கண்காணிப்புப் பணி மனிதர்கள் தேவையில்லை!

மனிதர்களின் ஒவ்வோர் அசைவையும் கண்காணிக்கக் கூடிய பல கருவிகள், வசதிகள் இப்போது வந்துவிட்டன. ஒருவருக்குத் தெரியாமலேயே அவருடைய ஒவ்வொரு செயலையும் கண்காணிக்க முடியும்.
கண்காணிப்புப் பணி மனிதர்கள் தேவையில்லை!

மனிதர்களின் ஒவ்வோர் அசைவையும் கண்காணிக்கக் கூடிய பல கருவிகள், வசதிகள் இப்போது வந்துவிட்டன. ஒருவருக்குத் தெரியாமலேயே அவருடைய ஒவ்வொரு செயலையும் கண்காணிக்க முடியும். சாலையில் நடந்து செல்கிறீர்களா? வாகனத்தை ஓட்டிச் செல்கிறீர்களா? அலுவலகத்துக்குள் நுழைகிறீர்களா? வேலை செய்ய வேண்டிய நேரத்தில் செல்லிடப் பேசியை நோண்டிக் கொண்டு இருக்கிறீர்களா? கரோனா காலத்தில் உங்களுடைய உடலின் வெப்பநிலை என்ன? இப்படி உங்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் உங்களுக்குத் தெரியாமலேயே கண்காணிக்கக் கூடிய கருவிகள் வந்துவிட்டன.
 இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி அன்றாட நடவடிக்கைகளை மனிதர்களைப் பயன்படுத்தாமல் ஒரு நிறுவனம் மேலாண்மை செய்ய முடியும்.
 இவ்வாறு கண்காணிப்பு மேலாண்மை செய்வதற்கு நிறுவனங்களுக்கு உதவும்விதமாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட "டைகாம் இந்தியா' என்ற நிறுவனம்.
 பெரும்பாலான நிறுவனங்களில் தங்களுடைய நிறுவனத்துக்குள் வருகிற மனிதர்களை, வாகனங்களைக் கண்காணிக்க சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியிருக்கிறார்கள். நிறுவனத்துக்குள் பணியிடங்களில் பொருத்தப்பட்டுள்ள அவற்றின் மூலம் பணியாளர்களின் செயல்களைக் கண்காணிக்கிறார்கள். ஆனால் இதில் ஒரு பிரச்னை உள்ளது. சிசிடிவி கேமரா மூலம் தெரிய வருகிற காட்சிகளைத் தொடர்ந்து பார்த்து அவற்றைப் பற்றிய முடிவுகளை எடுக்க மனிதர்கள் தேவை. மேலும் இந்த சிசிடிவி அல்லது விடியோ அனலிட்டிக்ஸ் மூலம் நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கு அதிக செலவு ஆகும். இதற்கென சர்வர் தேவைப்படும். இம்மாதிரியான பிரச்னைகள் இல்லாத கண்காணிப்பு அமைப்புமுறையை உருவாக்கியிருக்கிறார்கள் டைகாம் இந்தியா நிறுவனத்தினர்.

