சரியான பார்வை... சரியான வழி...சரியான செயல்!- தா.நெடுஞ்செழியன்

சென்ற இதழில் பி.எஸ்சி ஆபரேஷன் தியேட்டர் அண்ட் அனஸ்தீசியா டெக்னாலஜி படிப்பு தொடர்பான விவரங்களைப் பார்த்தோம். அறுவைச் சிகிச்சையின்போது நோயாளிகளுக்கு மயக்க மருந்து
சரியான பார்வை... சரியான வழி...சரியான செயல்!- தா.நெடுஞ்செழியன்

சென்ற இதழில் பி.எஸ்சி ஆபரேஷன் தியேட்டர் அண்ட் அனஸ்தீசியா டெக்னாலஜி படிப்பு தொடர்பான விவரங்களைப் பார்த்தோம். அறுவைச் சிகிச்சையின்போது நோயாளிகளுக்கு மயக்க மருந்து தருவது தொடர்பான பணிகளை மட்டுமல்லாமல், அறுவைச் சிகிச்சைக்கான அனைத்துப் பணிகளிலும் இந்த படிப்பு படித்தவர்களின் பங்கு உண்டு. 
ஓர் அறுவைச் சிகிச்சைக் கூடத்தில் தேவையான அளவுக்கு ரத்தம் இருக்கிறதா? தேவையான வெப்பநிலை இருக்கிறதா? ஆக்சிஜன் இருக்கிறதா? அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான அனைத்துக் கருவிகளும் இருக்கின்றனவா? அறுவைச் சிகிச்சை செய்யும்போது அறுவைச் சிகிச்சை செய்யப்படும் நோயாளியின் உடல் பகுதியை அறுவைச் சிகிச்சைக் கூடத்தில் உள்ள அனைவரும் பார்க்கும் வகையில் திரை அமைக்கப்பட்டிருக்கிறதா? அறுவைச் சிகிச்சையின்போது மின்தடை ஏற்படாமல் இருக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகு, அறுவைச் சிகிச்சைக் கூடத்தைத் தூய்மையாக்கும் பணிகள் முறையாகச் செய்யப்படுகின்றனவா? என அறுவைச் சிகிச்சைக்கூடம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் இந்த பி.எஸ்சி ஆபரேஷன் தியேட்டர் அண்ட் அனஸ்தீசியா டெக்னாலஜி படிப்பு படித்தவர்கள் செய்கிறார்கள். 
துணை மருத்துவப் படிப்புகள் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியிலும் வழங்கப்படுகின்றன.
பி.எஸ்சி பட்டப் படிப்பில் Accident  and Emergency Care Technology, Audiology & Speech Language Pathology, Cardiac Technology,  Cardiopulmonary Perfusion Care Technology,  Critical Care Technology,  Dialysis Technology,  
Medical Laboratory Technology (BScMLT),  Medical Record Science (BMRSc),   Medical Sociology,  Neuro-Electrophysiology,  Nuclear Medicine Technology,  Occupational Therapy(BOT),  Operation Theatre and Anaesthesia Technology,  Optometry (B.Optom),  Physiotherapy (BPT),  Prosthetics & Orthotics (BPO),  Radiography & Imaging Technology ஆகியவை உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். 
பி.எஸ்சி மெடிகல் ரிகார்ட் சயின்ஸ் B.Sc in Medical Record Science (BMRSc): இந்த இளங்கலைப் பட்டம் மருத்துவத்துறையில் மிக இன்றியமையாத ஒன்றாகும். இது ஹெல்த் இன்ஃபர்மேஷன் சயின்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் ஒரு நோயாளி முதன்முதலில் மருத்துவமனைக்கு வரும்போது அவருக்கு எந்த மாதிரியான நோய் அறிகுறிகள் உள்ளன என்பதைக் கண்டறிந்து அவற்றை பதிவு செய்து கொள்வது, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய தகவல்களை முறையாகச் சேகரித்து பாதுகாப்பது, சிகிச்சையின் பல்வேறு கட்டங்களில் நோயாளியின் உடலில் ஏற்படும் மாறுதல்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து வைப்பது, குறிப்பாக நோயின் தன்மை சிகிச்சையின்போது எவ்வாறு மாறுபடுகிறது என்பதைக் கண்டறிய அதற்கான தகவல்களைப் பாதுகாத்து வைப்பது ஆகியவை இந்தப் பிரிவின் முக்கிய பணிகளாகும். 
