ஆசை ஆசையாக  ஓர் அரசுப்பணி... இதற்காகவா?

"மற்றவர்கள் எதிர்பார்ப்பதை விட உயர்ந்த தரத்திலான பொறுப்பை உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள்' 
ஆசை ஆசையாக  ஓர் அரசுப்பணி... இதற்காகவா?


"மற்றவர்கள் எதிர்பார்ப்பதை விட உயர்ந்த தரத்திலான பொறுப்பை உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள்' 

- ஹென்றி வார்டு பீச்சர்

போட்டித்தேர்வு களத்தில் நின்ற மாணவர்கள் பெரும்பாலும் சிதறுண்டு கிடக்கிறார்கள். பொதுமுடக்கம், முழுமுடக்கம் என்கிற கொள்ளைநோய் தடுப்பு, பாதுகாப்பு அறிவிப்புகளோடு, அதிகரிக்கும் நோய்தொற்றின் கணக்கும்  எல்லாரையும் பீதியடையச் செய்து, மிகப்பெரிய சுணக்கத்திற்குள் தள்ளியிருக்கிறது. மாணவர்களில் வெகு குறைவானவர்களே  இந்த நெருக்கடியான காலத்தை மிக நம்பிக்கையோடும், புத்திசாலித்தனத்தோடும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்தக் கரோனா காலத்தையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தும் போட்டித்தேர்வு மாணவர்களின் நோக்கங்கள் மாறுபடுகின்றன. இலக்கு என்னவோ அரசுப் பதவியைப் பெறுவதுதானென்றாலும், எதற்கு அரசு ஊழியராக வேண்டும் என்பதில் வேறுபாடுகள் இருக்கிறது. பவுனுக்காக (திருமணச் சந்தையில்), பணத்திற்காக (சம்பளம் போக கையூட்டு மற்றும் திருமணச் சந்தையில்), பதவியென்னும் பகட்டிற்காக, இன்றும் அரசுப் பணியை, வருமானத்துடன்கூடிய நிரந்தர வேலையாக மட்டும் நாடுகின்ற இளைஞர்கள் அதிகமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். இப்போது அரசுப் பதவியில் இருக்கின்ற சில தவறான அதிகாரிகள் இப்படிப்பட்ட இளைஞர்களுக்கான மோசமான முன்மாதிரிகளாக அமைந்து விடுகின்றனர்.

அவர் ஒரு குறிப்பிட்ட மாநகராட்சியின் தலைமை அதிகாரி. பதவி மற்றும் அதிகார போதை தன்னுள் புகுந்துவிடாமல் பார்த்துக் கொண்டு, சகமனிதர்களை நல்ல நண்பராக, சகோதரராக கருதக் கூடியவர். அவரது மாநகராட்சி நிர்வாகத்தில் நடக்கும் "சிவப்பு நாடா'   இழுத்தடிப்புகளை, தவறுகளை நாம் அவரது பார்வைக்குக் கொண்டு சென்றால், உடனடியாகத் தலையிட்டு அதை சரி செய்கிறார். தாமதமான வேலைகளை உடனடியாக முடித்தும் கொடுக்கிறார்.  

இந்த தேசத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் 74%. இது தமிழ் நாட்டில் 80%. இந்தப் பூவுலகில் பிறந்து எல்லாருக்கும் பள்ளிக்கூடம் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படி பள்ளிக்கூடம் செல்கின்ற அனைவரும் பட்டம் பெறுகின்ற வாய்ப்பினைப் பெறுவதில்லை. இந்திய அளவிலும், தமிழக அளவிலும் கல்வியறிவு பெற்றவர்களில் மிக சொற்பமானவர்கள் மட்டுமே பட்டதாரிகளாகும் வாய்ப்பினைப் பெறுகின்றனர். இப்படி அரிதாக கிடைக்கின்ற வாய்ப்புகள் மூலம் பெறுகின்ற பட்டத்தைக் கொண்டு பெறுகின்ற அரசுப் பதவியை சாமானிய மக்களின் சேவைக்கு, முகம் சுழிக்காமல் பயன்படுத்தவேண்டுமே  தவிர,   அரசின் உதவியை நாடி வருபவர்களை உதாசீனப்படுத்தக் கூடாது. 