ரோபோட்டிக் செயல் அடிப்படையில் இயங்கக் கூடிய கேமராவுடன் இணைந்த தானியங்கி கருவியை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தக் கருவி செயல்படுகிறது.
 ""விடியோ அனலிட்டிக்ஸ் முறையில் ஓர் இடத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த ஒலி, ஒளி வடிவிலான தரவுகளை மட்டுமே எடுத்துத் தர முடியும். அந்த தரவுகளைப் பயன்படுத்தி தேவைப்படும் முடிவுகளை மனிதர்கள்தாம் எடுக்க வேண்டும். ஆனால் நாங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலமாக சுயமான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்தும் கருவியை உருவாக்கியிருக்கிறோம். அதன் மூலம் ஓர் இடத்தில் நடைபெறும் நிகழ்வுகளை மனிதர்கள் தலையிடாமலேயே கட்டுப்படுத்த முடியும்'' என்கிறார் இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ககான் ராண்டோவா.
 2015 - இல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் அண்மையில் ஜப்பான், ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் தனது பணியைச் செய்து வருகிறது.
 "இந்தத் துறையில் விடியோ அனலிட்டிக்ஸ் முறையில் செயல்படும் ஏராளமான நிறுவனங்கள் ஏற்கெனவே உள்ளன. அவை நிறுவனங்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்து தருவதில்லை. நிறுவனங்களின் தனிப்பட்ட தேவைக்கேற்றவிதத்தில் கண்காணிக்கும் அமைப்பை ஏற்படுத்துவதற்காகவே நாங்கள் ரோபோட்டிக் பிராசெஸ் ஆட்டோமேஷன் முறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். உதாரணமாக ஓர் ஐந்து நட்சத்திர ஓட்டலின் அன்றாடச் செயல்களும், ஒரு கார் தயாரிக்கும் நிறுவனத்தின் அன்றாடச் செயல்களும் வெவ்வேறானவை. இந்தச் செயல்களைக் கண்காணிக்கும் அமைப்புமுறைகளும் வேறு வேறாக இருக்க வேண்டும். கண்காணிக்கும் அமைப்பு முறையில் தேவைக்கேற்ற மாறுதல்களைச் செய்ய வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்து தருகிறோம். ஒரு நிறுவனத்தின் கண்காணிக்கும் செயல்கள் எளிதாக இருக்க வேண்டும்; செலவு குறைந்ததாக இருக்க வேண்டும்; மனிதர்களை அதிகம் சார்ந்ததாக இருக்கக் கூடாது'' என்கிறார் ககான் ராண்டோவா.
 உதாரணமாக கரோனா காலத்தில் மனிதர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும். இதை இவர்களுடைய கேமரா கருவி கண்காணித்து உரிய தகவல்களை உடனுக்குடன் தெரியப்படுத்திவிடும்.
 வங்கிகள், ஏடிஎம்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு மிகவும் முக்கியம். இங்கே நுழைபவர்கள் வழக்கத்துக்கு மாறான ஏதேனும் பொருள்களை எடுத்துவருகிறார்களா? துப்பாக்கி போன்ற ஆயுதங்களை எடுத்து வருகிறார்களா? முகமூடி, ஹெல்மெட், குண்டுதுளைக்காத ஆடை ஆகியவற்றை அணிந்து வந்திருக்கிறார்களா என்பதை இவர்கள் உருவாக்கியிருக்கும் கேமரா கருவி கண்டுபிடித்துவிடும். அப்படி ஏதாவது இருந்தால் உடனே உரிய அலுவலர்களுக்குத் தெரியப்படுத்திவிடும்.
 துறைமுகங்களில் நுழைவு வாயில்களில் இவர்கள் உருவாக்கியுள்ள கேமரா கருவியைப் பொருத்திவிட்டால், உள்ளே நுழையும், வெளியே செல்லும் வாகனங்களின் எண், எப்போது உள்ளே சென்றது, எப்போது வெளியே சென்றது என்பன போன்ற விவரங்களைத் தெரிவித்துவிடும்.
 ஒரு நிறுவனத்தின் பணியாளர்கள் இந்த கருவியின் முன் முகத்தைக் காட்டினால், முக அடையாளங்களைப் பதிந்து வைத்துக் கொண்டு, அவர்களைப் பற்றிய எல்லாவிவரங்களையும் சொல்விவிடும். நிறுவனத்தின் வருகைப் பதிவேட்டிற்குப் பதிலாக இந்தக் கருவி செயல்படும்.
 விமானநிலையங்களில் செய்யப்படும் சோதனைகளை இந்தக் கருவி வருங்காலத்தில் மிக எளிதாக்கிவிடும். சோதனைகளுக்கான நேரம் குறைந்துவிடும்.

கரோனா பொதுமுடக்க காலத்தில் பல நிறுவனங்கள் மூடிக் கிடந்தன. செயல்பட்ட ஒன்றிரண்டு அத்தியாவசியப் பணிகளைச் செய்யும் நிறுவனங்கள் ஆட்கள் பற்றாக்குறையால் கண்காணிப்பு பணிகளைச் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருந்தன. டைகாம் நிறுவனத்தின் கேமரா கருவிகளின் துணையோடு அந்நிறுவனங்கள் கண்காணிப்புப் பணிகளைச் செய்ய முடிந்தது.
 தென்னிந்திய ரயில்வே, மெக்டொனால்ட்ஸ், ஸ்டாண்டர்டு சார்டெர்டு பேங்க், எரிக்ஸன், ஹிட்டாச்சி பேமெண்ட் சர்வீஸஸ் போன்ற நிறுவனங்கள் இவர்களுடைய வாடிக்கையாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 - ந.ஜீவா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com