குழாயைத் தொடாமல் கை கழுவலாம்!

குழாயைத் தொடாமல் கை கழுவலாம்!

கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமலிருக்க நமது கைகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்;  குறைந்தது 20 விநாடிகள் கைகளை முறையாகச் சுத்தம் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.  

கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமலிருக்க நமது கைகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்; குறைந்தது 20 விநாடிகள் கைகளை முறையாகச் சுத்தம் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் கைகளைக் கழுவுபவர்கள் 20 விநாடிகளுக்கும் மேலாகவே கழுவிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். கை கழுவி முடிக்கும் வரை குழாயிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கிறது. நிறையத் தண்ணீர் இதனால் வீணாகிறது.
சுத்தம் இல்லாத கைகளினால் குழாயைத் திறந்துவிட்டு, கிருமிநாசினிகளைக் கொண்டு நன்றாகக் கைகளைச் சுத்தம் செய்கிறோம். சுத்தம் செய்த கைகளைக் கொண்டு குழாயை மூடுகிறோம்.
குழாயில் நம் கைபட்ட இடங்களில் ஏற்கெனவே வைரஸ் ஒட்டிக் கொண்டிருந்தால்... நம் கைகளைச் சுத்தம் செய்ததும் வீண்... மீண்டும் வைரஸ் கைகளில் ஒட்டிக் கொள்ளும். குழாயைத் தொடும் எல்லாரும் வைரஸ் தொற்றுதலுக்கு உள்ளாவார்கள். என்னதான் செய்வது?
மருத்துவர்கள், நர்சுகள், சுத்தம் செய்பவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் என நோயாளிகளுடன் தொடர்புடைய அனைவருக்கும் கரோனோ தொற்றிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. சாதாரண மக்களை விட அடிக்கடி கைகளைத் தூய்மை செய்ய வேண்டிய நிலையில் இருப்பவர்கள் மருத்துவத்துறையினர்.
இதற்கு என்ன செய்வது என்று யோசித்தார் டாம்சாவ்ஸ் குர்மேட். லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் உள்ள டோம்ஹார் என்ற கிராமத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞர் இவர். அவர் சாதாரணக் குழாய்களில் உள்ள வைரஸ் தொற்று அபாயத்தைத் தவிர்க்கும்விதமாக புதுவிதமான வாஷ்பேசின் ஒன்றை வடிவமைத்திருக்கிறார். அதற்கு அவர் "தொற்று ஏற்படாத குழாய்' என்றும் பெயரும் இட்டிருக்கிறார்.
இந்த வாஷ்பேசினில் கைகளைச் சுத்தம் செய்ய, மக்கள் குழாயைத் தொடத் தேவையில்லை.
""ஸ்டீலால் செய்யப்பட்ட இந்த வாஷ்பேசினின் அடிப்பகுதியில் கால்களினால் அழுத்தக் கூடிய இரண்டு அமைப்புகளைப் பொருத்தியிருக்கிறேன். அதில் வலது பக்கத்தில் உள்ள அழுத்தும் அமைப்பைக் கால்களினால் அழுத்தினால், குழாயிலிருந்து திரவ சோப் கொட்டும். அதைக் கை
களில் பிடித்து நன்றாகத் தடவிக் கொண்டு இடது பக்கத்தில் உள்ளஅழுத்தும் அமைப்பை அழுத்தினால் குழாயிலிருந்து தண்ணீர் கொட்டும். இப்படி குழாயைத் தொடாமலேயே கைகளை நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளலாம்'' என்கிறார் இந்தக் கருவியைக் கண்டுபிடித்த டாம்சாவ்ஸ்.
இதனால் சாதாரண குழாய்களில் இருந்து கைகளைக் கழுவி முடிக்கும் வரை தண்ணீர் கொட்டிக் கொண்டு இருப்பதைப் போல இந்த வாஷ்பேசினில் உள்ள குழாய்களில் இருந்து தண்ணீர் கொட்டாது. கால்களினால் அழுத்தும்போது மட்டுமே தண்ணீர் கொட்டும் என்பதால் தண்ணீர் வீணாகாது. அழுத்தம் அமைப்பிலிருந்து கால்களை எடுத்தவுடன் தண்ணீர் நின்றுவிடும்.
""நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் வாஷ்பேசினில் செலவாகும் தண்ணீரில் 80 சதவீதத்தை இந்த வாஷ்பேசினைப் பயன்படுத்துவதால் சேமிக்க முடியும்'' என்கிறார் அவர்.
