்பட்ட தர நிலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். 
ஃபார்ம்-டி முடித்தவர்களுக்கு இத்துறையில் நம்பகமான எதிர்காலம் உள்ளது.
Pharmacovigilance Associate
ஃபார்ம்-டி முடித்தவர்களுக்கு புதிய மருந்துகளை உருவாக்குவதிலும், அவற்றை சோதனை செய்வதிலும் முக்கிய பங்கு உள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் மருந்துகளை சோதனை செய்வதற்கு இவர்கள் பணியமர்த்தப்
படுகின்றனர். தங்கள் மருந்துப் பொருள்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் இந்த பணியிடங்கள் உள்ளன. 
Community Pharmacist
சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், பொதுமக்களுக்கு மருந்துகளின் விவரங்களை விளக்குவது, அதன் பயன்பாடுகளைப் புரிய வைப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட சமூக சேவை சார்ந்து பணிகளும் உள்ளன.
Pharmacoeconomics researcher, Drug Inspector, Teachers/Professors, Medical writer உள்ளிட்ட பல பணிகளில் ஃபார்ம்-டி பட்டப்படிப்புக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. 
இவ்வாறு பல்வேறு வாய்ப்புகளைக் கொண்டுள்ள ஃபார்ம்-டி போன்ற வித்தியாசமான, தனித்துவமான படிப்புகள் நிறைய உள்ளன. நமக்கு தேவை இது, நமது லட்சியம் இது என்று பயணிக்கும் மாணவர்கள், தங்களுக்கு பிடித்த படிப்பை தேர்ந்தெடுக்க முடியாவிட்டாலும், அந்தத் துறை சார்ந்த தனித்துவமான படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது நல்லது. 
-க. நந்தினி ரவிச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com