புதிய தொழில்நுட்பங்கள்...கற்கும் வழி இதுதான்!

21-ஆம் நூற்றாண்டைத் "தொழில்நுட்ப வளர்ச்சிக்கான நூற்றாண்டு' என்று கூறினால், அது மிகையாகாது.
புதிய தொழில்நுட்பங்கள்...கற்கும் வழி இதுதான்!

21-ஆம் நூற்றாண்டைத் "தொழில்நுட்ப வளர்ச்சிக்கான நூற்றாண்டு' என்று கூறினால், அது மிகையாகாது. நடப்பு நூற்றாண்டின் முதல் 20 ஆண்டுகளைத் தொழில்நுட்ப வளர்ச்சியே அதிக அளவில் ஆக்கிரமித்திருந்தது. அத்தகைய ஆக்கிரமிப்பு வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்றே எதிர்பார்க்கலாம்.
 மக்களின் தேவைக்கேற்ப நாள்தோறும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றன. ஏற்கெனவே உள்ள தொழில்நுட்பங்கள் மேம்பாடு அடைகின்றன. அத்தகைய தொழில்நுட்பங்களைக் கற்றால் மட்டுமே எதிர்காலத்தில் நாமும் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்க முடியும்.
 தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போர் மட்டுமல்லாமல், அங்கு ஏற்கெனவே பணிபுரிந்து வருபவர்களும் புதிய தொழில்நுட்பங்களைக் கற்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இல்லையென்றால், பணியில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் பின்தங்கிவிடுவோம்.
 எனவேதான் புதிய தொழில்நுட்பங்களைக் கற்க வேண்டியது மிகவும் அவசியம். பலருக்கும் அவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியே காணப்படும். ஆனால், அதற்காக அவர்கள் கடைப்பிடிக்கும் நடைமுறைகள் தவறுதலாக அமைந்து அவர்களைத் தோல்விப் பாதையில் பயணிக்க வைத்துவிடுகின்றன.
 அடிப்படைகளே அடித்தளம்: புதிய தொழில்நுட்பங்களை எந்த வகையில் நாம் கற்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அவற்றைக் கற்பதற்கு முன் தொழில்நுட்பம் சார்ந்த அடிப்படைகளை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். உதாரணமாக, பைத்தான் உள்ளிட்ட நிரல் மொழிகளை (புரோகிராமிங் லாங்வேஜ்) கற்க விரும்புவோர், ஹெச்டிஎம்எல், ஜாவாஸ்கிரிப்ட், ஹெச்டிடிபி உள்ளிட்ட அடிப்படைகளையும் கற்றுக் கொள்வது பெரும் பலனளிக்கும்.
 எந்தவொரு விஷயத்தையும் கற்பதற்கு முன்பு, அதன் அடிப்படைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்வது, மற்ற விஷயங்கள் கற்பதை எளிமைப்படுத்தி விடும். அடிப்படைத் தொழில்நுட்பங்களைக் கற்பதற்கு அதிக நேரம் செலவாகலாம்; மனச்சோர்வை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு. ஆனால், உயரமான கட்டடத்தை எழுப்புவதற்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதைப் போல, பல்வேறு தொழில்நுட்பங்களை எளிதாகவும் விரைவாகவும் கற்பதற்கு அடிப்படைகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
 பயிற்சி வகுப்புகள் மட்டும் போதாது: புதிய தொழில்நுட்பங்களைக் கற்க ஆரம்பிப்போர், இணையதள பயிற்சி வகுப்பையே பெரும்பாலும் நாடுகின்றனர். ஆனால், அந்தப் பயிற்சி வகுப்பை மட்டுமே நம்பியிருப்பது எந்தவிதப் பலனையும் அளிக்காது. பயிற்சி வகுப்புகள் என்பவை தொடக்கநிலை மட்டுமே. அந்தத் தொழில்நுட்பத்தில் நாம் சிறந்து விளங்க வேண்டுமெனில், நம்முடைய முழு ஈடுபாட்டையும் அதில் செலுத்தி கற்க வேண்டும்.
