புதிர் விளையாட்டு... மூளைத்திறன்!

புதிர் விளையாட்டு... மூளைத்திறன்!

கணிதம் என்ற வார்த்தையைக் கேட்டாலே பலர் ஓடி ஒளிந்துகொள்கின்றனர். கணிதம்  எண்களைப் பயன்படுத்தி தீர்வு காணும் ஒரு முயற்சியாக இருக்கிறது.


கணிதம் என்ற வார்த்தையைக் கேட்டாலே பலர் ஓடி ஒளிந்துகொள்கின்றனர். கணிதம் எண்களைப் பயன்படுத்தி தீர்வு காணும் ஒரு முயற்சியாக இருக்கிறது. சரியான விடை வர வேண்டும். கிட்டத்தட்ட கணிதம் போன்றதே புதிர் விளையாட்டு. மூளையைக் கசக்கித் தீர்வு காண வேண்டியதாக அது இருக்கிறது. இதனாலேயே பஸ்ஸில்ஸ் என்றதும் நம்மால் எல்லாம் முடியாது என்று பலர் நினைத்து ஒதுங்கிச் செல்கின்றனர்.

ஆனால் நம் வீட்டுக் குழந்தைகள் நம்மைவிடப் பல மடங்கு ஆர்வத்துடன் இந்த புதிர் விளையாட்டில் ஈடுபடுகின்றனர். அதிலும் குறிப்பாக ஜிக்ஸா பஸ்ஸில்ஸ் என்று சொல்லப்படக் கூடிய வெட்டப்பட்ட பல துண்டுகளைப் பொருத்தி, குறிப்பிட்ட உருவ அமைப்பைக் கொண்டு வரும் பஸ்ஸில்ஸ் விளையாட்டில் இரண்டு வயதுக் குழந்தைகள் கூட நிபுணர்களாக இருக்கிறார்கள். இப்போது அது குழந்தைகளை மட்டுமல்லாமல், பெரியவர்களையும் தனக்குள் ஈர்த்துக் கொண்டுவிட்டது.

புதிர்கள் நம் வாழ்க்கையுடன் எப்போதும் தொடர்புடையவை எனலாம். வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ளும் நாம் அதற்கான தீர்வை நோக்கிப் பயணிக்கிறோம். அவற்றில் சிலவற்றுக்கு பதில் கிடைக்கின்றன. பலவற்றுக்கு கிடைப்பதில்லை. ஆனால் அனைத்துக்குமே விடை உண்டு. பதில்களைக் கண்டறிந்து தீர்வு காண்பதில்தான் நம் திறன் உள்ளது. நம்முள் ஒளிந்திருக்கும் அந்த திறமையை வெளிக்கொண்டு வருவதே புதிர்விளையாட்டுகளின் வேலை. புதிர் விளையாட்டு ஒருவரின் புத்திக் கூர்மையை சோதித்துப் பார்க்கிறது.

பஸ்ஸில்ஸ் என்றால் புதிர்கள். இது பஸ்ஸில் என்ற வார்த்தையிலிருந்து உருவானது. "பஸ்ஸில்' என்பதற்கு "குழப்பம்' என்று பொருள்.

புதிர் விளையாட்டுகளில் குறுக்கெழுத்துப் புதிர், எண் புதிர், கணிதப் புதிர், சொற்புதிர் என பல வகைகள் உள்ளன.

ஜிக்சா புதிர்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைவரையும் ஈர்க்கும் வெறித்தனமான பொழுதுபோக்குகளில் ஒன்று ஜிக்சா புதிர். ஜிக்சா புதிர்கள் படைப்பாற்றலை அதிகரிப்பதாகவும், மாறுபட்ட சிந்தனையை உருவாக்குவதாகவும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

புதிர்களில் மிகவும் பிரபலமான இந்த ஜிக்சா புதிர் விளையாட்டுதான் முதன் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட அறிவுப்பூர்வமான விளையாட்டு.

இது 1760- களில் ஐரோப்பாவில் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப்பட்டாலும் 1767 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த அச்சுத் தொழிலாளி ஜான் ஸ்பில்பரி என்பவர் புவியியல் பாடத்தை மாணவர்களுக்கு விளக்குவதற்கு முதல்முறையாக இம்முறையைப் பயன்படுத்தினார்.வண்ணம் தீட்டப்பட்ட மரப்பலகையில் ஒரு மேப்பை ஒட்டி, அந்த மேப்பின் ஒவ்வொரு பகுதியையும் சிறுதுண்டுகளாக வெட்டினார் ஜான் ஸ்பில்பரி.

