தடைகளைத் தாண்டி...!

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும், அவற்றுள் முதன்மையானது மட்டுமல்லாமல், தவிர்க்க முடியாத சக்தியாகவும் முன்நிற்பது அந்நாட்டின் இளைஞர்களே.
தடைகளைத் தாண்டி...!


ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும், அவற்றுள் முதன்மையானது மட்டுமல்லாமல், தவிர்க்க முடியாத சக்தியாகவும் முன்நிற்பது அந்நாட்டின் இளைஞர்களே. புதிய சிந்தனைகள், மேம்பட்ட திறன்கள், புதுமைகளை விரைவில் உள்வாங்கும் திறமை, தளராத முயற்சி, வளர்ச்சியை நோக்கிய இலக்கு, நவீன உத்திகளைக் கையாளுவது என எண்ணற்ற பரிமாணங்கள் இளைஞர்களின் தகுதியையும், தரத்தையும் உயர்த்திப் பிடிப்பதால் அவர்களை விலக்கி வைத்துவிட்டு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது இயலாத ஒன்று. 

இந்தியாவின் மக்கள்தொகையில் ஏறத்தாழ 35 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். 

உலக அரங்கில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்தியாவின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பது வளர்ச்சி சார்ந்த நிகழ்வுகளில் இளைஞர்கள் ஈடுபடுவதும், அவர்களின் உறுதியான பங்களிப்பும்தான்.

இக்கால இளைஞர்கள் நினைத்த நொடியில் அனைத்தும் அறிந்து கொள்ளும் வகையில் இணையத்தில் உலவி வருகின்றனர். அவர்கள் நினைத்தால், எதையும் வைரலாக்க முடியும். அந்த அளவுக்கு அவர்கள் தொழில்நுட்பத்தோடு ஒன்றிணைந்துள்ளார்கள். தகவல் தொழில்நுட்பம், நவீனத்துவம் என அனைத்திலும் இளைஞர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத் தூண்களாக இருக்கும் அவர்கள் பல பிரச்னைகளையும், சவால்களையும் எதிர்கொள்கின்றனர். அவர்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் சில..

தரமான கல்வியின்மை

இளைஞர்களிடம் இருக்கும் அனைத்துத் திறமைகளையும் வெளிக்கொணரும் கருவியாக இருப்பது கல்வி.     ஊருக்கு ஒரு பொறியாளர் இருந்த நிலை மாறி, ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பொறியியல் படித்த பல இளைஞர்கள் வேலையில்லாத பட்டதாரிகளாகச் சுற்றி வருகின்றனர்.

வேலையின்மை

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இளைஞர்கள் பணிக்கு தேவையான திறமைகள் இல்லாமல்,  கஷ்டப்படுகின்றனர். சிலர், தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இது இல்லை என்று கிடைத்த வேலைக்கு செல்லாமல் உள்ளனர். வேலைத் தேடிக் கொண்டிருப்பதற்கு பதிலாக,   தாமே தொழில் தொடங்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.  

விளையாட்டில் குறைவான பங்களிப்பு 

நம் ஊர் தெருக்களிலும், பள்ளிகளிலும் விளையாடும் இளைஞர்கள் எத்தனை பேர் விளையாட்டுத்துறையை தனது எதிர்காலத்திற்காகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம். விளையாட்டுத் துறையில் என்ன ஊதியம் இருக்கும், எதிர்காலம் எவ்வாறு இருக்கும்  என்று பெற்றோரும், சமூகத்தினரும் கேள்வி எழுப்புவதால், திறமை இருக்கும் பல இளைஞர்கள் அதை விட்டுவிடுகின்றனர். 

விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்

களுக்கு, கல்வி, அரசு வேலைவாய்ப்பு என அனைத்திலும் இடஒதுக்கீடு உண்டு. அதை நினைவில் கொண்டு தங்களை இளைஞர்கள் தங்களைமுன்னேற்றிக் கொள்ள வேண்டும்.

அரசியலில் ஆர்வமின்மை 

சுட்டுரை (டுவிட்டர்), முகநூல் (ஃபேஸ்புக்) ஆகியவற்றில் மீம்ஸ் மூலம் அரசியல் பேசும் இளைஞர்கள், நிஜ வாழ்க்கையில் அரசியலில் சாதிக்கிறார்களா என்று பார்த்தால், அவர்கள் அதற்கான முதல் அடியை கூட இன்னும் எடுத்து வைப்பதில்லை. மக்கள்தொகையின் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது, அவர்களின் உண்மையான வளர்ச்சிக்கு தேவையானது என்ன என்பதை இளம் அரசியல்வாதிகளாலேயே ஊகிக்க முடியும்.

சமூக வலைதளங்களுக்கு அடிமையாக இருப்பது 

இன்றைய இளைஞர்கள் பலர் எந்நேரமும் செல்லிடப்பேசியையே உபயோகித்துக் கொண்டிருக்கின்றனர். முகநூலில் மீம்ஸ் பார்ப்பது, அடுத்தவர் என்ன பதிவிட்டிருக்கிறார் என்று தேடித் தேடி பார்ப்பது என நேரத்தை வீணாகக் கழிக்கின்றனர். தொழில்நுட்ப வசதிகள் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கின்றனவோ அதே அளவு அதில் பின்னடைவுகளும் உள்ளன. 

நமது இளைஞர்கள் பலர் நல்லதில் காலம் செலுத்தாமல், தேடிப் பிடித்து தவறான விஷயத்தில் நேரத்தைச் செலவழித்துக்  கொண்டிருக்கின்றனர். யாரென்றே தெரியாத நபரை மீம் மூலம் கேலி செய்துக் கொண்டிருப்பதால், நமது பொன்னான நேரம்தான் வீணாகுமே தவிர, அந்த நபருக்கு அதில் எவ்வித கெடுதலும் இருக்கப் போவதில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com