 பயிற்சி வகுப்பில் கூறுவதை மட்டும் செய்துவிட்டு அவற்றை மனப்பாடம் செய்து வருவதால், நம்முடைய இலக்கை நம்மால் அடைய முடியாது. வகுப்பில் கூறப்படுவதுடன் மேலும் பல பிரச்னைகளுக்குத் தொழில்நுட்பத்தின் மூலமாகத் தீர்வு காண முயல வேண்டும். நிகழ்காலப் பிரச்னைகளுக்குத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தீர்வு காண முயல்வதே நம் திறமையை அதிகரிக்கும்.
 வெறும் பயிற்சி வகுப்பில் கூறப்படுவதை மட்டும் மனனம் செய்தால், அத்தகைய பிரச்னைகளைத் தவிர மற்ற பல்வேறு விதமான பிரச்னைகளுக்கான தீர்வை நம்மால் கொடுக்க இயலாது. எனவே, பயிற்சி வகுப்புகள் என்பவை வெறும் தொடக்கநிலை மட்டுமே என்பதைத் தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 செயல்படுத்துவதே சிறந்தது: பயிற்சி வகுப்புகளை விரைவில் முடித்துவிட்டு பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகளை உருவாக்க சுயமாக முயற்சிக்க வேண்டும். அதுவே நம்மை அடுத்தநிலைக்கு எடுத்துச் செல்லும். பயிற்சி வகுப்பில் கற்றுக் கொண்டதை நிகழ்காலப் பிரச்னைகளில் பயன்படுத்தித் தீர்வு காண்பது எவ்வாறு என்பதையும் நாம் கற்றுக் கொள்ள முடியும். எனவே, வகுப்பில் கற்றுத் தரப்படுவதைப் புரிந்து கொண்டால் மட்டுமே போதுமானது.
 "சைக்கிள் ஓட்டுவது எப்படி' என்று காணொலி வாயிலாகக் காண்பதன் மூலமாக மட்டுமே நம்மால் சைக்கிளை ஓட்டிவிட முடியாது. சைக்கிளை எடுத்து அதை ஓட்டிப் பழக வேண்டும். அதே போலத்தான் புதிய தொழில்நுட்பங்களைக் கற்பதும். பல்வேறு பிரச்னைகளுக்குத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தீர்வு காண்பதன் மூலமாகவே புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும்.
 அதுவே நம் கற்றலை முழுமைப்படுத்தும். நம் மதிப்பு உயர்வதோடு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பும் பணிஉயர்வும் பிரகாசமாகும். அனுபவத்தின் மூலமாகக் கற்பதே சிறந்த கல்வியாக அமையும். அது நம் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்.
 தேவையான நேரத்தை ஒதுக்குங்கள்: அதே வேளையில், மிகப் பெரிய பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண முயலக் கூடாது. தேவை, நம் திறன் உள்ளிட்டவற்றைச் சரியாக ஆராய்ந்து, பிரச்னைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சிறிய பிரச்னைகளுக்குத் தீர்வு கண்ட பிறகு பெரிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயலலாம்.
 நமக்கான காலத்தை முறையாக நிர்ணயித்துக் கொண்டு, அதற்குள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயல வேண்டும். தேவை ஏற்படும்போது நிபுணர்கள், அனுபவமுள்ளவர்களிடம் தொழில்நுட்பங்கள் சார்ந்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். முடிந்தால், புதிய தொழில்நுட்பங்களைக் கற்கும் அதே வேளையில், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்காகப் பணியாற்ற முயற்சி செய்யலாம். அது கற்றலையும் மேம்படுத்தும்.
 தற்காலத்தில் குறைந்த நேரத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கற்க வேண்டிய தேவையுள்ளது. எனவே, கவனத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட்டு தொழில்நுட்பங்களை விரைவில் கற்போம்.
 -சுரேந்தர் ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com