100 மீட்டர் தூரத்தை, நாள் ஓடக்கூடாது!

இது உலக நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தற்போதுவரை முறியடிக்கப்படாமல் இருக்கும் சாதனை நேரம்... இல்லை நொடிகள்.
100 மீட்டர் தூரத்தை, நாள் ஓடக்கூடாது!

"நீங்கள் தாமதிக்கலாம்; நேரம் தாமதிக்காதே'  

- பெஞ்சமின் பிராங்ளின்.

9.58 வினாடிகள். 

இது உலக நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தற்போதுவரை முறியடிக்கப்படாமல் இருக்கும் சாதனை நேரம்... இல்லை நொடிகள். ஜமைக்காவைச் சேர்ந்த  உசைன் போல்ட்    முறியடிக்க முடியாத இந்த சாதனை நொடிகளை தன் கிரீடமாக வைத்திருக்கும் வீரர்.

தங்களது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு நிரந்தரமான, நல்ல ஊதியத்தையும் மரியாதையையும் பெற்றுத் தரக்கூடிய பணிக்குச் செல்ல விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை,  நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது. இன்னும் சொல்லப் போனால், ஒருவர் படிப்பதே நல்ல வேலைக்குச் சென்று சம்பாதிப்பதற்கே என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மதுரைக் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவனாக மூன்றாமாண்டு இறுதியில் நான் பயின்று கொண்டிருந்த போது, எனக்கு ஆயுள் காப்பீட்டு கழகத்தில் பணி நியமன ஆணை வந்திருந்த நேரத்தில், மாற்றுச் சான்றிதழ் பெறுவதில் தாமதமானபோது, எனது துறைத்தலைவரை அணுகியவுடன், ""ஏம்ப்பா...  படிக்கிறதே வேலைக்குத் தானப்பா. உனக்கு படிக்கிறப்பவே வேலை கிடைச்சிருக்குன்னு சொல்ற...  உனக்கு எதுக்கு டி.சி., கொடுக்கத் தாமதிக்கிறாங்க?'' என்று  அவர் சொன்னது, இன்றும் பசுமையாக என் நினைவில் இருக்கிறது.

படிப்பும்  அதைத் தொடர்ந்து  பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் பல வகையாக இருக்கின்றன. மத்திய, மாநில அரசுப் பணிகள், வங்கி மற்றும் இதரப் பொதுத்துறை நிறுவனங்கள், தொடர்வண்டித் துறையில் பணிகள்... இவ்வகையான தேர்வுகளை நடத்தும் யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., டி.என். பி.எஸ்.சி., ஐ.பி.பி.எஸ்., ரயில்வே, எல்.ஐ.சி., என்று வேறுபட்ட அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் தனி. ஒவ்வொரு துறைக்கும் மற்றும் பதவிக்குமான தேர்வுகளின் பாடத்திட்டம், தேர்வு முறை எல்லாம் மாறுபடுவதைப் போலவே, அதற்கான தயாரிப்புக்கான கால அளவும் மாறுபடும். இந்தத் தயாரிப்புக்கான கால அளவு, பொதுவான அளவு என்பதைத் தாண்டி  தேர்வுகளில் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியாளரின் தனித்திறமைக்கும், தகுதிக்கும், முயற்சிக்கும், சுறுசுறுப்பிற்கும், வேகத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது.

எந்தத் துறையாக இருந்தாலும் அதில் உதவியாளர் பதவிக்கான தேர்வுகளுக்கு குறைந்த பட்சம் மூன்றிலிருந்து ஆறுமாதமே போதுமானது. வங்கியில் உயர் அலுவலர் பதவிக்கான தேர்வு மற்றும் இதர "க்ளாஸ் - ஐஐ' பதவிக்கான தேர்வுகளுக்கு கூடுதல் பட்சமாக பன்னிரண்டு மாதங்கள்  - ஒரு வருடமே போதுமானது. குடிமைப்பணி மற்றும் குரூப் - ஐ  பணிகளுக்கான தேர்வுகளுக்கு ஒன்றரை ஆண்டுகள் முதல் இரண்டாண்டுகள் என்பது அதிகபட்சம். நிலைமை இவ்வாறிருக்க, இங்கு வரையறுக்கப்பட்டிருக்கும் காலத்திற்கு சற்று குறைவாகவோ, கூடுதலாகவோ நேரம் செலவாவது... நாம் ஏற்கனவே கூறியிருப்பது போல, போட்டியாளர்களின் தனிப்பட்ட தகுதியின் அடிப்படையில் மாறுபடலாம். ஆனால், ஆறுமாதத்திற்கான தயாரிப்பை இரண்டு மூன்று வருடமாக நீடிப்பதோ, ஓராண்டுக்கான தயாரிப்பை மூன்று நான்காண்டுகளுக்கான தயாரிப்பாக நீட்டிப்பதோ எல்லாவிதமான அடிப்படை விதிகளுக்கும் எதிரானது.