இந்த வாஷ்பேசினின் பின்புறத்தில் ஒரு தண்ணீர்த் தொட்டி பொருத்தப்பட்டிருக்கிறது. லடாக் பகுதியில் அதிக குளிர் என்பதால், தண்ணீர் ஜில்லென்று இருக்கும். கைகளை 20 விநாடிகள் சுத்தம் செய்வது குளிர்பிரதேசமான லடாக் பகுதியில் சாத்தியமே இல்லை. எனவே பின்புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் தொட்டியில் வெதுவெதுப்பான தண்ணீர் இருக்கும்படி அமைத்திருக்கிறார் டாம்சாவ்ஸ். இதனால் அந்தப் பகுதி மக்கள் முறையாகக் கை கழுவ முடியும் என்கிறார் அவர்.
""இந்த வாஷ்பேசினை இரண்டே நாளில் செய்து முடித்தேன். இதற்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் இங்குள்ள ஹார்ட்வேர் கடைகளில், மெக்கானிகல் ஸ்பேர் பார்ட்ஸ் கடைகளில் வாங்கினேன். வாகனங்களுக்குப் பயன்படும் பிரேக் பிடிக்க பயன்படும் பெடல்களைப் பயன்படுத்தி அழுத்தும் அமைப்புகளை உருவாக்கினேன். ஒரு சாதாரண வெல்டிங் பட்டறைக்குச் சென்று இந்தக் கருவியைச் செய்து முடித்தேன்'' என்கிறார் டாம்சாவ்.
இப்போது டாம்சாவ்ஸ் தயாரித்த இந்த வாஷ்பேசினுக்கு ஆர்டர்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. தற்போது இந்த வாஷ்பேசின் லே நகரத்தில் உள்ள úஸானம் நார்பூ மெமோரியல் மருத்துவமனையில் உள்ளது. இப்போது நிறைய உணவகங்களில் இருந்து இந்த வாஷ்பேசின் வேண்டும் என கேட்டிருக்கிறார்கள். பாதுகாப்புத்துறையினர், விமானநிலையத்தினர், கார்கிலிலுள்ள அரசு மருத்துவமனை எல்லாரும் வாஷ்பேசின் வேண்டுமென கேட்டிருக்கிறார்கள். ஆனால், வாஷ்பேசினைச் செய்வதில் பல தடைகள் தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ளன.
""இந்த வாஷ்பேசினைச் செய்யத் தேவைப்படும் பொருள்களை வாங்கும் கடைகள் ஊரடங்கு உத்தரவினால் மூடப்பட்டிருக்கின்றன. அதனால் நிறையச் செய்ய முடியவில்லை. அதுமட்டுமல்ல, இந்தக் வாஷ்பேசினை நிறையச் செய்து பிறருக்கு அளிக்கும்போது தேவையில்லாமல் கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ்களை பிற இடங்களுக்குப் பரப்பிவிட்டுவிடுவோமோ என்ற அச்சமும் எங்களுக்கு இருக்கிறது. அதனால் கேட்பவர்கள் அனைவருக்கும் செய்து கொடுக்காமல், மருத்துவமனைகளுக்கு மட்டும் செய்து கொடுக்கிறோம். ஏனென்றால் மருத்துவர்கள் மக்களுக்கு மிக மிகத் தேவைப்படும் மருத்துவப் பணிகளைச் செய்து வருகிறார்கள். போரின் போது படைவீரர்களுக்கு எதிரியைப் பார்க்க முடியும்; எதிரி யாரென்று தெரியும். ஆனால் இந்த கரோனா வைரஸ், கண்ணுக்குத் தெரியாத எதிரி. எந்த நேரத்திலும் யாரை வேண்டுமானாலும் தொற்றிக் கொள்ளலாம். மருத்துவப் பணி செய்பவர்களும் மனிதர்கள்தானே?
உயிருக்குப் பயப்படாமல் நம்மைக் காக்கும் மருத்துவர்களுக்கு இந்த வாஷ்பேசினைச் செய்து தருவதற்கு நான் முன்னுரிமை கொடுக்கிறேன். பிறருக்கு அப்புறம் செய்து கொடுக்கலாம்'' என்கிறார் டாம்சாவ்ஸ்.இப்போதைய உடனடித் தேவையான இந்தக் கண்டுபிடிப்பிற்காக அவருக்கு பாராட்டு மாலைகள் குவிகின்றன. அவற்றையெல்லாம் பெரிதாக நினைக்கவில்லை அவர்.
""இந்த நெருக்கடியான நேரத்தில் சாதாரண மக்கள் எவ்வளவோ சேவைகள் செய்கிறார்கள். எவ்வளவு பேர் ஏழை மக்களுக்கு இலவசமாக முகமூடிகளை வழங்குகிறார்கள்? ஒரு முகமூடியை அணிவதால் கரோனா தொற்று ஏற்படாமல் ஓர் உயிர் காப்பாற்றப்படுகிறது. நானென்ன பெரிதாகச் செய்துவிட்டேன்?'' என்கிறார் பணிவுடன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com