முகக்கவசமாகும் பிளாஸ்டிக் பாட்டில்கள்!

கரோனா தொற்றின் காரணமாக முகக்கவசம் அணிவது நமக்குப் பழக்கமாகிவிட்டது.
முகக்கவசமாகும் பிளாஸ்டிக் பாட்டில்கள்!

கரோனா தொற்றின் காரணமாக முகக்கவசம் அணிவது நமக்குப் பழக்கமாகிவிட்டது. பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் இயங்கத் தொடங்கிய பிறகு, முகக்கவசத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது.

சாலையோரத்தில் விற்கப்படும் முகக்கவசங்கள் முதல் பெரிய மருந்துக் கடைகளில் விற்கப்படும் முகக்கவசங்கள் வரை முகக்கவசங்களின் தயாரிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. விற்கப்படும் எல்லா முகக்கவசங்களும் கரோனா தீநுண்மியைத் தடுத்து நிறுத்தும் திறன் உடையதாக இருக்குமா? என்ற ஐயம் எழுவது இயல்பானதே.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி நகரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் (ஐஐடி -மண்டி) சேர்ந்த மாணவர்கள், ஒரு வித்தியாசமான முகக்கவசத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
நாம் குளிர்பானங்களைக் குடித்துவிட்டுத் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தி முகக்கவசத்தை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

ஐஐடி - மண்டியில் என்ஜினியரிங் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் சுமித் சின்ஹா ரே என்பவரின் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த முகக்கவசத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தக் குழுவில் ஆராய்ச்சி மாணவர்களான ஆஸ்ஹிஸ் ககோரியா, ஷீஷேங் சிங் சாண்டெல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

பிளாஸ்டிக் பாட்டில்களை அதிகமாகப் பயன்படுத்தி, அவற்றைத் தூக்கியெறிந்து பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளை பல நாடுகள் ஏற்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட நாடுகளில் பிளாஸ்டிக் சுற்றுச்சூழல் கேடு ஏற்படுத்தும் 15 - ஆவது பெரிய நாடாக நம் நாடு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 26 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை நாம் வெளித்தள்ளுகிறோம்.

கரோனா தொற்று ஏற்பட்டவுடன் ஆன்லைன் மூலம் உணவு மற்றும் பொருள்களை வாங்குவது அதிகரித்திருப்பதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை அதிகப்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில்தான் ஐஐடி - மாணவர்கள் இந்த முகக்கவசத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

அவர்கள் உருவாக்கியிருக்கிற முகக்கவசம் உண்மையிலேயே கரோனா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்குமா? பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து முகக்கவசத்தை எப்படிச் செய்கிறார்கள்? இப்படி பல கேள்விகள்...

ஐஐடி - மண்டி ஆராய்ச்சியாளர்கள் முதலில் பிளாஸ்டிக் பாட்டில்களை துண்டு துண்டாக உடைத்து தூளாக்குகிறார்கள். அவற்றை சில திரவங்களில் போட்டு கலக்குகிறார்கள். திரவங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கலந்து விடுகின்றன. அந்தக் கலவையில் இருந்து நானோ ஃபைபரை எடுக்கிறார்கள். பிரித்தெடுக்கப்பட்ட அந்த பிளாஸ்டிக் நானோ ஃபைரைப் பயன்படுத்தி முகக்கவசங்களைத் தயாரிக்கிறார்கள்.

இவர்கள் தயாரித்திருக்கும் முகக்கவசத்தில் பயன்படுத்தப்படும் நானோ ஃபைபர் மனித முடியைவிட 250 மடங்கு மெல்லியது. மனித முடி 50 மைக்ரோமீட்டர்கள் அளவு பருமனானது. அதாவது 0.05மில்லி மீட்டர் அளவு பருமனானது. அதைவிட 250 மடங்கு நானோ ஃபைபர் மெல்லியது.

