ஒழுங்குமுறை  தவறாத  வாழ்க்கை!

ஆர்ப்பரிக்கும் அலைகளை தன்னுள் கொண்டிருக்கும் கடலைப் போல மனிதர்களின் மனதில் பல எண்ணங்கள் அலைபோல ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கின்றன.
ஒழுங்குமுறை  தவறாத  வாழ்க்கை!

ஆர்ப்பரிக்கும் அலைகளை தன்னுள் கொண்டிருக்கும் கடலைப் போல மனிதர்களின் மனதில் பல எண்ணங்கள் அலைபோல ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கின்றன. மனித மனம் மிகவும் ஆழமானது மட்டுமல்ல ஆபத்தானதும்கூட. உண்மை எது? பொய் எது? எது சரி? எது தவறு? என்பதை பகுத்தறியும் திறன் இருந்தும் அதனைப் பகுத்தாய்ந்து செயல்படத் தயங்கக் கூடிய  தன்மை உடையது. 

அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி  ஒழுங்குமுறையான  வாழ்க்கையை எவர் ஒருவர் வாழ்கிறாரோ அவரே அனைவராலும் போற்றப்படுகிறார்.  

ஒழுங்குமுறையுடன் எப்படி வாழ்வது?

மனம் போன போக்கில் கால் போகக் கூடாது நம்மில் பலர் மனதில் தோன்றுவதையெல்லாம் செய்து விட்டு பின்னாளில் வருத்தப்படுகின்றனர். நமது மனதில் தோன்றும் விஷயங்களை, அப்படியே பின்பற்றாமல், அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி நமது மனதுள் தோன்றிய எண்ணங்கள் சரியா? தவறா? என்று முதலில் ஆராய வேண்டும். 

அந்த எண்ணத்தால் நமக்கு நன்மை கிட்டும் என்பதையும் தாண்டி, அது ஒழுங்குமுறை  பிறழாத செயலா? என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அதன் பின்னரே நாம் அதைச் செயல்படுத்த வேண்டும். 

ஒழுங்குமுறைகளை எடுத்துரைத்தல் நமது நண்பர்களில் சிலர் புகைபிடிக்கிறார்கள் அல்லது வேறு ஏதாவது ஒரு தீய பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். நாமும் அவர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு அதைப் பார்த்து கொண்டிருக்கிறோம்.   அவரது தவறைத் தட்டிக் கேட்காமல் இருந்து விடுகிறோம். இதனால் பிற்காலத்தில் அவருடைய உடலுக்குத் தீங்கு ஏற்படும்போது வருந்த நேரிடும். அதனால், நண்பர் ஒருவர் தீய வழியில் செல்லும்போது, அவருடன் துணை நிற்காது, அவருக்கு எடுத்துக் கூறி, நல்ல வழிக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும். நாம் ஒழுக்கமாக வாழ்வது மட்டும் போதாது. நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் அவ்வாறு வாழ வைக்க வேண்டும்.

பிறருக்கு எடுத்துக்காட்டாய் இருப்பது:

நம்மைப் பார்த்தே நம்மைச் சுற்றியுள்ள குழந்தைகளும், சிறியவர்களும் வளர்கின்றனர். நாம் எத்தகைய குணத்தை, செயல்களைப் பின்பற்றுகிறோமோ அதையே அவர்களும் பின்பற்ற நினைக்கின்றனர். அவ்வாறிருக்கையில், பிஞ்சு நெஞ்சங்களில் ஒழுங்குமுறையை விதைப்பது நமது கடமையாகும். நெறி தவறாத வாழ்க்கையை அவர்களுக்கு நாம் கற்றுத் தர வேண்டும். ஆனால் நம்மில் எத்தனை பேர் இவ்வாறு இருக்கிறோம்? 

இன்றைய குழந்தைகள், செல்லிடப்பேசியிலும், இணையத்திலும் உலாவருகின்றனர். அந்த இணையத்தில் நல்லதும் இருக்கிறது. தீயதும் இருக்கிறது. அதில் நம் குழந்தைகள் நல்லதை பின்பற்ற வைக்க வேண்டியது நம் செயல்களிலேயே உள்ளது. நாம் நிம்மதியாக இருப்பதற்காக குழந்தைகளின் கைகளில் செல்லிடப்பேசியை கொடுத்து தனித்து விட்டுவிடுகிறோம். பின்னாளில் வயதுக்கு மீறியதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதோ, பேசிக்கொண்டிருக்கும்போதோ வருத்தப்பட்டு எந்த பயனும் இல்லை.  

இறுதி வரைப் பின்பற்றுவது:

நமது அறியாமையாலும், கவனக்குறைவாலும், சோம்பேறித்தனத்தாலும், நம்மைச் சுற்றியுள்ளவர்களின் தவறுகளைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறோம். இதனால் தவறுகள் அவரை மட்டும் பாதிக்கவில்லை. அவரைச் சுற்றியுள்ள பிறரையும்  ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது. அதனால், நாம் பின்பற்றும் ஒழுங்குமுறை கொள்கை நமக்கு மட்டுமே என்று நினைக்காமல் பிறரையும் பின்பற்றச் செய்ய வேண்டியது  நமது கடமையாகும்.  மேலும் ஒழுங்குமுறைகளோடு வாழ்வதை நாமும் பிறரும் இறுதி வரை பின்பற்றுவதும்  அவசியமாகும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com