மேலும் நோய் தொடர்பான தகவல்களைத் திரட்டித் தொகுத்து ஆவணப்படுத்துவது இவர்களின் முக்கிய பணியாகும். உதாரணமாக ஒரு நோய் தாக்குகிறது என்றால் அது எந்த வயதுப் பிரிவினரை அதிகமாகத் தாக்குகிறது?என்னவிதமான உணவு உட்கொள்பவர்களைத் தாக்குகிறது? என்ன ரத்தப் பிரிவு உடையவர்களைப் பாதிக்கிறது? இப்படிப்பட்ட மருத்துவத்துறைக்கு மிகவும் தேவைப்படும் பல்வேறு விதமான தகவல்களைத் திரட்டித் தருவது இவர்களின் பணியாகும். 
மருத்துவத்துறை சார்ந்து அரசு என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்தலாம் என்பதற்குத் தேவையான தகவல்களைத் தருவதும் இவர்களுடைய பணியாகும். உதாரணமாக கொசுக்களினால் ஒரு நோய் பரவுகிறது என்றால் கொசுக்கள் எங்கு, எதனால் அதிகமாக உற்பத்தியாகின்றன, அவற்றைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற தகவல்களைத் தருவது இவர்களின் பணியாகும். 
அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் கொசுக்கள் பறக்கும்போது ஏற்படும் ஒலியை வைத்து அது எந்த வகை கொசு, அதனால் அந்தப் பகுதியில் என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பதைக் கண்டறிய ஓர் அலைபேசி செயலியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் கொசுக்களினால் உலகின் எந்தப் பகுதியில் என்ன நோய்கள் ஏற்படும் என்பது போன்ற தகவல்களைத் திரட்ட முடிகிறது. இப்படிப்பட்ட பணிகளும் கூட மெடிகல் ரிக்கார்ட் சயின்ஸ் பிரிவைச் சேர்ந்தவையாகும். 
இந்தப் படிப்பைப் பயின்றவர்கள் மருத்துவர்களுடன், மருத்துவத் தொழில்நுட்பத்துறையினருடன், சுகாதாரப் பணியாளர்களுடன் இணைந்து வேலை செய்வார்கள். 
ஒரு மருத்துவமனையின் பல்வேறு செயல்பாடுகளை ஆராய்ந்து அவற்றைப் பற்றிய தகவல்களைத் திரட்டித் தருவதும் இவர்களுடைய பணியாகும். இதன் மூலம் அந்த மருத்துவமனையை மேம்படுத்துவதற்கான கொள்கை முடிவுகள் எடுப்பதற்கும் மற்றும் திட்டமிட்டுச் செயல்படுவதற்கும் உதவுவார்கள். 
மருத்துவக் காப்பீடு, டெலி மெடிசன் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை, வளர்ச்சிகளை இவர்கள் ஆராய்வார்கள். 
1962- ஆம் ஆண்டிலிருந்து இந்தக் கல்லூரியில் இந்தப் படிப்பு வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் சொல்லித் தரப்படுகிறது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக இது நான்காண்டு பட்டப் படிப்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த 4 ஆண்டுகளில் 1 ஆண்டு செயல்முறைப் பயிற்சி பெறுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 
மெடிகல் லேப் ரிக்கார்டு லைப்ரேரியனாகவும், ஹெல்த் இன்பர்மேஷன் மேனேஜராகவும், தரக்கட்டுப்பாடு நிர்வாகியாகவும், டேட்டா ஸ்பெஷலிஸ்ட்டாகவும் இந்தப் படிப்பு படித்தவர்கள் பணியாற்ற முடியும். இவர்களுக்குப் பல வேலை வாய்ப்புகள் உள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரியிலும் இந்தப் படிப்பு உள்ளது. வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் இந்தப் படிப்பில் சேர தனியாக நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். பிளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இப்படிப்பில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 
பி.எஸ்சி மெடிகல் சோசியாலஜி: ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்களை நோய்கள் பாதிப்பதற்கும் அல்லது ஒட்டுமொத்த சமூகத்தையே நோய்கள் பாதிப்பதற்கும் காரணமான சமூகக் காரணிகளைக் கண்டறிவது தொடர்பாகப் படிப்பது, மெடிகல் சோசியாலஜி படிப்பாகும். 

