முந்தி இருப்பச் செயல் - 27: பேரப்பேச்சுத் திறன் - 4

​பேரப்பேச்சு 1: உலகப்  புகழ் பெற்ற பேராசிரியர் யொஹான் கால்டுங் "தகராறு கடக்கும் திறன்' பற்றிய ஆங்கிலப் புத்தகம் ஒன்றை 2004-ஆம் ஆண்டு வெளியிட்டார்.
முந்தி இருப்பச் செயல் - 27: பேரப்பேச்சுத் திறன் - 4


பேரப்பேச்சு 1: உலகப் புகழ் பெற்ற பேராசிரியர் யொஹான் கால்டுங் "தகராறு கடக்கும் திறன்' பற்றிய ஆங்கிலப் புத்தகம் ஒன்றை 2004-ஆம் ஆண்டு வெளியிட்டார். தமிழ் மொழியில் இது குறித்து புத்தகங்கள் ஏதுமில்லாத நிலையில், அந்த நூலை மொழிமாற்றம் செய்து தமிழ்நாட்டில் வெளியிட வேண்டுமென்பது எனது பெரு விருப்பமாக இருந்தது.

ஆனால் அவரது எழுத்துகளும், பேச்சுகளும் பெரும் விலை உள்ளவை என்பதாலும், அவரது பதிப்பாளர்கள் அவ்வளவு எளிதில் பதிப்புரிமையைப் பிறருக்குத் தரமாட்டார்கள் என்பதாலும் கேட்கத் தயங்கினேன். மேலும் பேராசிரியர் "முடியாது' என்று சொல்லிவிட்டால், மனது புண்படுமே, அவரோடான உறவு சீர்குலைந்துவிடக் கூடாதே என்றும் அஞ்சினேன்.

ஆஸ்திரியா நாட்டிலுள்ள "ஐரோப்பிய சமாதானப் பல்கலைக்கழகத்தில்' நாங்கள் இருவருமே ஒரே நேரத்தில் கற்பிக்கச் சென்றிருந்தபோது, அவரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன்.

""யொஹான், உங்கள் ஆங்கில நூலை என் தாய்மொழி தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்''

""அதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றனவே?''

""அதனால்தான் உங்களிடம் கேட்கிறேன். ஐரோப்பிய பதிப்பகத்தார் கோரும் அதிகப்படியான பணத்தை என்னால் கொடுக்க முடியாது. ஆனால் உங்களுக்கு சில விடயங்களை என்னால் செய்ய முடியும்.''

""என்னென்ன?''

""கட்டணம் ஏதுமின்றி நான் தமிழில் மொழிபெயர்க்கிறேன். புத்தகத்தை நானே வெளியிடுகிறேன். உங்கள் கருத்துகளை, சிந்தனைகளைப் பன்னிரண்டு கோடி தமிழர்களிடம் கொண்டு சேர்க்கிறேன். ஈழத்தில் நடந்து கொண்டிருக்கும் நீண்டகாலத் தகராறில் உங்கள் விழுமியங்களை விதைக்கிறேன்''

சற்றே சிந்தித்த பேராசிரியர் கால்டுங் பதிப்பாளரிடம் பேசிவிட்டு இசைவு தெரிவித்தார். எனக்கு இன்னும் கொஞ்சம் கேட்டுப் பெறலாம் என்று தோன்றியது.

நூலில் என்னுடைய முன்னுரை ஒன்றையும், ஒரு பேட்டியையும் சேர்த்துக் கொள்கிறேன்.

""என்னுடையப் புத்தகத்தில் இன்னொருவரின் பேட்டியா? யாரது?''

""திருவள்ளுவர். தகராறு மேலாண்மை என்பது எங்களுடைய தொன்மைமிக்க பண்பாட்டிலும், கலாசாரத்திலும் இருக்கிறது என்பதை நிறுவுவதற்காகத்தான்.''
பெரிய விவாதம் ஏதுமின்றி இசைவு தெரிவித்தார். கடந்த 2007-ஆம் ஆண்டு நானும், 2013-ஆம் ஆண்டு "விகடன் பிரசுரமும்' வெளியிட்ட அந்தப் புத்தகம் தமிழ் நாட்டில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்பது வேறு கதை.

பாடம்: ஒரு பேரப்பேச்சு நடப்பதற்கு, நடத்துவதற்கு பெரும் தடையாக இருப்பவை எதிர்த்தரப்பு குறித்து நாமாகவே உருவாக்கி வைத்துக் கொள்ளும் தவறான கற்பிதங்களும், நமது தயக்கமும்தான். இம்மாதிரி தருணங்களில் பேசிவிடுவதும், பேரப்பேச்சின் முடிவுகளை மனமுவந்து ஏற்றுக் கொள்வதும்தான் சிறந்தது.