போட்டித் தேர்வுகள் பற்றிய நம்முடைய பொதுவான அணுகுமுறை அத்தனை சரியானதாக இல்லை. போருக்குப் போகிற வீரனைப் போல, அபாயகரமான அறுவைச் சிகிச்சைக்குச் செல்கிற நோயாளியைப் போல, மாணவர்கள் தங்களைத் தேர்வுக்குத் தயார் செய்கிற போக்கு உடனடியாக மாறியாக வேண்டும். தெளிவில்லாத, புரிதலில்லாத போட்டித்தேர்வுகளுக்கான தயாரிப்பு முறை அடிப்படையற்ற அச்சம், தேவையற்ற பதற்றம் உருவாகக் காரணமாகி விடுகிறது. இது தேவைக்கும் அதிகமான கால அவகாசத்தை எடுக்க வேண்டிய நெருக்கடியை ஒருவருக்கு ஏற்படுத்தி விடுகிறது.

தவறான கற்பித்தல்கள், தரமற்ற வழிகாட்டுதல்கள், தன்னம்பிக்கை எனும் பெயரில் புகட்டப்படும் செயற்கை இலக்குகள்  இளைஞர்களை, கண நேர வெளிச்சத்தைக் காட்டி, நிரந்தரமாய் இருட்டுக்குள் தள்ளிவிட்டுவிடும் அபாயம் இருப்பதை போட்டித் தேர்வர்கள் புரிந்துகொண்டு அவர்கள் தம் தயாரிப்புப்  பயணத்தைத் தொடங்க வேண்டும். 

"யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்; யாரைக் கண்டும் வியக்கவும் வேண்டாம்; யாரையும் ஏளனமாய் நினைக்கவும் வேண்டாம்' என்கிற புரிதல் அவசியம். வெற்றியும் அது தரும் புகழும், மரியாதையும், வரவுகளும் இருக்கட்டும். அதனினும் பெரிது, அதனினும் இனிது வாழ்க்கையை அச்சமின்றி, குழப்பமின்றி வாழ்ந்து காட்டுதல். போட்டித் தேர்வுகள் அதற்கான ஒரு சாவி; பயணிக்க ஒரு வாகனம். இந்த வாகனத்தில் பயணம் மேற்கொள்ள துணிந்தவர்கள்...  தாமதமாகப் பயணிக்க அவசியம்தான் என்ன? 

"நான் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆர்வமாக இருக்கிறேன்' என்று நினைத்து உழைக்கும் இளைஞர்கள், தங்களுக்கு யாரும் எதையும் கற்றுத் தரமாட்டார்கள்;  தாங்களாகவே  எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம் என்பதையும்   அப்படிக் கற்றுக் கொள்வதை யாரும்  தடுக்க முடியாது என்கிற நம்பிக்கையோடு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தால் கால தாமதம் எனும் சறுக்கல் யாருக்கும் ஏற்படாது. 

ஆரோக்கியமான குழந்தையின் பிறப்புக்கு, அந்தச் சிசுவானது தாயின் கருவில் பத்து மாதம் இருப்பது நலம் என்பது அடிப்படை. இப்படி ஒவ்வோர் ஆரோக்கியமான செயலுக்கும், வெற்றிக்கும் குறைந்த பட்சம் மற்றும் கூடுதல்பட்ச கால அவகாசம் என்று ஒன்றுண்டு. அது பிசகிடும் போது...,  வெற்றியின் அர்த்தம் வீழ்ந்துவிடுகிறது. 

9.58 வினாடிகளில் கடந்து சாதனையாக இருக்கும் ஒரு தூரத்தை, பத்து நாட்கள் அல்லது நூறு நாட்களில் கடந்தேன் என்று சொல்வது யாருக்கும் நல்லதல்ல. அது வெற்றியே அல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com