உதாரணமாக பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் அவர்களின் குழந்தைகளுக்கு என்னவிதமான நோய்களை ஏற்படுத்துகின்றன? இளம் வயதினரை, முதியவர்களை அந்த உணவு பழக்க வழக்கங்கள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை மெடிகல் சோசியாலஜி படிப்பு படித்தவர்கள் கண்டறிவார்கள். அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கங்களில் என்ன மாறுதல்களைக் கொண்டு வந்தால், நோய்களின் பாதிப்புகளிலிருந்து பழங்குடியின மக்களை மீட்க முடியும் என்பதற்கான ஆலோசனைகளையும் சொல்வார்கள். 
ஓர் ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றிரண்டு பேருக்கு பர்கின்சன் நோய் வந்துவிடுகிறது என்றால் அதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிப்பதை இந்த மெடிகல் சோசியாலஜி படித்தவர்கள் செய்வார்கள். அந்த ஊரில் உள்ள கிணற்று நீரைக் குடித்ததினால் பர்கின்சன் நோய் ஏற்பட்டது என்று அவர்கள் கண்டுபிடித்தால், கிணற்று நீரை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளைச் சொல்வதோடு அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள். இவ்வாறு சமூகம் சார்ந்த மருத்துவப் பணியாற்றுவார்கள். 
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்தால், அது தொடர்பான தகவல்களைக் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வது, நோயிலிருந்து மீண்டு விடலாம் என்ற நம்பிக்கையை அவர்களிடம் விதைப்பது ஆகியவற்றின் மூலமாக நோயை எதிர்கொள்ளும் மனநிலையை உருவாக்குவார்கள். 
இந்தப் படிப்பை முடித்தவர்கள் இத்துறையிலேயே எம்பிஏ பட்டப் படிப்பும் படிக்கலாம். மெடிகல் சோசியலாஜி 3 ஆண்டு படிப்பு. ஓராண்டு செயல்முறைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 
பி.எஸ்சி நியூரோ எலக்ட்ரோபிசியாலஜி (Neuro-Electrophysiology): இந்தப் படிப்பு படித்தவர்கள், இஇஜி, இஇஜி டெலிமெட்ரி, இஎம்ஜி, டெமோகிராம், மேக்னெடிக் ஸ்டிமுலேட்டர், டெமோகிராம் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரு தனிநபரின் நரம்பு மண்டலத்தின் செயற்பாடுகளைக் கண்டறிவார்கள். நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள நோய்களின் தன்மையைக் கண்டறிவார்கள். 
நியூரோ கெமிஸ்ட்ரி, நியூரோ பெத்தாலஜி, நியூரோ ரேடியோலாஜி, நியூரோ பிஸியாலஜி போன்ற துறைசார்ந்த பணிகளைச் செய்வார்கள். இவர்கள் காகினிட்டிவ் நியூரோலாஜி, நியூரோ சைகாலஜி ஆகிய துறைகளில் அதிக அளவில் பணியாற்றுவார்கள். இளம் பருவத்தினருக்கு ஏற்படும் பக்கவாதம், காக்கை வலிப்பு, நரம்பு தசை தொடர்பான நோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளிலும் பணியாற்றுவார்கள். நியூரோ மெட்டாபோலிக், செரிபரல் பால்சி கிளினிக்குகளிலும் வேலை செய்வார்கள். மூளையில் ஏதேனும் ரசாயனம் கூடுதலானாலோ, குறைவானாலோ ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்வதற்கு உதவுபவர்களும் இவர்களே.
பி.எஸ்சி நியூரோ எலக்ட்ரோபிசியாலஜி 3 ஆண்டு படிப்பாகும். ஓராண்டு செயல்முறைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 
(தொடரும்)
கட்டுரையாசிரியர்
சமூக கல்வி ஆர்வலர் 
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com