பேரப்பேச்சு 2: தியோடர் ரூஸ்வெல்ட் 1912-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டார். தேர்தல் இழுபறியாக இருந்த நிலையில், வாக்குப் பதிவுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால், ஓர் உறுதிமொழி துண்டறிக்கையின் முப்பது லட்சம் நகல்களை அச்சிட்டு, நாடு முழுவதும் எடுத்துச் சென்று ஒரு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டார் ரூஸ்வெல்ட்.

அவருடைய கம்பீரமான வண்ணப் படத்துடன் கூடிய துண்டுப்பிரசுரம் அச்சாகி வந்துவிட்டது. பயணத் திட்டம் தயாராயிற்று; ஏற்பாடுகள் முடிந்துவிட்டன.

திடீரென தேர்தல் குழுவிலிருந்த ஒருவர் ஒரு பிரச்னையைச் சுட்டிக்காட்டினார். துண்டறிக்கையிலிருந்த ரூஸ்வெல்ட் படத்தின் கீழே "மஃப்ஃபட் ஸ்டுடியோஸ், சிகாகோ' என்று எழுதப்பட்டிருந்தது. அதாவது அந்தப் புகைப்படத்தின் பதிப்புரிமை மேற்படி நிறுவனத்துக்கு மட்டுமே உரியது என்று அர்த்தம்.

ரூஸ்வெல்ட் அணி திகைத்துப் போயிற்று. அந்த துண்டறிக்கையைப் பயன்படுத்தினால், நகலுக்கு ஒரு டாலர் வீதம் முப்பது லட்சம் டாலர் அந்த ஸ்டுடியோ உரிமையாளருக்குக் கொடுக்க வேண்டும். பிரச்னைக்குரிய படத்தை நீக்கிவிட்டு, வேறொரு துண்டறிக்கையை அச்சிடுவதற்கு போதிய நேரம் இருக்கவில்லை. துண்டறிக்கை ஏதுமில்லாமல் மக்களைச் சந்திப்பதும் உரிய பயனளிக்காது. குறிப்பிட்ட அந்த உறுதிமொழிகளை மக்களுக்குக் கொடுப்பது மிகவும் முக்கியம் என்றெண்ணினார் ரூஸ்வெல்ட்.

மஃப்ஃபட் ஸ்டுடியோ உரிமையாளரோடு பேச வேண்டிய தேவை எழுந்தது. அவரைப் பற்றி விசாரித்ததில், ஓய்வுபெறும் நிலையில் இருந்த மஃப்ஃபட் பெரும் பணத்தேவைகளோடு இருக்கிறார் என்பது தெரிந்தது. எனவே எளிதில் விடமாட்டார் என்பதும் புரிந்தது. செய்வதறியாது விழி பிதுங்கி நின்ற ரூஸ்வெல்ட் குழுவினர் அவர்களுடைய தேர்தல் பொறுப்பாளர் ஜார்ஜ் பெர்கின்ஸ் என்பவரிடம் விடயத்தைச்சொன்னார்கள்.

பேரப்பேச்சு அனுபவமிக்க பெர்கின்ஸ் கணமும் தாமதிக்காமல் களத்தில் இறங்கினார். மஃப்ஃபட்டுக்கு ஒரு தந்தி அனுப்பினார்: "நாங்கள் ரூஸ்வெல்ட் அவர்களின் படத்துடன் பல லட்சம் துண்டறிக்கைகள் அச்சடித்து நாடு முழுவதும் விநியோகிக்கப் போகிறோம். நாங்கள் தேர்வு செய்யும் படத்தின் உரிமையாளருக்கு ஆகப் பெரிய விளம்பரம் கிடைக்கும்.

உங்கள் ஸ்டுடியோ படத்தை நாங்கள் பயன்படுத்தினால், எங்களுக்கு எவ்வளவு பணம் தருவீர்கள்? உடனடியாகப் பதில் சொல்லுங்கள்'

மஃப்ஃபட்டிடமிருந்து பதில் பறந்து வந்தது.

"நாங்கள் இம்மாதிரி எதையும் இதற்கு முன்னால் செய்ததில்லை. ஆனாலும் இந்தச் சூழலில் 250 டாலர் தருகிறோம்.'

மேலதிக பேரப்பேச்சு ஏதுமின்றி, பெர்கின்ஸ் இசைவு தெரிவித்து தந்தி அனுப்பினார். பிரச்னை முடிந்தது.

