மனிதநேயம்... பன்னாட்டு புகைப்படப் போட்டி!

ஐக்கிய நாடுகள் அவையின்  ஆதரவுத் திட்டமாக, "மனிதநேயத்திற்கான புகைப்படம் எடுத்தல் (Photography 4 Humanity)' எனும் உலகளாவிய பரிசுப் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மனிதநேயம்... பன்னாட்டு புகைப்படப் போட்டி!


ஐக்கிய நாடுகள் அவையின்  ஆதரவுத் திட்டமாக, "மனிதநேயத்திற்கான புகைப்படம் எடுத்தல் (Photography 4 Humanity)' எனும் உலகளாவிய பரிசுப் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்போட்டியானது, உலகெங்குமிருக்கும் புகைப்படக் கலைஞர்களின் புகைப்படங்கள் வாயிலாக மனித உரிமைகளின் சக்தியை உயிர்ப்பிக்க முடியும் என்பதை உணர்த்துவதற்கானதாக இருக்கிறது.  

துணிவு, மனத்தளர்வு, நம்பிக்கை, அநீதி, கருணை, மனித உரிமை தோல்விகள் அல்லது சிறிய மற்றும் பெரிய வழிகளில் வெற்றியினை எடுத்துக் காட்டுவது என்று இப்படங்கள்,  மனித உரிமைகளுக்கான ஒரு நிலைப்பாட்டை எடுக்க மக்களை ஊக்குவிப்பதாகவும், தனிப்பட்ட முறையில் செயல்பட வைப்பதாகவும் அமைகின்றன.  

இந்நோக்கங்களை முதன்மைக் கருவாகக் கொண்டு, புகைப்படங்களை எடுத்து, இந்தப் புகைப்படப் போட்டியில் பங்கேற்க முடியும். 18 வயது நிறைவடைந்த அனைவரும் இப்போட்டியில் பங்கேற்க முடியும். இப்போட்டிக்காக எடுக்கப்பட்ட படங்கள் 1-9-2019 முதல் 31-8-2020 வரையிலான ஓர் ஆண்டு காலத்தில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இப்போட்டிக்கு நுழைவுக் கட்டணம் எதுவுமில்லை. இப்போட்டியில் பங்கேற்கும் ஒருவர் ஐந்து புகைப்படங்கள் வரை சமர்ப்பிக்க முடியும். ஒவ்வொரு புகைப்படத்திலும் தலைப்பு, நாள், எடுக்கப்பட்ட  இடம் மற்றும் புகைப்படமெடுத்தவரின் பெயர் போன்றவை இருக்க வேண்டும். இப்போட்டிக்கான புகைப்படங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 31-8-2020. 

இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து புகைப்படங்களையும் உலகின் மிகச்சிறந்த புகைப்படக்காரர்கள், மனித உரிமை வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படத் தொகுப்பாளர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் கொண்ட நடுவர் குழு பரிசீலித்து, உலகளாவிய நிலையில் பரிசுக்குரிய ஒருவரையும், காட்சிப்படுத்துவதற்கேற்ற மிகச் சிறந்த 10 புகைப்படங்களையும் தேர்வு செய்து வழங்கும். 

பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டவர் மற்றும் காட்சிப்படுத்துவதற்காகத் தேர்வு செய்யப்பெற்ற 10 புகைப் படங்கள் போன்றவை குறித்த அறிவிப்பு ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் நாளான டிசம்பர்  4 -ஆம் நாளில் வெளியிடப்படும்.    

பரிசுக்குத் தேர்வு செய்யப் பெற்றவருக்கு ஐந்தாயிரம் அமெரிக்க டாலர் ($5000 USD) பரிசுத்தொகையாக வழங்கப்படும். பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட புகைப்படத்துடன், மிகச் சிறந்த படங்களாகத் தேர்வு செய்யப்பெற்ற 10 புகைப்படங்களும் நியூயார்க் நகரில் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் அவையின் தலைமை அலுவலகத்திலும், நியூயார்க் நகரிலிருக்கும் போட்டோகிரபிக்சா (Fotografiska) அலுவலகத்தின் கண்காட்சி அரங்கிலும் காட்சிப்படுத்தப்படும். 

இப்போட்டியில் பங்கேற்கவும், கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் விருப்பமுடையவர்கள், https://www.photography4humanity.com/  எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com