அவ்வளவு மெல்லியதான நானோ ஃபைபரை நெருக்கமாகப் பின்னி அதன் மூலமாக செய்யப்படும் முகக்கவசத்தின் ஊடாக கரோனா தீநுண்மி உள்ளே புக வாய்ப்பில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தீநுண்மி, பாக்டீரியாக்கள், இதர கிருமிகளை உள்ளே விடாமல் ஒரு முகக்கவசம் தடுக்க வேண்டும். மூச்சுவிடுவதைச் சிரமமாக்கக் கூடாது. இந்த இரண்டு தன்மைகளும் ஏற்கெனவே தயாரித்து விற்கப்படுகிற முகக்கவசங்களில் எந்த அளவுக்கு இருக்கிறது என்று பார்த்தால் அவற்றில் பல குப்பைக் கூடைகளில் போடும் தரத்தில்தான் உள்ளன. பல முகக்கவசங்களில் இந்த இரண்டு தன்மைகளும் இருப்பதில்லை. தீநுண்மிகளைத் தடுக்கும் திறன் உடைய சில முகக்கவசங்களை அணிந்தால் மூச்சுவிடச் சிரமமாக இருக்கிறது. மூச்சுவிட எளிதாக இருந்தால் தீ நுண்மிகள் தடுக்கப்படுவதில்லை.

""நாங்கள் தயாரித்திருக்கும் நானோ ஃபைபரைக் கொண்டு தயாரிக்கப்படும் முகக்கவசங்களின் செயல்திறன் உண்மையிலேயே வியப்படைய வைக்கிறது. மருத்துவப் பணியாளர்கள் பயன்படுத்தும் பல முகக் கவசங்கள் கூட மூச்சுவிடுவதைச் சிரமமாக்கிவிடுகின்றன. நாங்கள் தயாரித்திருக்கும் நானோஃபைபர் முகக்கவசம் இந்தக் குறைகள் இல்லாமல் இருக்கிறது. மூச்சுவிட எளிதாக இருப்பதுடன் 98 சதவிகிதம் தீநுண்மிகளை உள்ளே விடாமல் தடுக்கும் திறன் உடையதாகவும் இருக்கிறது'' என்கிறார் ஆராய்ச்சிக் குழுவின் வழிகாட்டியாகச் செயல்பட்ட சுமித் சின்ஹா ரே.

பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி நானோ ஃபைபரை உருவாக்கும் முயற்சியில் 2018 - ஆம் ஆண்டு முதலே இந்தக் குழுவினர் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். 2020 இல் கரோனா தொற்று ஏற்பட்டதும் இவர்கள் முழுமூச்சுடன் இந்தப் பணியில் ஈடுபட்டு, முகக்கவசத்தைத் தயாரித்திருக்கின்றனர்.

சோதனை நிலையில் உள்ளது இந்த முகக்கவசத் தயாரிப்பு. ஒரு முகக்கவசத்தின் தயாரிப்பு விலை ரூ.25 ஆக உள்ளது என்றாலும், பெரிய அளவில் தயாரிக்கும்போது விலை பாதியாகக் குறைய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும்விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த முகக்கவசத்தை அதிக அளவில் பயன்படுத்தினால் - பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்தால்- அது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதா? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

""இந்த முகக்கவசத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். ஒரு முகக்கவசத்தை குறைந்தது 30 முதல் 40 தடவைகள் வரை பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தி தூக்கியெறியப்படும் முகக்கவசங்களை மீண்டும் சுழற்சி முறையில் நானோ ஃபைபர்களாக மாற்றி மீண்டும் மீண்டும் முகக்கவசங்களைச் செய்து கொண்டே இருக்கலாம்'' என்கிறார் சுமித் சின்ஹா ரே.

இந்த முகக்கவசம் ஒருபுறம் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கிறது; இன்னொரு புறம் தீநுண்மித் தொற்றிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கிறது. இரட்டைப் பயன்கள் இந்த முகக்கவசத்தில்... ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களைஅடிப்பதைப் போல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com