"புகைப்படத்தின் கீழிருந்த பெயரைப் பார்க்காமல் விட்டுவிட்டோமே, மூன்று மில்லியன் டாலர் வேண்டுமே, பணம் இல்லையே, வேறொன்றை அச்சடிக்க நேரம் இல்லையே, துண்டறிக்கை இல்லாமல் தோற்றுப் போவோமே' என்றெல்லாம் உங்கள் பிரச்னைகள் பற்றி மட்டுமே சிந்தித்து குழம்பிக் கொண்டிருக்காமல், எதிர்த்தரப்பைப் பற்றியும் சிந்தியுங்கள்.

"மஃப்ஃபட்டுக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பதே தெரியாது. அவர் எதையும் இழக்கவுமில்லை. நாமே இதைப் பெரிதுபடுத்தி, அவரையும் அப்படியே எதிர்வினையாற்றச் செய்து, நமக்கு நாமே ஒரு பிரச்னையை ஏற்படுத்திக்
கொள்ளத் தேவையில்லை' என்றே சிந்தித்தார் பெர்கின்ஸ்.

அவர் முழு உண்மையைச் சொல்லாமல் மறைத்தது, அச்சடித்த பிறகு அனுமதி வாங்க முயன்றது போன்ற பல்வேறு நியாயமற்ற செயல்கள் இதில் படிந்திருந்தாலும், பேரப் பேச்சு நடத்துபவர்களுக்கு இந்த சம்பவத்தில் ஒரு பாடம் இருக்கிறது.

பாடம்: பேரப்பேச்சில் சூழல்தான் உத்திகளை நிர்ணயிக்கிறது. எதிர்த்தரப்புக்கு என்ன வேண்டும் என்பதைக் கண்டுபிடித்து, அதை அவர் அடைய உதவி செய்தால், பேரப்பேச்சு வெற்றியடையும். ஆனாலும் "முடிவுதான் வழியைத் தீர்மானிக்கிறது' என்றில்லாமல், நீதி நியாயங்களைக் கடைபிடிப்பதும் இன்றியமையாதது.

பேரப்பேச்சில் ஈடுபடும் முன்னர் உரிய முன் தயாரிப்புகளை முழுமையாகச் செய்து கொள்ளுங்கள். பேரப்பேச்சின்போது, உரிய கேள்விகளைக் கேளுங்கள். பேரப்பேச்சுக்குப் பிறகு, ஏற்படுத்தும் உடன்படிக்கையைத் தவறாது நிறைவேற்றுங்கள்.

உலக வர்த்தக நிறுவனத்தில் நடக்கும் வியாபாரத் தகராறுகள், சர்வதேச நிதி மையத்தில் எழும் கடன் பிரச்னைகள், பன்னாட்டு நிறுவனங்களில் உருவாகும் சிக்கல்கள் என உலகளாவிய பேரப்பேச்சுகள் ஓராயிரம் நடக்கின்றன ஒவ்வொரு நாளும்.

தேர்தலில் போட்டியிட "சீட்' வாங்க வேண்டுமா? உங்கள் கட்சியிலுள்ள பிற போட்டியாளர்களிடம் நீங்கள் பேரப்பேச்சு நடத்த வேண்டும். கட்சித் தலைமையிடம் பேரப்பேச்சு நடத்தி "சீட்' வாங்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களிடம் பேரப்பேச்சு நடத்தி வாக்குச் சேகரிக்கவேண்டும்.

நமது வாழ்க்கைத்துணையோடு, குழந்தைகளோடு, உறவினர்களோடு, உடன் பணிபுரிபவரோடு என வாழ்க்கை முழுவதும் பேரப்பேச்சு நடத்துகிறோம். கடைகளில், காவல்நிலையங்களில், பணியிடங்களில் என விழித்தெழும் நேரம் முதல் உறங்கும் நேரம் வரை அன்றாடம் எத்தனை எத்தனை பேரப்பேச்சுகள், எத்தனை விதமான பேரப்பேச்சுகள் நடத்துகிறோம்? பேரப்பேச்சின்றி வாழ்க்கையில் பெறுவது எதுவுமே இல்லை.

ஆனாலும் மறந்தும் கூட, மருந்துக்குக் கூட இதைப் பற்றி ஒரு பாடமோ, படிப்போ எங்குமே நடப்பதில்லை; ஒரு பாடப் புத்தகமோ, பயிற்றுவிப்பவரோ இருப்பது எவருக்கும் தெரியாது. கருத்தரிப்பதற்குக் கூட மருத்துவமனைகள் வந்துவிட்ட இக்காலத்தில், பேரப்பேச்சு போன்ற அடிப்படை வாழ்க்கைத் திறன்களின் கல்விக்கென பள்ளிக்கூடங்களும், பாடத்திட்டங்களும் வந்தாக வேண்டும்.

(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தொடர்புக்கு: spuk2020@hotmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com