அந்தச் சிறுதுண்டுகளை இணைப்பதன் மூலமாக மாணவர்கள் புவியியல் அறிவைப் பெறுவதற்கே இவ்வாறு செய்தார். அப்படி சிறுதுண்டுகளாக வெட்டுவதற்கு ஜிக்சா என்ற சிறு வாள் பயன்படுத்தப்பட்டது. அதனால்தான் பல துண்டுகளை இணைக்கும் புதிர் விளையாட்டுக்கு ஜிக்சா புதிர் விளையாட்டு என்று பெயர் வந்தது. மாணவர்களைத் தாண்டி இது அங்கிருந்த மக்களிடமும் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் மத்தியில் பிரபலமானது.

1900-களில் பல்வேறு துறை சார்ந்த விளம்பரத்திற்கும் இந்த ஜிக்சா புதிர்விளையாட்டு பயன்படுத்தப்பட்டது. நிறுவனங்கள் பல தங்கள் உற்பத்தி பொருள்களை விளம்பரப்படுத்த புதிர்கள் அடங்கிய பரிசுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளனர். இதனால் ஜிக்சா புதிர்விளையாட்டுகள் உலக அளவில் பிரபலமாகின.

ஜிக்சா புதிர்விளையாட்டில் ஒவ்வொரு துண்டின் விளிம்பும் சரியான மற்றொரு துண்டின் விளிம்புடன் சேர வேண்டும். அதற்கு பொருத்தமான பகுதியைக் கண்டறிந்து பொருத்த வேண்டும்.

ஜெர்மன் விளையாட்டு கம்பெனியைச் சேர்ந்த ராவன்ஸ்பர்கர் என்பவர் உருவாக்கிய 40 ஆயிரத்து 370 துண்டுகளைக் கொண்ட ஜிக்சா புதிர்விளையாட்டுதான் கடினமான புதிர்விளையாட்டாக கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

மூளையின் சிறந்த செயல்பாட்டுக்கு இந்த புதிர்விளையாட்டு உதவுகிறது.

ஜிக்சா புதிரில் ஈடுபடும்போது மூளையின் இடதுபுறப் பகுதி பகுப்பாய்வு செய்கிறது, வலதுபுறப் பகுதி படைப்பாற்றலைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் மூளையின் செல்கள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன.

வடிவங்கள், அளவுகள், துண்டுகளை வைத்து நீங்கள் பொருத்தும்போது மூளை செல்களின் இணைப்புப் பகுதிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கிறது.

பொதுவாகவே ஒரு சிக்கலை தீர்க்கவும் ஒரு கேள்வியை எதிர்கொள்வதற்கும் உங்களைத் தயார்படுத்துகிறது. புதிர்களை தீர்க்க நாம் வெவ்வேறு அணுகு
முறைகளை அணுகுவதுபோல நம் தனிப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கவும் வழிகாட்டுகிறது.

புதிரில் பயன்படுத்தப்படும் படங்கள், காட்சிகள் மூலமாக இடஞ்சார்ந்த அறிவும் மேம்படுகிறது.

இவை அனைத்தையும் தாண்டி நம் மனநிலையை மேம்படுத்த இது ஒரு சிறந்த வழி. மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளைத் தேடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அதற்கு பொருத்தமான தீர்வு இது. உண்மையில் நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது ஒரு புதிருக்கு விடை கண்டுபிடிக்க முயற்சியுங்கள். மாற்றத்தை எளிதாக உணர முடியும்.

குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்க இந்த புதிர்விளையாட்டு
உதவுகிறது.

நாள் ஒன்றுக்கு அரை மணி நேரம் புதிர்விளையாட்டில் குழந்தைகள் ஈடுபட்டால் அவர்களுடைய ஐ.க்யூ எனும் நுண்ணறிவுத் திறன் அதிகரிக்கும் என்பது பல்வேறு ஆய்வின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே நவீன கால பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகளை அபாகஸ் வகுப்புகளில் சேர்ப்பதும் அதிகரித்து வருகிறது.

அனைத்துத் துறைகளிலும் கணிதம் பரவியுள்ளதால் மாணவர்களுக்கு கணிதத்தில் ஈடுபாடு இருப்பது அவசியம். அப்படியான ஒரு ஈடுபாட்டை பெற்றோர்கள் உருவாக்கித் தர வேண்டும். கரோனா பொதுமுடக்க காலத்தில் வீட்டிலேயே முடங்கியுள்ள மாணவர்களுக்கு வித்தியாசமான அறிவுப் புதிர் விளையாட்டுகளைப் பெற்றோர் அறிமுகப்படுத்தலாம்.

இது மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதுடன் மனநிலையை ஒழுங்குபடுத்துகிறது. எதிர்காலத்தில் போட்டித்தேர்வுகளுக்கும் கைகொடுக்கும்.

பொதுவாக நாம் அனைவருமே மூளைக்கு ஒரு சிறந்த பணியை கொடுக்கவேண்டும் என்று நினைத்தால் புதிர் விளையாட்டை விட சிறந்தது எதுவும் இருக்க முடியாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com