"அதிகாரம் மனிதனைப் பாழ்படுத்துவதில்லை. ஆனால், முட்டாள்கள் கையில் அதிகாரம் கிடைத்தால், அவர்கள் அதிகாரத்தைப் பாழ்படுத்துகிறார்கள் என்பதே உண்மை'- இது பெர்னார்ட் ஷாவின் கூற்று. 

"அதிகாரம் ஒருவரை சீரழிக்கின்ற தன்மை கொண்டது. எனவே, அதிகாரத்தை நோக்கி பயணிப்பவர் யாராகயிருந்தாலும் அவரை சந்தேகிக்க வேண்டும்'  என்கிறார் பிரான்க் ஹெர்பர்ட். 
காந்திஜி சொல்கிறார்: "அதிகாரம் இரண்டுவகையான அடிப்படைகளிலிருந்து உருவாகிறது. ஒன்று பயத்தின் அடிப்படையில் சுயபாதுகாப்பிற்காக உருவாவது. மற்றொன்று அன்பின் அடிப்படையில் பொது மக்களின் நலனுக்காக உருவாவது.

அந்த வகையில் அரசுப் பணிக்கு, அதிகாரமிக்க பதவிக்கு  வர விரும்புபவர்கள் அல்லது ஏற்கெனவே அப்படி  பணிகளில், பதவிகளில் இருப்பவர்கள் அன்பை, அர்ப்பணிப்பை, கடமை உணர்வை உள்வாங்கிய அறத்தோடும், விழுமியங்களோடும் வர வேண்டும்;  இருக்க வேண்டுமே தவிர, தங்களுக்கு வானளாவிய அதிகாரத்தோடு, பணம் பண்ணுகிற ஓர் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது என்கிற அற்ப எண்ணத்தோடு அப்பாவிகளை, சாமானிய குடிமக்களை உருட்டி, மிரட்டி பிழைக்கக் கூடாது. மக்களை இன்னலுக்கு உள்ளாக்கி பிழைத்துக் கிடக்க அரசுப் பணியை தேர்ந்தெடுக்கத் தேவையில்லை. அது அநியாயம்.

நேர்மைக்கும் பல அதிரடி நடவடிக்கைகளுக்கும் பெயர்போன அதிகாரி இப்பொழுது டெல்லியில் இருக்கிறார். அவரது செயல்களைப் பாராட்டி நாம் வியந்து ஒருமுறை அவரிடம் பேசியபோது இப்படிச் சொன்னார்: ""இந்த பிரம்மாண்ட அரசு இயந்தித்தில் நான் ஒரு மிகச்சிறிய பல்சக்கரம். என்னால் முடிந்த சிறிய பணிகளை உண்மையாகச் செய்கிறேன். 

அவ்வளவுதான்''. இந்தக் கரோனா காலத்து நெருக்கடிகளில், சாமானியர்கள்படும் இன்னல்களை பார்த்து கண்ணீர் விடுகின்றவர்களும் இதே அரசுத் துறையில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அதிகாரிகளுள்  சிலர் தங்களது மாத ஊதியங்களை பலரது தேவைகளுக்காக அப்படியே பிரித்துக் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள். அதற்கு நேர்மாறான அரசு  ஊழியர்களும் இருக்கிறார்கள். நாம் எந்தப்பக்கம் நிற்கின்றோம் என்பதை அரசுப் பணிக்கு ஆசைப்படுவோரும், ஏற்கெனவே பணியில் இருப்பவர்களும் சீர்தூக்கி பார்த்துக் கொள்வது இந்த தேசத்திற்கும் மானுட சமூகத்திற்கும் நல்லது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com